திங்கள். ஜூலை 28th, 2025

Views: 56

உடல் உஷ்ணம் என்பது நம் உடலில் உள்ள தசைகள் சுருங்கி விரியும்போது நம் உடலுக்குள் நடக்கும் வேதியியல் மாற்றங்களால் ஏற்படக்கூடியது. உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்வதன் வழியே நோய்களிலிருந்து தப்பிக்கலாம். பனிக்காலம் மற்றும் மழைக் காலங்களில் உடலின் வெப்பநிலை குறைந்து காணப்படும். வெயில் காலத்தில் உடல் உஷ்ணம் எளிதில் அதிகரிக்கும். இவ்வாறு உடலில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப உணவிலும் நாம் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் நோயில்லாமல் வாழ முடியும்.

நாம் உண்ணும் உணவு சூடாகவோ குளிர்ச்சியாகவோ இருப்பதைப் பொறுத்தே உடலின் வெப்பநிலையில் மாற்றங்கள் உண்டாகும். தட்பவெப்பநிலைக்கு மாறாக நாம் சாப்பிடும் உணவுப்பொருள்கள் உடலுக்குள் சென்று செரிமானமாகிச் சூட்டையோ குளிர்ச்சியையோ அதிகரிக்கச்செய்துவிடும். இவ்வாறு உணவுப்பொருள்களின் சுவையின் அடிப்படையில் நம் உடலின் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

பருவ காலங்களின் அடிப்படையில் என்னென்ன உணவுகளை உண்ணலாம் என்று பார்ப்போம்.

கார் காலம்: ஆவணி, புரட்டாசியில் வெப்பத்துடன் கூடிய மிதமான குளிர் இருக்கும். இந்தக் காலங்களில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்க வெல்லம் போன்ற இனிப்புப் பொருள்களையும், சரும வறட்சியைப் போக்க காரம், நெய் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள மிளகு ரசம், சுக்கு காபி பருகலாம். வெந்நீரில் தேன் கலந்து பருகுவதும் நல்லது. எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்பது நல்லது.

கூதிர் காலம்: ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழையுடன் கூடிய குளிர் இருக்கும். அந்தக் காலங்களில் மாப்பிள்ளைச் சம்பா சாதம், இனிப்புப் பொங்கல், பாசிப்பயறு, தேன், கத்தரிக்காய், பாகற்காய், கீரைகள் போன்றவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ளலாம்.

முன் மற்றும் பின்பனிக்காலம்: மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். குறைந்த நேரப் பகல் பொழுதும் நீண்ட இரவுப்பொழுதும் இருப்பதுபோன்ற உணர்வைக் கொடுக்கும். அதிகாலையிலேயே பசி உண்டாகும். எனவே, காலையில் இனிப்புப் பொங்கல், கோதுமை உணவுகள், அசைவ உணவுகளைச் சாப்பிடலாம். உடல் சூட்டை மிதமாக்க புளிப்பு மற்றும் உப்புச் சுவையுடைய உணவுகளை அதிகளவு சாப்பிடலாம்.

இளவேனில் மற்றும் முதுவேனிற்காலம்: சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் வெயில் அதிகமாக இருக்கும். இந்தக் காலங்களில் உடல் சூட்டைக் கிளப்பும் வகையில் கார உணவுகளையும் அசைவ உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. கசப்பான உணவுகள், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவு சாப்பிட வேண்டும்.

சுவையின் அடிப்படையில் அறுசுவைகளில் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய மூன்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும். புளிப்பு, உப்பு, கார்ப்பு (காரம்) ஆகியவை உடல் சூட்டை அதிகரிக்கும். இவற்றில் ஒவ்வோர் உணவுப்பொருளுக்கும் ஒவ்வொரு விதமான சுவை உண்டு.

-சித்த மருத்துவர் சுவாமிநாதன்

படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வாழ்க வளமுடன்!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

8 − 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.