Views: 124
உலகத் தொலைக்காட்சி தினம் ( WORLD TELEVISION DAY ) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவம் இந்தத் தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது.1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது.
தெரு முனைகளிலும், வீட்டு முற்றத்திலும் கூடி பேசியவர்களை வீட்டிற்குள் அமரவைத்தது தொலைக்காட்சி தொடர்கள். திரையரங்களுக்கு சென்று படங்கள் பார்ப்பது குறைந்தது. தொலைக்காட்சித் தொடர்களை பலர் விரும்பி பார்த்ததால் அதன் ஊடே விளம்பரம் செய்வது பலன் தரும் என்று கருதினர் விளம்பரதாரர்கள். மக்கள், திரைப்படத்தின் இன்னொரு வடிவமாகத் தொலைக்காட்சியை இப்போது கருதுகிறார்கள்.
1920 ஆம் ஆண்டு ஜோன் லொகி பெயாட் தொலைக்காட்சயை கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை பல தொழிநுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுத்து தொலைக்காட்சி பல பரிமாணங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுவருகிறது. அதன் காரணமாக காலத்திற்கு காலம் மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த சாதனமாக விளங்கும் தொலைக்காட்சி உலகையே ஆட்சி செய்யும் தொலைத்தொடர்பு சாதனமாக உருவெடுத்துள்ளது.
தொலைக்காட்சியின் தாக்கம் அறிந்து, மக்களை கவர இலவச வண்ண தொலைகாட்சி என்ற அறிவிப்பும் அரசியல் களத்தில் காணும் அளவுக்கு, தொலைக்காட்சி பரிமாணம் மாறியது. வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியால் தொலைகாட்சியிலும் ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நவீன காலத்தில் சாம்சங்,எல்.ஜி, பேனசோனிக் ஆகியவை மிக பெரிய அளவு திரை கொண்ட தொலைக்காட்சிகளை உருவாக்கி வைத்துள்ளன.
தற்போது மனித உணர்வுகளை நேரடியாகவும் அவர்களின் நிலைமையை விளக்கிக்கூறும் பலம்மிக்க சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. இதனால் உலக தொலைக்காட்சி தினத்தை அனுஷ்டிப்பதில் யுனெஸ்கோ அமைப்பு முன்னிலை வகிக்கின்றது. கருத்து சுதந்திரத்தை மேம்படுத்தல், ஆற்றல்களை வெளிப்பாடு மற்றும் சிறந்த காணொளிகள் என்பது யுனெஸ்கோ திட்டங்களுக்கு அவசியம் என்பதால் தொலைக்காட்சி தினம் யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டது.
அதே போல் தற்போது பிளாஸ்மா தொலைக்காட்சி, உள்ளங்கை திரை செல்லிடை தொலைக்காட்சி என பல ரகங்கள் வந்துவிட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வசதிகளை கொண்டுள்ளன. முதலில்; ஆண்டெனா மூலம் டிவி. பிறகு கேபிள் டிவி, பிறகு டிஷ் ஆண்டனா, பின்டிடிஎச் என தொழில் நுட்ப முன்னேற்றத்தால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு, தற்போது கைபேசியிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடிகிறது.