Views: 445
உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1931 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் வனவிலங்குகள் தினம் முதன்முதலாக கொண்டாடபட்டது, பின் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்ற நூற்றாண்டில் 40,000 புலிகள் வாழ்ந்துள்ளன. தற்போது 1,750 புலிகள் மட்டுமே வாழ்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. வன விலங்குகள் ஒரு நாட்டின் விலை மதிப்பற்ற செல்வம். உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே, டைனோசர் முதல் பல்வகை அரிய வனவிலங்குகள் காடுகளை ஆட்சி செய்து வந்துள்ளன. படிப்படியாக மனித இனம் உலகில் அதிகரித்ததால், காடுகளில் சுதந்திரமாக நடமாடிய வனவிலங்குகள், பறவை இனங்களுக்கு ஆபத்து ஏற்பட ஆரம்பித்தது.
கடந்த 4 நூற்றாண்டுகளில் 36 வகையான பாலூட்டிகள் அழிக்கப்பட்டுவிட்டன. கடந்த இரு நூற்றாண்டுகளில் மட்டும் 300 வகை பறவைகள் அழிக்கப்பட்டு விட்டன. அதேகாலத்தில் 94 வகை பறவைகளும் அழிந்துவிட்டன. வனவிலங்குகள் காப்பாற்றப்பட வேண்டும் என அறிந்தவர்கள் 100 பேருக்கு 2 பேர் மட்டுமே. இது வருத்தம் தரக்கூடிய விஷயமாகும். வனவிலங்குகளை பாதுகாக்க காப்புக் காடுகள் வன உயிரின சரணாலயங்களாகவும், தேசிய பூங்காக்களாகவும் மற்றும் புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்படுகிறது.
காடுகள் அழிந்துவிட்டால் மனிதர்கள் வாழ முடியாது. பெருகிவரும் மக்கள் தொகை, கால்நடைகளை வேட்டையாடுதல் மற்றும் சுற்றுலாவும் ஒருவகையில் வனவிலங்குகள் அழிவுக்கு காரணமாகும். வனவிலங்குகள் அதிகமாக வாழும் வனப்பகுதிகளில் சுற்றுலாவை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2012-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்துள்ளது..
விலங்குகளை பாதுகாப்பது மற்றும் அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வினை உலக மக்களிடையே ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.