திங்கள். ஜூலை 28th, 2025

Views: 48

தமிழ்நாட்டில் பிரபலமான காய்கறி வகைகளுள் ஒன்று.கல்யாண விருந்து என்றாலே புடலங்காய் கூட்டு இல்லாத பந்தி விருந்தை பார்க்க முடியாது. புடலங்காயில் பல வகைகள் உள்ளது. குட்டைப் புடலங்காய், வெள்ளைப் புடலங்காய், ஹைப்ரிட் புடலங்காய் என பல வகையில் மார்க்கெட்டில் விற்கின்றனர். புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில், நிச்சயம் சமைக்கப்படும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள், தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காயை நம் முன்னோர்கள் காலந்தொட்டு, நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயன் அறிந்துதான், சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர்.

100 கிராம் புடலங்காயில் உள்ள சத்துகள்
ஆற்றல் – 86.2 கிலோ கலோரி
கொழுப்பு – 3.9 கிராம்
சோடியம் – 33 மி.கி
பொட்டாசியம் – 359.1 மி.கி
நார்ச்சத்து – 0.6 கிராம்
புரதம் – 2 கிராம்
விட்டமின் ஏ 9.8 %
விட்டமின் பி6 – 11.3 %
விட்டமின் சி – 30.6%
கால்சியம் – 5.1 %
இரும்புச்சத்து – 5.7%

உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து ஆகியவை. இது சற்று நீரோட்டமுள்ள காய் என்பதால், இது சூட்டு உடம்புக்கும் ஏற்றதாகும். உடம்பின் அழலையைப் போக்கும். தேகம் தழைக்கும். எளிதில் சீரணமாகி, நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த, கபங்களால் ஏற்படும் திரிதோசத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றைப் போக்கும். வாத, பித்தங்களை அடக்கி வீரிய வலிமையைக் கொடுக்கவல்லது. புடலங்காயில் நன்கு முற்றியதை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயை பயன்படுத்த வேண்டும். மேலும், புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.

இந்த காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்பாடுகள் சிலவற்றை பார்க்கலாம்.

  1. ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக புடலங்காய் இருக்கிறது. காமத்தன்மையை பெருக்கும் வல்லமையும், புடலங்காய்க்கு உண்டு.

2.தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், தேகம் பருமன் அடையும்.

  1. புடலங்காய் அஜீரண தொல்லையை போக்குவதோடு, உணவை எளிதில் சீரணமாக்கி நல்ல பசியை உண்டாக்கும்.

  2. குடல் புண்ணை ஆற்றும் சக்தி இதற்கு உண்டு. வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.

  3. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.

  4. மூல நோய் உள்ளவர்களுக்கு, புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.

  5. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

8.பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதலையும், கருப்பைக் கோளாறையும் குணப்படுத்தும். கண்பார்வையை அதிகரிக்க செய்யும்.

  1. இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதனால், உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு.

  2. பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களையும் போக்கும்.

  3. இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர இதயம் சம்பந்த பட்ட கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

  4. புடலையின் வேர்ப்பகுதியானது மலமிளக்கியாகவும் புடலை இலையானது குடல் தொடர்பான பிரச்னைகளை சரி செய்யவும் பயன்படுகிறது.

புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு

தேவையானவை

புடலங்காய் – 2 கப்
கடலைப்பருப்பு – அரை கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
வெங்காயம் – ஒன்று
காய்ந்த மிளகாய் -2
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் – ஒன்றரை மேசைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

புடலங்காயை இரண்டாக நறுக்கி உள்ளே சுத்தம் செய்து நன்றாக கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, காய்ந்த மிளகாயை சேர்த்து தட்டி வைக்கவும். கடலைப்பருப்பை முக்கால் பதம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். (சுண்டல் பதத்திற்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்). வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தட்டிய பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு அதில் புடலங்காயை போட்டு வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் முக்கால் பதம் வெந்த கடலைப்பருப்பையும் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி இறக்கவும். சுவையான புடலை கடலைப்பருப்பு கூட்டு தயார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

20 + four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.