ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 256

இன்று உலக இசை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. நாடு, மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. “இசையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது மற்றும் அமைதியாகவும் இருந்திட முடியாது’ என இசை குறித்து மறைந்த பிரெஞ்ச் கவிஞர் விக்டர் ஹியூகோ குறிப்பிட்டுள்ளார். இசை இல்லாமல் வாழ முடியாது. இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை.

இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலனவர்களின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. இசையில் வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

இசைக்கும் மனதுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நன்கு புரிந்து கொண்டதால் தான் ஆதிகாலத்திலிருந்தே இசையை ஒரு மருத்துவ முறையாக மக்கள் பின்பற்றி வந்தார்கள். ஆனால் நவீன விஞ்ஞானத்தின் அறிவும் ஆராய்ச்சியும் அதை ஏற்கத் தயக்கம் காட்டி வந்தன.

இசையை விரும்பாத மனிதன் இருக்க முடியாது. சிலர் டென்ஷன் ஆனால் இசையைக் கேட்டு சாந்தமாவார்கள். சிலர் கவலையாக இருந்தால் தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பார்கள். இப்படி இன்பம், துன்பம் என்று அனைத்து தருணங்களிலும் மனித வாழ்வில் இசை என்பது பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இசை சிறந்த தோழன், வலி நிவாரணி, அழகான உணர்வு, தனிமையை விரட்டும் கருவி என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. கவலையை பிறரிடம் பகிர்ந்து கொண்டால் அது குறையும் என்றும், அதே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது அதிகரிக்கும் என்றும் கூறுவார்கள். அப்படி தான் இசையும். நீங்கள் கவலையாக இருக்கையில் உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டால் கவலை குறையும். அதே சமயம் மகிழ்ச்சியாக இருக்கையில் இசையைக் கேட்டால் அது அதிகரிக்கும்.

இசைகள் பலவிதம்

பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என இசையின் பரிமாணம் உருவாகியது. உலகில் ஒவவொரு நாடும் தனது கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு பல வகையான இசைகளை இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் தான் பின்பற்றப்படுகிறது. ஒன்று வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடாக இசை.இசை என்பது பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டு சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது.

இசை மருத்துவம்

இசைச்சிகிச்சை (music therapy) எனப்படும் புதிய மருத்துவப் பிரிவு பல பரிமாணங்களில் உருவாகிக் கொண்டிருககிறது. இரவில் படுக்கைக்குச் செல்லும் போது மெல்லிய நிதானமான இசை ஒருவரை அமைதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு கொண்டு செல்வதுடன் அவருடைய ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன இசை அலைகள் நரம்பியல் மருத்துவர்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் மூளையின் கூறுகளை இசை சமப்படுத்துவதோடு மூளையின் அலைகளின் லயத்தையும் மாற்றியமைக்க வல்லது என உறுதிப்படுத்துகிறார்கள்.

மூளையின் மின் அலைகளை அவற்றின் வேகத்திற்கேற்ப நான்கு வகையாக வகுத்திருக்கிறார்கள். நாம் சுறுசுறுப்பாக வேலை செய்கின்ற நிலை. (பீற்றா அலைகள்) உயர்ந்த அறிவுநிலையும் அமைதியும் காக்கும் நிலை. (அல்ஃபா அலைகள்) தியான நிலையம் படைப்பாற்றலையும் உறக்கத்தையும் தூண்டும் நிலை ( தீற்றா அலைகள்) ஆழ்ந்த தியான நிலை ஆழ்ந்த உறக்கம் மற்றும் சமாதி நிலை. (டெல்டா அலைகள்) மூளையின் மின்னலைகளை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றும் சக்தி இசைக்கு உள்ளது என்பது தான் ஆராய்ச்சிகளின் முடிவு.

உடலின் அதிர்வுகளை கடத்தக் கூடிய நரம்பு மண்டலத்தை சீர்படுத்துவதில் இசை பெரும் பங்கு வகிக்கிறது. மெலடோனின் என்பது மூளையில் சுரக்கும் ஒரு வேதிப்பொருள். நல்ல இசையைக் கேட்கும்போது மெலடோனின் அதிக அளவில் சுரப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், கோபம், எளிதில் உணர்ச்சி வயப்படுதல் போன்ற பல நிலைகளைக் கட்டுப்படுத்தும் சக்தி இந்த மெலடோனுக்கு உண்டு.

ஆல்சீமர் நோய் எனப்படும் அறிவுத்திறன் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மொசார்ட்டின் பியானோ இசை ஒலி நாடாக்களை தினசரி ஒரு மணிநேரம் கேட்க வைத்தனர். பின்னர் நோயாளிகளின் அறிவுத்திறன், நினைவாற்றல் ஆகியவற்றை பரிசோதித்தபோது 25 முதல் 50 சதவீதம் வரை அதிக மதிப்பெண் பெறுவது கண்டறியப்பட்டது.

மத்தளம், டிரம்ஸ் போன்ற தோல் கருவிகள் மனக்கிளர்ச்சியை அதிகப்படுத்தி தசைநார்களை தளரச் செய்கிறது. போர்க்களங்களிலும், தீமிதி சடங்குகளிலும், அலகு குத்திக் கொள்ளும் போதும் கொட்டுவாத்தியங்கள், தாரை, தம்பட்டை போன்ற தோல் கருவிகளைப் பயன்படுத்துவதால் மனக்கிளர்ச்சி ஏற்பட்டு உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு புதிய வேகம் உண்டாகிறது.

ஒற்றைத் தலைவலிக்கு வயலின் ஒரு சிறந்த மாமருந்தாக பயன்படுகிறது என்பது பலரும் அறியாத உண்மையாகும். நமது நாட்டில் கூட அமிர்தவர்சினி ராகத்தை இசைத்தால் மழை வரும் என்பது நம் முன்னோர்களின் நீண்ட கால நம்பிக்கையாக உள்ளது.

ரத்த அழுத்தத்திற்கு `நீலாம்பரி`, மன அழுத்தத்திற்கு `லதாங்கி`, சர்வரோக நிவாரணியாக `ஸ்வேதம்பரி` இரவு தூங்க முடியாமல் எதேனும் வயிறு கோளாறு ஏற்பட்டு கைவசம் “antacid” ஏதும் இல்லாத பட்சத்தில் ஹிந்தோள ராக பாடலை பாடுங்கள்.

கல்யாணி, ஹம்சவத்னி இராகங்களில் அமைந்த இசையை அல்லது மொஸார்டின் ஒரு சொனாட்டா அல்லது கொன்சர்டோ இசையை ஒலிக்கவிடுவதன் மூலம் சீரான மன ஓட்டமின்றி மனதை அலைய விட்டுக் கொண்டிருக்கும் ஒரு நபருடைய மனமானது களேபரம் அடங்கி சாந்தமடைவதற்கு அல்லது சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு அடைவதற்கு ஏதுவாகிறது என அவதானிக்கப்பட்டுள்ளது.

இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். கலாச்சாரத்தை சீரழிக்கும் இசை உருவாவதை துவக்கத்திலேயே தடுக்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சமாகவும் அதே நேரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் ஏற்ற வகையிலும் இசை இருக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

six + 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.