Views: 115
இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தவும், உயிர்களை காப்பாற்ற எங்கும் எப்போது ரத்தம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் ஜூன் 14 ஆம் தேதி சர்வதேச குறுதி கொடையாளர் தினம் (World Blood Donor Day, June 14 ) கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த விஷயத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதாவது, தானாக முன் வந்து ரத்ததானம் வழங்குவதில். உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது. ரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் ரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை.
சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 – 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் ரத்த தானம் செய்ய முடியும். இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.