Views: 90
உலக செஞ்சிலுவை – செம்பிறை தினத்தின் பிரதான கருப்பொருள் யுத்தங்களினாலும் அனர்த்தங்களினாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி உதவி செய்வதும் முரண்பாடுகள் மிக்க தரப்பினரிடையே நடுநிலை வகித்து சமாதானத்திற்கு உதவுவதுமாகும். இச்சங்கத்தின் ஸ்தாபகரான ஜீன் ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்த தினமான மே மாதம் 8ம் தேதி அம்மனிதாபிமான மிக்க மனிதப் புனிதரைக் கெளரவிக்க இத்தினத்தை உலக செஞ்சிலுவைச் சங்கத் தினமாக உலகத்தோர் அனுஷ்டிக்கின்றனர்.
உலக செஞ்சிலுவை தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 8-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1934ம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தினரின் 15வது அனைத்துலக மாநாட்டில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் 1948 ஆம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரான டியூனண்ட் அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. முதலில் இந்நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984ல் இருந்து இந்நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்படுகிறது. இது ஒரு ஆண்டு நிகழ்வு. “உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கத்தின்” கொள்கைகள் இதன் மூலம் கொண்டாடப்படுகின்றன. தேவையில் இருக்கும் மக்களுக்கு ஒப்பற்ற சேவைகளைச் செய்த தொண்டர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக ஓவ்வொரு ஆண்டும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
மனிதகுலத் துன்பங்களைக் குறைக்கவும் ஓர் அமைதியான சூழலை உருவாக்கவும் செஞ்சிலுவை சங்கம் எப்பொழுதும் அனைத்து முறையிலான மனிதாபிமான நடவடிக்கைகளையும் தூண்டி, ஊக்குவித்துத், தொடங்கி நடத்தி வருகிறது.
செஞ்சிலுவை சங்கத்தின் திட்டங்கள் நான்கு முக்கிய பகுதிகளாகத் தொகுக்கப்படுகின்றன: மனிதாபிமான கொள்கைகளையும் மதிப்புகளையும் ஊக்குவித்தல், பேரிடர்காலத் தொண்டு, பேரிடர்கால முன் ஆயத்தம் மற்றும் சமுதாய சுகாதாரமும் பராமரிப்பும்.
செஞ்சிலுவை சங்கத்தின் ஏழு கொள்கைகள்:
மனிதகுலம்: உயிரையும் ஆரோக்கியத்தையும் பாதுகாத்து மனிதகுலத்தின் மதிப்பை உறுதி செய்வதே முக்கிய நோக்கம்.
பாரபட்சமின்மை: தேசம், இனம், மதநம்பிக்கை, வகுப்பு அல்லது அரசியல் சார்பு ஆகியவற்றைப் பற்றிய எந்த பாரபட்சத்தையும் அது காட்டுவதில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் தேவைகள் மற்றும் மிகவும் துயரமான அவசரமான காலத்தின் அடிப்படையில் உதவி செய்வது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
நடுநிலைமை: அனைவரின் நம்பிக்கையையும் பெறுவதற்காக இந்த இயக்கம் அரசியல், இன, மத, கொள்கை முரண்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுவதில்லை.
சுதந்திரம்: இது ஒரு சுதந்திரமான இயக்கம். தங்களது கிளை அமைப்புகள் தங்கள் நாட்டின் அரசாங்கத்தின் சட்டங்களுக்குள் மனிதாபிமான சேவைகளைச் செய்து வரும்போது தேசிய சங்கங்கள் தங்கள் சுதந்திரத் தன்மையை எப்போதும் பேணி வர வேண்டும். இதனால் எந்தச் சூழ்நிலையிலும் இயக்கத்தின் கொள்கைகளுக்கு முரண்படாமல் செயலாற்ற முடியும்.
தன்னார்வத் தொண்டு: இது ஒரு தன்னார்வத் தொண்டு இயக்கம். ஆசைகளாலும் இலாபங்களாலும் தூண்டப்பட்டது அல்ல.
ஒற்றுமை: தான் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் செஞ்சிலுவை சங்கம் தனது மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உலகளாவியது: அனைத்துச் சங்கங்களும் தங்களுக்குள் துணைநிற்க உலக செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை இயக்கத்தில் உலகளாவிய நிலையில் சம தகுதியும் பங்கும் பொறுப்பும் கடமையும் கொண்டவை.