வி. மே 22nd, 2025

Views: 22

புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மக்கள் மத்தியில் வளர்க்கும் வகையில் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. நூல்கள் படித்து பாதுகாக்கப்பட வேண்டிய காலப்பெட்டகம். இது காகிதங்களில் அச்சடிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தொகுப்பு அல்ல. கடந்த கால வரலாற்றை, இன்றைய நிகழ்வுகளை, செய்திகளை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு சேர்க்க எழுத்தின் வழி பதிவு செய்யப்பட்ட ஆவணமே நூல்கள்.பாரீஸ் நகரில் 1995-ம் ஆண்டு ஆகஸ்டு 25 முதல் நவம்பர் 16-ந்தேதி வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ‘‘அறிவை பரப்புவதற்கும் உலகமெங்கும் உள்ள பல்வேறு கலாசாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் பிறந்த தினமான ஏப்ரல் 23 அன்று புத்தக தினம் கொண்டாடுவதை பொருத்தமான ஒரு விஷயமாக யுனெஸ்கோ மாநாடு கருதியது. புத்தகம் வெறும் எழுத்துகளையோ, வெற்றுத் தாள்களின் தொகுப்புகளையோ கொண்டது அல்ல. ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணக்கனவு, லட்சியங்களை கொண்டிருக்கிறது.

அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெறுதல், தத்தமது தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்தகங்களுக்கும், வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க முடியும். மேற்கூறிய 10 கட்டளைகளையும் நிறைவேற்ற உறுதி ஏற்கும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

விதைக்குள் விருட்சம் போல் ஒரு சமூகத்தின் எழுச்சிக்கான கருத்துகளை சில புத்தகங்கள் தன்னுள் கொண்டிருக்கின்றன. அதனால் தான் ஆட்சி அதிகாரத்தையே உலுக்கி விடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு என்கிறார் கார்லைஸ் எனும் அறிஞர். ‘‘துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள்’’ என்று கூறி இருக்கிறார் மார்ட்டின் லூதர்கிங்.

சட்டமேதை அம்பேத்கர் ஒருமுறை வெளிநாடு சென்றிருந்த போது, ‘‘எங்கு தங்க விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘‘எந்த இடம் நூலகத்திற்கு அருகில் இருக்கிறது?’’ என கேட்டு இருக்கிறார்.

நவ இந்தியாவின் சிற்பி ஜவகர்லால் நேருவிடம், ‘‘உங்களை ஒரு தனி தீவுக்கு நாடு கடத்தினால் என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டதற்கு ‘‘புத்தகங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பேன்’’ என்று பதில் அளித்தார்.

குழந்தைகளுக்கு பிறந்தநாளின் போதும், விழாக்களின் போதும் எண்ணற்ற பரிசுகளை வாங்கி தருகிறோம். ‘‘குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கி தர வேண்டிய மிகச்சிறந்த பரிசு புத்தகங்களே’’ என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.

பூத்த மலரில் தான் நறுமணம் வீசும். ஓடுகின்ற நீரோடை தான் சுத்தமாக இருக்கும் எரிகின்ற விளக்கால் தான் இன்னொரு விளக்கை ஏற்ற முடியும்.

அறிவை விரிவு செய். அகண்டமாக்கு என்பது பாரதிதாசனின் வெறும் கவிதை வரிகள் அல்ல. வேத வாக்கு. வாசிப்பை நேசிப்போம். சுமையாக கருதாமல் சுவாசத்தை போல் இயல்பானதாய் ஆக்குவோம் அறிவை ஆயுதமாக மாற்றுவோம். தெருவெங்கும் நூலகம். வீடுதோறும் புத்தகம். இதுவே நமது லட்சியம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

four × 3 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.