சனி. மே 24th, 2025

Views: 120

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். சித்திரை பிறப்பு என்ற தமிழ் வருட பிறப்பு14-ஏப்ரல் அன்று வருகிறது. 
தமிழ் மாதங்களில் முதலாமவள் என்ற சிறப்பை பெற்றவள் சித்திரைத் தாய். சித்திரை திங்கள் பிறப்பை ஒட்டியே நாட்டின் மற்ற மாநிலங்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களும் அமைகின்றன. வட இந்தியாவில் பைசாகி என்றும், கேரளாவில் விஷு என்றும், ஆந்திராவில் யுகாதி என்றும் புத்தாண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு உள்ள ஆரவார வரவேற்பு சித்திரை பிறப்புக்கு இல்லை என்று ஒரு சாரார் கூறினாலும், அவறை பொய்ப்பிக்கும் வகையில் தமிழர்கள் இப்பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

சித்திரையில் செய்வது என்ன?

சித்திரை திங்கள் புலருவதற்கு முதல் இரவு வீட்டில் நிலைக் கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்- காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவர்.

காலையில் துயில் நீங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பர்.

இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.

சித்திரை முதல் நாளன்று வீடுகளை சாணத்தால் மெழுகி, செம்மண் மற்றும் மாக்கோலமிட்டு வாயிற்படிகளுக்கு மஞ்சள்- குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி சித்திரைத் தாயை வரவேற்க்க  மக்கள்தயாராகின்றனர்.

அன்று காலையில் மருத்துநீரில் நீராடவேண்டும். இந்த மருத்து நீரானது தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி, சுக்கு போன்றவற்றைச் சேர்த்து காய்ச்சப்படும்.மருத்துநீரை தலையில் தேய்த்து நீராடினால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை. சித்திரை பிறப்பதற்கு முதல் நாள் அருகில் இருக்கும் கோயில்களில் மருத்து நீரானது கிடைக்கும். இது  மருந்து நீர் என்றும் அழைக்கப்படுகிறது.

பூஜை அறைகளை அலங்கரித்து விளக்கேற்றி, முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும், புது வருடப் பஞ்சாங்கம் வாங்கி பெரியோர் வாயால் பஞ்சாங்கப் பலனை கேட்பதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்காக உள்ளது.

மதிய உணவில் அறுசுவையும் சேர்த்துகொள்ள வேண்டும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளைக் குறிக்கும் சர்க்கரை பொங்கல், மாங்காய் பச்சடி, வேப்பம்பூ ரசம், நீர்மோர், வாழைப்பூ வடை, காரக் குழம்பு ஆகியவற்றைச் செய்து உண்ணவேண்டும்.

இன்பம், துன்பம், மகிழ்ச்சி, கவலை, வியப்பு என்று பலதரப்பட்ட அனுபவங்கள் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துவதுபோல் அன்று நாம் உண்ணும் உணவு பல சுவைகளில் இருக்கும்.

சித்திரை மாதம் முதல் நாள் கை விசேடம், கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதே இப்படிச் சொல்லப்படுகிறது. அதற்கென்று ஒரு நேரம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் தாத்தா, அப்பா என்று வீட்டுப் பெரியவர்களின் காலில் அனைவரும் விழுந்து ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.அடுத்த சித்திரை பிறப்பு வரை கூட சிலர்  வைத்திருப்பர்.

என் நினைவில் சித்திரை விஷு

சித்திரை முக்கனிகளும் வரும் காலம். அதனால் கண்ணாடி முன் வைக்கும் கனி வகைகளில் மா, பலா, வாழை முதன்மை வகிக்கும். சாமி அறையில் அல்லது நடுகூடத்தில் ஓர் இடத்தில் முதல் நாள் இரவே

சுத்தம் செய்து கோலம் போட்டு, அதன் நடுவில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைக்க வேண்டும்.

அதன் சட்டத்தில் சந்தானம், குங்கும போட்டு வைக்க வேண்டும். அதன் முன் ஒரு தாம்பாளத்தில் முக்கனிகள் , வேறு பழங்கள்.

வெற்றிலை, பாக்கு, [வெட்டு பாக்கு] மஞ்சள் கொம்பு வைக்க வேண்டும்.

அதன் மேல் பூ,  எலுமிச்சை பழம் வைக்க வேண்டும். இனித்தான் முக்கிய பொருட்களே வருகிறது.

பணம், தங்க நகை, தங்க காசு, நாணயங்கள் எனஅவரவர் சக்திக்கு ஏற்றார் போல் வைக்கலாம்.ஒரு படி நிறைய அரிசி வைக்க வேண்டும்.

அந்த வருடத்திற்கு உரிய புது பஞ்சாங்கம் வாங்கி அதற்கும் மஞ்சள், குங்குமம் போட்டு வைத்து வைக்க வேண்டும்

ஒரு விளக்கைமஞ்சள், குங்கும பொட்டு இட்டு எண்ணை ஊற்றி,திரி போட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும்.

அதிகாலையில் பாட்டியோ, அம்மாவோ எழுந்து விளக்கு ஏற்றி

‘நாடும், வீடும் எல்லா நலன்களையும் பெற்று, அந்த வருடம் நல்ல வருடமாய் அமைய வேண்டும்’என  முதலில் சாமி கும்பிடுவார்கள்.பின் வீட்டில் உள்ளவர்களை எழுப்புவார்கள். கண்ணை மூடிக் கொண்டே சென்று கண்ணாடியில் தான் விழிக்க வேண்டும்.

தொலைக்காட்சி முன் இருக்கும் இந்த நவீன வாழ்க்கையில் பண்டிகைகளே அரிதாகி வரும் போது நினைவுகள் மட்டுமே இருக்கிறது. நம் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்வது மட்டுமே நம்மால் முடியும் தொடர்வது அவர்கள் கையில்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

two × four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.