ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 72

உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.மார்ச் 22-ம் தேதியான இன்று ‘உலக தண்ணீர்தினம்‘. 1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47வது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது. நீர்நிலைகளைக் காப்பதும், நீர்வளத்தைப் பெருக்குவதும்தான் உலக தண்ணீர் தினத்தின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக பூமியில் நிலப்பரப்பானது வெறும் 30 சதவிகிதம் மட்டும்தான். மீதம் இருக்கும் 70 சதவிகிதம் நீர்ப்பரப்பாகத்தான் உள்ளது. 70 சதவிகிதம் நீர்ப்பரப்பு இருந்தாலும் அதில் 97.5 சதவிகிதம் உப்பு நீர்ப்பரப்புதான் இருக்கிறது. இதில் நிலத்தடிநீர் வெறும் 2.5 சதவிகிதம்தான். அதில் பனிப்பாறைகளாகவும் பனித்தரைகளாகவும் உள்ளது போக மீத நன்னீர்ப் பரப்பு 0.26 சதவிகிதம்தான். இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

30 சதவிகிதம் நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கு 0.26  சதவிகிதம் நீர்தான் உயிராதாரம். இந்த நீரைத்தான் மனிதனின் தேவைகளுக்கும், விவசாயம் என பல வழிகளில் நாம் பயன்படுத்திக்கொள்கிறோம். கூடுதல் தண்ணீர்த் தேவைக்கு மழையையும் ஆறுகளையும் ஏரிகளையும்தான் நம்பி இருக்கிறோம். இன்று ஒருநாள் மட்டும் நீரைப்பற்றிப் பேசிவிட்டு மீதமுள்ள நாட்களில் அதனைப் பற்றி மறந்துவிடுகிறோம். தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் கடந்த 2016-ம் ஆண்டு வடகிழக்குப் பருவக்காற்றும், தென்மேற்குப் பருவக்காற்றும் ஏமாற்றிப்போனது. ஆனால் அதற்கு முந்தைய 2015-ம் ஆண்டில் பெய்தமழையை வரலாறு காணாத மழை என அறிஞர்கள் வர்ணித்தனர். ஆனால் பெய்த மழைநீரை முழுவதுமாகத் தேக்கி வைக்க முடியாமல் போனாலும், பாதியளவுகூட அப்போது தேக்கி வைக்கவில்லை என்பதே உண்மை.  அன்று தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளில் சரிபாதி நீர்நிலைகளை அழித்துக் கட்டப்பட்டது என்பதை அந்த மழை உணர்த்தியது.

நீர் உயிரின் ஆதாரம். உயிர்களனைத்துக்கும் அதுவே ஜீவாதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகிலும் உயிருள்ள ஜீவன்கள் இருக்கமாட்டாது. உணவு இல்லை என்றால் அதனை உற்பத்தி செய்து கொள்ளலாம். உடை இல்லை என்றாலும் அதனையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால் நீர் இல்லாது போய்விட்டால் அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது.

இன்று நகரமையமாக்கல் என்ற பெயரில் நீர்நிலைகளை அழித்துக் குடியேறியதன் விளைவுதான் இன்றைய குடிநீர்ப்பஞ்சம். முன்னரெல்லாம் கோடைக்காலங்களில் வீட்டுக்கு வெளியே ஒரு பாத்திரத்திலோ அல்லது பானையிலோ தண்ணீர் வைக்கப்படும். அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள் பானையில் உள்ள நீரை அருந்தி தனது தாகத்தைத் தணித்துக்கொள்வர். காமராஜருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் நீர்த்தேக்கங்கள் கட்டப்படவில்லை என்பதே நாம் தண்ணீர் மேலாண்மையில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. கிராமப்புறங்களில் வாழும் இந்தியர்களில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது என்று வாட்டர் எய்டு (WaterAid) அறிக்கை கூறுகிறது.

உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 செக்கன்ட்களுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 லட்சம் குழந்தைகள் சாவதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது. நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை. நீர்ப் பற்றாக்குறையும், புவி வெப்பமயமாதலும் மனித குலம் இன்று எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கும் பேராபத்துக்களாகும்.

இந்த ‘உலக தண்ணீர் தினம்’ என்பது, கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் தண்ணீரைப் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது.  ‘தண்ணீர் ஒரு மனிதனின் வாழ்வாதாரம்’ என்பதை ஒவ்வொரு மனிதனும், அந்நாட்டு அரசும் புரிந்துகொள்ளும் வரையில் இதற்குத் தீர்வு கிடைக்காது. உலக நீர் தினம் நினைவு கூறப்பட்டால் மட்டும் போதாது. அதன் தாற்பரியம் பேணப்படல் வேண்டும். மனித வாழ்வோடும், சடங்கு சம்பிரதாயங்களோடும் பின்னிப் பிணைந்தது தண்ணீரின் வரலாறு. உலக முன்னேற்றத்துக்கேற்ப, சனத்தொகைப் பெருக்கத்துக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நீரின் தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. அதே வேளை தூய நீரின் எல்லை அருகி வருகிறது. நாம் நாமே நினைக்காத வரையில் நீர்ப்பற்றாக்குறை நீங்குவது சாத்தியமல்ல. நீரை வீணே விரயம் செய்வதும், எல்லை இன்றி பயன்படுத்துவதும், நீர்ப்பற்றாக்குறை நிதமும் நிலவவே வழி செய்யும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

5 × four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.