திங்கள். ஜூலை 28th, 2025

Views: 98

மார்ச் 21-ம் தேதியான இன்று உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. காடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது. காலநிலையை சீராக வைத்துக்கொள்வதில் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இது தவிர, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் முன்னொரு காலத்தில் காடுகள்தாம் புகலிடம். நாளடைவில் நாகரிகம் வளரத்தொடங்கியவுடன் மனிதன் காட்டை அழித்து நிலங்களைப் பிரித்துக்கொண்டான். ஆனால் இன்னும் காடுகள்  வன விலங்குகளுக்குப் புகலிடமாகவே விளங்குகிறது. அதேபோல மனிதன் வாழ்வதற்குத் தேவையான காற்றினைக் கொடுப்பதில் காடுகளின் பங்கு மிக அதிகம். இந்தக் காடுகள்தாம் மனித இனத்தின் வரம். மனிதன் வாழ இன்றியமையாத தண்ணீரை மழை மூலமாகவும், மண் அரிப்பினைத் தடுப்பது மூலமாகவும், பழங்களை உணவாகக் கொடுத்தும் மனிதனுக்குப் பல வழிகளில் காடுகள் உதவியாக இருந்துவருகின்றன. காடுகளில் ஊசி இலைக்காடுகள், சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என ஒவ்வொரு தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றாற்போல அமைந்துள்ளன. இந்தியாவின் மொத்தக் காடுகளின் பரப்பு 6 லட்சத்து 30 ஆயிரம் ச.கி.மீ. இந்தியாவில் ஆண்டுக்கு 0.6 சதவிகிதம் காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டுள்ளன. காடு என்பது வெறும் மரங்கள் மட்டுமல்ல அது ஓர் உயிரியல் சார்ந்த கட்டமைப்பு. வனவிலங்குகள் ஊருக்குள் வரத்தொடங்கிவிட்டன எனச் சொல்லும் முன்னர் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதனுடைய வனப்பகுதியை அழித்து, வாழ்வாதாரத்தை நிர்கதியாக்கிவிட்டால் விலங்குகள் ஊருக்குள் வராமல் என்ன செய்யும். அதேபோல காடுகளை அழித்துவிட்டு கட்டடங்களாக மாற்றிக்கொண்டால் விலங்குகள் எங்கே போகும். காடுகளிலிருந்த பறவைகளும்  எங்கே போகும். உயிர்ச்சூழலைக் காக்கும் முக்கியப் பொறுப்பு வகிப்பவை மரங்கள்தாம்.

உலகில் இன்றைய புவி வெப்ப உயர்வுக்குக் காரணம் வனங்கள் பெரும்பான்மையாக அழிக்கப்பட்டதுதான். அதிலும் இந்தியாவில் அழிக்கப்பட்ட வனப்பரப்புகள் ஏராளம். சாலையை அமைக்க மரங்களை வெட்டும் நிறுவனங்களிடம், புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் ஓரங்களில் மரங்களை வளர்க்கச் சொல்லி அரசு வற்புறுத்தவும் இல்லை, அவர்கள் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால் ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரங்கள் நடப்படவேண்டும் என்பது அரசு விதி. அப்போது சாலை அமைக்க வெட்டப்பட்ட மரங்களுக்கு யார் பதில் சொல்வது. இப்படி நிலப்பரப்பில் உள்ள மரங்களும், மலைப்பகுதிகளில் உள்ள மரங்களும் வெட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சில நிமிடங்களில் வெட்டப்படும் காடுகளை வளர்க்க குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும். காடுகள்தாம் இந்த உலகத்தின் உயிர் மூச்சு.

மனித இனம அதன் வரலாற்றில் சந்தித்துள்ள நெருக்கடியான பிரச்னைகளில் இது வரை சந்திக்காதது புவி வெப்பமடைதலால் ஏற்படும் பல்வேறு அழிவுகள். முக்கியமாக காடுகளை அழிப்பதை நிறுத்துவது மற்றும் புதிதாக அதிக மரங்களை வளர்ப்பது மூலம்தான் புவி வெப்பம் அடைதலை தடுக்க முடியும்.வனம் என்பது காட்டு விலங்குகளுக்கு உரியது. அங்குள்ள மரங்களை நாம் வெட்டி விடுவதால் மழை குறைந்துவிடுகிறது. இதனால், விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக நாட்டுக்குள் நுழைந்து விடுகின்றன.

நம் இந்தியாவில் சுமார் 24% காடுகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. சுமார் 2.2 கோடி பேர் வன நிர்வாகத்தில் பங்கேற்றுள்ளார்கள். சுமார் 100 தேசிய பூங்காக்கள், 515 வன விலங்கு சரணாயலங்கள் இருக்கின்றன. நாட்டில் நில பரப்பில் 35 சதவிகிதத்தை காடு வளர்ப்பு மற்றும் மர வளர்ப்பின் கீழ் கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. காடுகளை அவைகளின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அக்கறையுடன் வளர்க்கப்பட இருக்கிறது. தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் மழை பெய்வதில் காடுகள் மற்றும் மரங்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது.

இந்திய வனக் கணக்கெடுப்பு அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் உள்ள வனப் பரப்பளவை கணக்கெடுத்து அறிவிக்கும். கடந்த 2009-ம் ஆண்டு அறிக்கையின்படி நாட்டில் சுமார் 200 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு வனப் பரப்பு கூடியுள்ளது தெரிய வந்துள்ளது.

அதே போலவே 2011-ம் ஆண்டு அறிக்கையிலும் வனப் பரப்பு கூடியிருப்பது தெரிய வந்துள்ளது. அதன் விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும். தமிழகத்தில் 22,877 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காடுகள் உள்ளன. இது மொத்த நிலப் பரப்பில் 17.59 சதவீதம் ஆகும். சேலம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 5,205 சதுர கிலோ மீட்டரில் 1,254.3 சதுர கிலோ மீட்டர், அதாவது 24.09 சதவீதம் காடுகள் உள்ளன. இது மாநில சராசரியைக் காட்டிலும் அதிகம். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வனப் பரப்பு குறைந்துள்ள சூழலில், தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் காடுகள் பெருகியே வருகின்றன. வனத்தைப் பெருக்குவதில் தமிழகம் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக உள்ளது.

இருப்பினும் நிலப் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு அளவு காடுகள் இருக்க வேண்டும் என்பதால் 33 சதவீத வனப் பரப்பு என்ற இலக்கை எட்ட வேண்டியுள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்கள் மூலம் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

“வனத்தை பெருக்குவதிலும், பாதுகாப்பதிலும் அரசுக்கும், வனத்துறைக்கும், சுற்றுசூழல் துறைக்கும் மட்டும் பொறுப்பல்ல. அது அவர்களுடைய பணியே, மாறாக அது நம் ஒவ்வொருவருடைய கட்டாய கடமை.”

இனி வரும் காலங்களில் மனித இனத்துக்கும் விலங்குகளுக்கும் ஆணிவேராகப் பயன்படும் காடுகளை அழிவின் பிடியில் இருந்து காப்பது நம் அனைவரின் கடமை. புதிதாகக் காடுகள் வளர்ப்பதற்கு அரசும் போதிய முயற்சி எடுக்க வேண்டும். இந்திய வனக்கொள்கையின்படி நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது வெறும் 20% காடுகள்தாம் இந்தியாவில் காணப்படுகின்றன. ஆரோக்கியமான காற்று, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடுகளை நீக்குவதற்கு மரங்கள் மிக முக்கியம். உலக வெப்பமையமாதலைத் தடுக்கவும் மரங்கள் மிக முக்கியம். விலைமதிக்க முடியாத காடுகள் அழிக்கப்பட்டால் விலங்கினம், பறவையினம் எனப் பல்லுயிர்த்தன்மை அழியும். பல்லுயிர்த்தன்மை அழிந்தால் மனித இனம் எங்கே போகும்?

காடுகள் அழிவதில்லை. அழிக்கப்படுகின்றன. எங்கெல்லாம் காடுகளுக்கு எதிராக மனிதர்கள் செயல்படுகிறார்களோ, அங்கெல்லாம் நமது குறைந்தபட்ச எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். இது நாம் காடுகளுக்காக மட்டும் செய்வதில்லை. நமக்காகவே செய்துகொள்வதும்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

eight − 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.