Views: 154
சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும். இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும். இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும்.
மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதை அங்காரக சதுர்த்தி என்பார்கள்.
அங்காரகனான செவ்வாய், விநாயகரை பூஜித்ததன் மூலமே நவக்கிரக நாயகர்களில் ஒருவன் என்ற பதவியை பெற்றான். அதனால் தான் செய்வ்வாய்க்கிழமை சதுர்த்தி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. பிரதிமாதமும் பவுர்ணமிக்கு அடுத்த நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். சதுர்த்தி என்றாலே நான்காவது என்றுதான் பொருள். தேய்ப்பிறை நாளில் தேயும் பொழுதில் இருள் கவ்வும் மாலை நேரத்தில் வருவதே இந்த சங்கடஹர சதுர்த்தி.
விரதத்தின் பலன்கள்:
இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.
விரதம் இருப்பது எப்படி?
சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும்.
கணபதியைத் தியானிக்க
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.
கணேச காயத்ரீ மந்திரம்
“ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்”
ஔவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல்.