ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 131

வணக்கம். இது ஒரு புதிய தொழில்நுட்ப பதிவு. விகடன் இணையதளத்தில் படித்தது.

சமீப காலங்களில், கார் ஆர்வலர்கள் அனைவரையும் ஒருசேர வியப்பில் ஆழ்த்திய தொழில்நுட்பம் எது என்றால், அது ஏர்-லெஸ் (Airless) டயர்தான்! Non Pneumatic வகை டயரான இது, டயர் தொழில்நுட்பத்தின் உச்சகட்டப் புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமான டயர்களுடன் ஒப்பிடும்போது, தனித்தன்மையான ஸ்போக்குளால் ஆன அமைப்பைக் கொண்டிருக்கும் இந்த ஏர்-லெஸ் டயர்கள், வாகனத்தின் ஒட்டுமொத்த எடையையும் தாங்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. இதன் ஸ்பெஷல் என்னவென்றால், வழக்கமான டயர்களைப்போல இதில் அடிக்கடி காற்று நிரப்பத் தேவை இல்லை என்பதுதான்!

அதிக எடையைத் தாங்கும் திறன், சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை, சிறப்பான ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றை வழங்கும் இந்த ஏர்-லெஸ் டயர்களை Bridgestone, Michelin, Hankook போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள், Prototype-ஆக வடிவமைத்திருக்கின்றன. ஸ்போக்குகளில் குப்பைகள் சேராமல் பாதுகாப்பது, வாகனத்தின் எடையை சமவிகிதத்தில் பகிர்ந்தளிப்பது போன்ற தடைகள் இருந்தாலும், தற்போது வாடிக்கையாளர்களை எட்டிவிடும் நிலைக்கு இந்த ஏர்-லெஸ் டயர்கள் விரைவில் வரவிருக்கின்றன. வீல் – டயர் – வால்வு ஆகியவற்றுக்குப் பதிலாக, ஏர்-லெஸ் டயர் ஒரே யூனிட்டாக இருக்கிறது.

Golf carts, Trailers, LawnMowers ஆகிய கமர்ஷியல் வாகனங்களில், ஏற்கனவே ஏர்-லெஸ் டயர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. என்றாலும், அவை திடமான ரப்பர் அல்லது பாலிமர் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. மேலும் டயர் ரிப்பேர் கிட், டூல் கிட், ஸ்பேர் வீல் போன்றவை ஏர்-லெஸ் டயர்களைப் பயன்படுத்தும் வாகனங்களில் இருக்காது; இந்த டயரால் கிடைக்கக்கூடிய சாதகமான விஷயங்களைப் பார்ப்போம்.

இது பஞ்சர் ஆகாது: வழக்கமான டயர்கள் பஞ்சர் ஆகும்போது, காற்று உடனடியாக வெளியேறி விடும். Airless டயர்களின் பெயருக்கு ஏற்ப, அதில் காற்று கிடையாது. எனவே, கூர்மையான பொருட்களின்மீது ஏறி இறங்கினாலும், இங்கே டயர் பஞ்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை! நெடுஞ்சாலைகளில் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்துபவர்களுக்கு, இது வரப்பிரசாதமாக அமையும் என நம்பலாம்.

ஸ்பேர் வீல் தேவையில்லை: ஏர்-லெஸ் டயர்களைப் பயன்படுத்தும்போது, ஸ்பேர் வீலுக்கான தேவையே ஏற்படாது. எனவே ஏர்-லெஸ் டயர்களைப் போல, Pneumatic வகை டயரான ரன் ஃப்ளாட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ள கார்களில், அதிக பூட் ஸ்பேஸ் கிடைக்கின்றன. மேலும் ஸ்பேர் வீல் மற்றும் அது சார்ந்த டூல் கிட் இல்லாத காரணத்தால், வாகனத்தின் எடை சற்று குறையக்கூடும்; மைலேஜும் சற்று அதிகரிக்கும்!

கூடுதல் சேமிப்பு: தொழில் சார்ந்த டிரக்குகளில் ஏர்-லெஸ் டயர்களைப் பயன்படுத்தும்போது, பஞ்சர் – காற்று வெளியேறுவது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் தவிர்க்கப்படும். இதனால் டிரக்குகளில் குறித்த நேரத்தில், குறைவான எரிபொருளில், சொன்ன இடத்துக்குப் பொருட்களைப் பத்திரமாகச் சேர்த்துவிட முடியும். சுருக்கமாகச் சொல்வதென்றால், பின்னாளில் தொழில்துறையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க இது உதவிகரமாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை!

குறைவான காற்று மாசு: டயர்களின் அதிக Rolling Resistance மற்றும் பலதரப்பட்ட சாலைகளில் சுழலும்போது ஏற்படும் இடர்பாடுகளினால், 90 சதவிகித ஆற்றல் இழப்பு ஏற்படுகின்றன. ஏர்-லெஸ் டயர்களின் கட்டுமான அமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், ஆற்றல் இழப்பு மற்றும் Rolling Resistance ஆகியவை ஒருசேரக் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு குறைவதால், சுற்றுச்சூழலுக்கு நண்பனாக ஏர்-லெஸ் டயர்கள் இருக்கும்.

பூமிக்கு நண்பன்: ஏர்-லெஸ் டயர்கள், முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்யக்கூடிய Poly Resin போன்ற கணிம வளங்களால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. எனவே புதிதாக ஏர்-லெஸ் டயர் ஒன்றைத் தயாரிக்கும்போது, பழைய ஏர்-லெஸ் டயரின் மூலப் பொருட்களும் அதில் பயன்படுத்தப்படும். வழக்கமான டயர்களை Re-Thread செய்து பயன்படுத்துவதுபோல ஆபத்தானதாக இது இருக்காது என்பதுடன், நிலத்தின் வளங்களைப் பாழ்படுத்தாமல் பாதுகாக்கவும் முடிகிறது.

ஏர்-லெஸ் டயரின் வருங்காலம் எப்படி?

சுற்றுச்சூழலுக்கு உற்றதாக இருக்கும் ஏர்-லெஸ் டயர்கள், விரைவில் அனைத்துவிதமான வாகனங்களுக்கும் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் நாள், வெகுதொலைவில் இல்லை! வழக்கமான டயர்களுடன் ஒப்பிடும்போது, இதன் விலை அதிகமாக இருந்தாலும், குறைவான காற்று மாசு, நீடித்த ஆயுள், அதிக மைலேஜ் மற்றும் ரோடு கிரிப் என பலன்களும் இருக்கத்தான் செய்கின்றன. ரன் ஃப்ளாட் டயர்களும் சிறப்பானதாக இருக்கின்றன என்பதில் மாற்றமில்லை. அவை பஞ்சர் ஆனாலும், அதிகபட்சம் 90 கி.மீ வேகத்தில் சுமார் 80 கி.மீ தூரம் வரை செல்லும் திறனைக் கொண்டுள்ளன. இதுவே ஏர்-லெஸ் டயர்கள், ரன் ஃப்ளாட் டயர்களைவிட மூன்று மடங்கு ஆயுளைக் கொண்டிருக்கின்றன.

இதற்கு அவற்றின் உறுதியான கட்டுமானம், சமமான தேய்மானம் ஆகியவையே காரணம். மேலும் இவை வாகனத்தில் பயணிப்போருக்குக் குறைவான அதிர்வுகளையே கடத்துகின்றன என்பதால், சொகுசான பயணம் கேரன்ட்டி! தவிர, இதைக் கழற்றி மாட்டுவதும் வெகுசுலபம். ஏர்-லெஸ் டயரில் இருக்கும் ஸ்போக்கின் இறுக்கத்தன்மையை அட்ஜஸ்ட் செய்வது மூலம், பல்வேறு வாகனங்களுக்கான ஏர்-லெஸ் டயர்களைப் பயன்பாட்டிற்கு ஏற்ப தயாரிக்க முடியும். ஆனால், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஏர்-லெஸ் டயரை, நமது தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்ய முடியாது என்பதைச் சொல்லியாக வேண்டும். மேலும் 80 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் செல்லும்போது, ஏர்-லெஸ் டயர் அதிகமாக அதிர்வதுடன், அதிக வெப்பத்தையும் வெளிப்படுத்துவதாகக் குற்றசாட்டு நிலவுகிறது.

ஏர்-லெஸ் டயரைத் தயாரிப்பவர்கள் யார்?

வட அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில், கிரீன்வில்லி பகுதியில் ஏர்-லெஸ் டயர்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை வைத்திருக்கிறது ஃப்ரெஞ்ச் நிறுவனமான மிஷ்லின். இந்த ஏர்லெஸ் டயருக்கு ‘ட்வீல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. (அதாவது, டயரின் முதல் எழுத்தான T’-யையும், வீலையும் சேர்த்தால் ட்வீல்!) 2005-ல் ட்வீல் டயரின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளைத் துவக்கிய மிஷ்லின், 2014-ல் அதைத் தயாரிக்கும் தொழிற்சாலையைத் துவக்கியது. Golf cart வாகனத்துக்குப் பிரத்யேகமாக மிஷ்லின் தயாரித்திருக்கும் 10 இன்ச் ஏர்-லெஸ் டயர் ஒன்றின் விலை மட்டும் $350, அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 23,500 ரூபாய்! இதனைத் தொடர்ந்து, சைக்கிள் மற்றும் வீல் சேரில் பொருந்தக்கூடிய ஏர்-லெஸ் டயர்களையும் தயாரித்துள்ளது மிஷ்லின். இவை வழக்கமான டயரைவிட கடினமாகவும், எடை அதிகமாகவும் இருக்கின்றன.

ஜப்பானைச் சேர்ந்த பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் தயாரித்திருக்கும் ஏர்-லெஸ் டயர், சுமார் 150 கிலோ எடையைத் தாங்கும் திறன் கொண்டது. Hankook நிறுவனம், தான் தயாரித்திருக்கும் ஏர்-லெஸ் டயருக்கு iFlex எனப் பெயர் சூட்டியுள்ளது. நீடித்த உழைப்பு, அதிக உறுதி, நிலையான வேகம், அற்புதமான நிலைத்தன்மை, சிறப்பான Wet Grip ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை வடிவமைத்திருக்கும் அந்நிறுவனம், 130 கி.மீ வேகம் வரையிலான திறன் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கமான டயரைத் தயாரிக்க, 8 அடுக்கு உற்பத்தி வழிமுறைகள் பின்பற்றப்படும் நிலையில், ஏர்-லெஸ் டயரை வெறும் 4 அடுக்கு உற்பத்தி வழிமுறையிலேயே தயாரிக்க முடியும் என்கிறது Hankook.

எப்படி இது செயல்படுகிறது காணொளி காண Airless Tyre

*படித்தேன்; பகிர்ந்தேன்*

இந்த பதிவை பார்க்கும் அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் அது எனக்கு மேலும் எழுத தூண்டுகோலாக அமையும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

twenty − fifteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.