Views: 12
மீனாட்சி பட்டாபிஷேகம் :
தமிழ்நாட்டின் முக்கிய விழாக்களில் முதன்மையானது மதுரை சித்திரைத் திருவிழா. சித்திரை மாத வளர்பிறையில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் 12 நாள்கள் சித்திரைத் திருவிழா நடைபெறும். அதில் 8-ம் நாள் இரவில் மீனாட்சி பட்டாபிஷேகம், 9-ம் நாள் இரவில் மீனாட்சி திக்விஜயம் நடைபெறும். இது வேறெங்கும் நடைபெறாத திருவிழா. திக்விஜயம் என்றால் எல்லையை விரிவாக்கும் போர் அல்ல, எட்டுத் திசையிலும் உள்ள ஜீவன்களையும் தன் அன்பினால் அன்னை மீனாள் ஆட்கொள்ளும் அருள் உலா எனலாம்.
இந்த ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழா 15-4-2021 அன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சித்திரை விழாவின் முத்திரைக் கொண்டாட்டமாகத் திகழ்வது மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருமணம். இது பத்தாம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள்.
மதுரையம்பதியில் 63 திருவிளையாடல்கள் நடைபெற்றன.இதில் முதல் திருவிளையாடலான இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த விளையாடல் இன்றும் சித்ரா பவுர்ணமி தினத்தில் இங்கே நடக்கிறது. அன்று உச்சி காலத்தில் சொக்கநாதர் சந்நிதிக்கு எதிரில், இந்திரன் சிலையை வைத்து சொக்கநாதருக்கு பூஜைகள் செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதிகம்.
ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த விசேஷங்கள் எல்லாம் ஆலய வளாகத்துக்குள்ளேயே நடைபெற இருக்கின்றன.
வாழ்க வளமுடன்!!