சனி. மே 24th, 2025

Views: 90

வணக்கம். நமது அறிவியல் மற்றும் ஆதி கால மனிதனின் கூற்றுபடி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும்; பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன எனவும்; பூமி தனது அச்சில் 23 ½ பாகை சரிவாகச் சுற்றுவதனால் பருவகாலங்கள் உண்டாகின்றன என்றும் நாம் அறிந்ததே.

பூமி மற்றும் சந்திரன் பற்றிய சில அறிவியல் குறிப்பு சந்திரன் பூமியைச் சுற்றுவதால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் 29.53 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறது. இதனால் நம்மால் சந்திரனை காண முடியவில்லை. அப்படி சந்திக்கும் நேரத்தில் சந்திரன், பூமிக்கு ஒருபக்கத்திலும், சூரியன் மறுபக்கத்திலுமாக, அமையும் போது பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் பகுதியில் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்கின்றது. இதுவே பௌர்ணமி; மாற்று கூற்றில் அமாவாசை.

சூரியனைப் “பிதுர் காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் நமது பிதா மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர். இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் ‘உத்தராயண காலம்’ என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் ‘தட்சணாயன காலம்’ என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள். சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள்.இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற , தடைகள் அகல , பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு “காந்த சக்தி” ஏற்படுகிறது.

அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன.

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்கள் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள் நுல்கள் கூறுகின்றன.

இவைகளில் 14 மன்வாதி நாட்கள்,
யுகாதி நாட்கள் 4,
மாதப்பிறப்பு நாட்கள் 12,
அமாவாசை 12, மஹாளய பட்சம் 16,
வ்யதீபாதம் 12, வைத்ருதி 12,
அஷ்டகா 4, அன்வஷ்டகா 4,
பூர்வேத்யு 4 நாட்கள்.

இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

குழந்தை பிறக்க மூலகாரணமான பொருள் ஆணிடமுள்ள சுக்கிலம் எனப்படும் தாதுவாகும். இந்தத் தாதுவில் ’84 அம்சங்கள்’ உள்ளன. ‘இருபத்து எட்டு(28) அம்சங்கள் அந்த மனிதன்” உட்கொள்ளும் உணவு மற்றும் அருந்தும் நீர் முதலியவற்றால் உண்டானவை. பெற்றோரிடமிருந்து இருபத்தியொரு(21) அம்சமும், பாட்டனாரிடமிருந்து பதினைந்து(15) அம்சமும், முப்பாட்டனாரிடமிருந்து பத்து(10) அம்சமும், நான்காம் மூதாதையிடமிருந்து ஆறு(6) அம்சமும், ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று(3) அம்சமும், ஆறாம் மூதாதையிடமிருந்து ஒரு(1) அம்சமும் என ஆறு தலைமுறையினரின் ஐம்பத்தியாறு (56)அம்சங்கள் ஏழாம் தலைமுறை மனிதனின் சுக்கிலத்தோடு(28) அம்சங்கள் தொடர்பு கொண்டவை. திவசத்தின்போது இந்த மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்திலுள்ளது. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது. காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.

அமாவாசை, பெளர்ணமி நாட்களில் கடல் தீர்த்தமாடுதல் மிகவும் நல்லது. கடல்நீரை, நமது பாவத்தை கழுவும் பரிசுத்த நீராகவும், இறைவனது அருள் நீராகவும் நினைத்து காலம் சென்ற பிதுரர்களை எண்ணி, அவர்களது பாவத்தைப் போக்கி அவர்களுக்கு முத்தியளிக்கும் வண்ணம் இறைவனை வேண்டி நீராடல் வேண்டும்.
பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் செய்யப்படும் வழிபாட்டைச் சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்தப் பரிகாரத்தைச் செய்வார்கள். ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டர்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள்.
பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.

இந்த நன்னாளில், நம் முன்னோரை நன்றியுடன் நினைவு கொள்வோமாக .

வாழ்க வளமுடன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

ten + seventeen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.