Views: 76
மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது. 2011 அக்., 31ல் 700 கோடியாக உயர்ந்தது. தற்போது இது 760 கோடியாக உள்ளது. இது 2050ல், 980 கோடியாகவும், 2100ல் 1,120 கோடியாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகையில், இந்தியா 16 சதவீதத்தை பெற்றுள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, 2024ம் ஆண்டு சீனாவை முந்தி விடும் என ஐ.நா., புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. சீனா மக்கள் தொகை தற்போது 142 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.
உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடு சீனா. இச்சாதனையை இன்னும் ஏழு ஆண்டுகளில் இந்தியா முறியடித்துவிடும் என ஐ.நா., தெரிவிக்கிறது. உலகின் மக்கள்தொகை தற்போது 760 கோடியாக உள்ளது. இதில் முதலிடத்தில் உள்ள சீனாவின் மக்கள் தொகை 137 கோடி. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவின் மக்கள்தொகை 2011 படி, 121 கோடி. இன்னும் ஏழு ஆண்டுகளில் (2024ம் ஆண்டு) சீனாவை முந்தி, இந்தியா முதலிடத்தை பெறும் என ஐ.நா., ஆய்வு தெரிவித்துள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா உள்ளது. உலக நிலப்பரப்பில்இந்தியா 2.42 சதவீதம் கொண்டு உள்ளது. ஆனால், உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் கொண்டுள்ளது. பொதுவாக உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட, வளரும் நாடுகளில்தான் மக்கள்தொகை வளர்ச்சி அதிகமாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் மக்கள்தொகை அதிகம் இருப்பதற்கான காரணம், கல்வி அறிவின்மை, அறியாமை, மூடப்பழக்க வழக்கங்கள், இயற்கை அமைப்பு, சமூக அமைப்பு, ஆண் ஆதிக்கம், இளவயது திருமணங்கள், ஆண் வாரிசு வேண்டி அதிககுழந்தைகளை பெற்றுக்கொள்ளுதல். மக்கள்தொகை பெருக்கத்தால் பல பிரச்னைகளை இந்தியா சந்தித்து கொண்டிருக்கிறது.
2050ல் உலக மக்கள்தொகையில் சரிபாதியாக 9 நாடுகளின் மக்கள்தொகை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவை இந்தியா, நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான், எத்தியோப்பியா, தான்சானியா, அமெரிக்கா, உகாண்டா, இந்தோனேஷியா. மேலும் இந்த நாடுகள் தான், உலகின் மக்கள்தொகை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும்.
தற்போதைய மக்கள்தொகையை விட அடுத்த 13 ஆண்டுகளில் 100 கோடி அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை 2100ம் ஆண்டில் 310 கோடியாக அதிகரிக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. உலகளவில் சராசரி மக்கள்தொகை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1990ல் பிறப்பு விகிதம் 3 என்பது 2100ல் இரண்டாக இருக்கும். 2050ம் ஆண்டுக்குள் 23 ஆப்ரிக்க நாடுகளின் மக்கள்தொகை இரட்டிப்பாகி விடும்.
இந்தியாவின் மக்கள்தொகை சுதந்திரத்திற்கு முன் 30 கோடியாக இருந்தது. இன்று 125 கோடியாக உயர்ந்து உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகரித்துக்கொண்டே செல்வதால், 2050ம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட முதல் நாடாக இந்தியா திகழும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறுகிறது. அப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு மக்கள் உண்மையான தகவல்களை தரவேண்டும். இதன்மூலம் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை அறியமுடியும். இதன் அடிப்படையில் தான் அரசு புதிய திட்டங்களை உருவாக்க முடியும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் நிச்சயம் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.