வெள்ளி. மே 23rd, 2025

Views: 37

வணக்கம் நண்பர்களே.
இன்று இணையத்தில் உலாவியபோது விகடன் இணையதளத்தில் ஒரு கட்டுரை இன்றய கல்வி திட்டத்தின் அடிப்படை பிரச்சனை தற்சயலாக படிக்க நேர்ந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.
வேலையில்லாத் திண்டாட்டம், புதிய சிந்தனையின்மை, திறன் குறைவு என, இன்று நம் இளைஞர்கள் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் நாம் சொல்லும் ஒரே காரணம் `நம்முடைய கல்வித்திட்டம் சரியில்லை’ என்பதுதான். கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை, இன்று நாம் ஒவ்வொருவரும் பட்டியலிடுகிறோம். அடிப்படையில், அத்தனை குறைகளுக்கும் காரணமாக இருப்பது ஒன்றுதான்.

அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்குப் பேர்போன அமெரிக்காவின் `நாசா’ அமைப்பு, அந்தக் காரணம் என்னவென்று அறிய ஆய்வு மேற்கொண்டது. பள்ளிக்குப் போகும் முன் குழந்தைகள் எப்படிச் சிந்திக்கிறார்கள், எப்படிச் செயல்படுகிறார்கள், அவர்களின் கனவு என்ன, பள்ளி மற்றும் பாடம் குறித்து அவர்களின் எண்ண நிலைப்பாடு என்ன, என ஆராய்ச்சி செய்தபோது, குழந்தைகளில் 98 சதவிகிதத்தினர் வெவ்வேறான சிந்தனை கொண்டவர்களாக இருப்பது தெரியவந்தது. ஆனால், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த 25 வயதினரின் நிலைப்பாடு குறித்து ஆராய்ச்சி செய்தபோது, இரண்டு சதவிகிதத்தினர் மட்டுமே மாற்றுச் சிந்தனையுடையவர்களாக இருக்கின்றனர். 98 சதவிகிதத்தினர் ஒரேமாதிரியான சிந்தனைகளையே கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரியவந்தது.

இதற்குக் காரணம் 18-ம் நூற்றாண்டில் தொழில்துறை அபரிமிதமாக வளர்ச்சியடைந்தபோது, தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காக கல்வித்திட்டத்தில் மாற்றம்கொண்டுவரப்பட்டது. தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு, எந்தச் சிந்தனையும் இல்லாமல் சொன்னதை மட்டுமே செய்பவர்கள்தாம் தேவை. அதற்காக கல்வித் திட்டத்தில் செய்த மாற்றம் கிட்டத்தட்ட ரோபோக்களைப்போலவே குழந்தைகளை உருவாக்கியது.

ஒட்டுமொத்தக் கல்வித்திட்டத்தின் பிரச்னையும் A for Apple என்பதிலிருந்து தொடங்கியது. அந்தக் கல்வித் திட்டத்தில் கேள்விகளுக்கான பதில்களை உருவாக்கும்படியான கல்விமுறை இல்லாமல், இந்தக் கேள்விக்கு இந்தப் பதில்தான் எனக் கற்பிக்கும் கல்விமுறை பின்பற்றப்பட்டது. அந்தக் கல்விமுறையைத்தான் இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் நாம் பின்பற்றிவருகிறோம்.

உதாரணத்துக்கு, நீங்கள் உங்களைச் சுற்றியிருக்கும் எந்த வயதில் இருக்கும் நபர்களிடமும் `A for…’ என்று கேட்டுப்பாருங்கள் `Apple’ என்ற பதில்தான் வரும். A என்ற எழுத்தில் பல ஆயிரம் வார்த்தைகள் உள்ளன. வித்தியாசமான சிந்தனைகளை முற்றிலுமாகச் சமாதி கட்டிவிட்டது இந்தக் கல்விமுறை.

குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது, வேறுபட்ட சிந்தனைகளையும் கனவுகளையும் கொண்டவர்களாக வருகிறார்கள். அவர்களை வகுப்பறைக்குள் அனுப்பும் முன்னர், அவர்களது சிந்தனைகள், கனவுகள் அனைத்தையும் பிடுங்கிவிட்டு மந்தைக்குள் இருக்கும் ஆடு- மாடுகளைப்போலவே வளர்க்க ஆரம்பிக்கிறோம்.

இப்படிப்பட்ட கல்விமுறையில் 20 ஆண்டுகள் படித்து வெளிவரும் நாம், படித்த படிப்பின் எந்தவொரு விஷயத்தையும் வாழ்க்கையில் பயன்படுத்த முடியாமல், வாழ்க்கையில் எந்தவொரு கேள்விக்குமான பதிலை நாம் பிறரிடமிருந்தே எதிர்பார்க்கிறோம். சுயமாகச் சிந்திக்கும் திறனை இழந்துவிடுகிறோம். நம்முடைய கல்வித்திட்டத்தை, கேள்விகளைக் கேட்டு பதில்களை உருவாக்கும் அடிப்படையில் இயங்க வேண்டும். அதற்கு முன்னர், ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவர்கள் என்பதை ஒப்புக்கொண்டு, அவர்களை வழிநடத்த வேண்டும். இப்படிச் செய்யாததால் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் தனித்திறன் முற்றிலுமாகப் புதைக்கப்பட்டுவிடுகிறது. இந்த மாற்றத்தை, நம்மிடமிருந்தும் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்தும் நாம் தொடங்க வேண்டும்.

அப்போதுதான் நாம் இன்று சந்திக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், குறைந்த ஊதியம், வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்தல் போன்ற பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். நம்முடைய வாழ்க்கைத் தரமும் உயரும்.

நானும் இந்த கட்டுரை கருத்தை ஆமோதிக்கிறேன். இதன் மூலம் நம்முடைய வரும்கால தலைமுறை மற்றதை ஏற்படுத்தும்.

நன்றி விகடன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

3 × four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.