Views: 74
உலக நீரிழிவு நாள் (World Diabetes Day) உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நோய் அறியப் பட்டிருந்தாலும் இதற்கான உறுதியான சிகிச்சை முறை 20-ம் நூற்றாண்டில் தான் கண்டறியப்பட்டது. அதுவரை இந்நோய் ஆபத்தான நோயாகவே கண்டறியப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் தான் இன்சுலின் கண்டறியப்பட்டது. நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் பிறட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே இன்றைய நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது. சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற கூற்றை நாம் பலமுறை நினைவுகூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.
இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய். இந்நோயை முழுதாகக் குணமாக்க முடியாது. இருப்பினும் மருத்துவ ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதை மருந்துகளின் மூலமும், உடற்பயிற்சிகள் மூலமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும், இதனால் பலவித நோய்கள் வர வாய்ப்புள்ளதால் குறைந்த வயதில் மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.
மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் தலையாயதும், மனிதனின் உடலை சிறிது சிறிதாக அழிவுக்கு இட்டுச்செல்வதும் நீரிழிவு நோய்தான். அதனையொட்டி, பல ஆய்வுகள் உலக அளவில் நடத்தப்பட்டு, அன்றாடம் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன.