Views: 310
ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமித்தல் மிகவும் அவசியமாகும். சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான். வளங்களை வீணடிக்காமல், திறமையாக கையாள்வதை இது குறிக்கும். அதாவது அவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வது. சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனாலேயே வங்கிகள், சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி அளித்து ஊக்கப்படுத்துகின்றன. சிக்கனமாக சேமிக்கப்பட்ட பணம் தான், எல்லா தொழில்களுக்கும் மூலதனம்.
“சிறுக கட்டி பெருக வாழ்” என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட சிறு வயது முதலே அனைவருக்கும் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் வேண்டும். சிறுசேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதால் அந்தத் தொகைக்கு உத்தரவாதமும், சிறுக சிறுக சேமிக்கும் தொகை பெருகி அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பயன்படுகிறது.
1924 அக்., 31ல், இத்தாலியின் மிலன் நகரில், சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த, வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிக்கனத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், அக்.31ம் தேதி உலக சிக்கன தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
‘ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை’ அதாவது வரவு பெரிதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை செலவு சிறிதாக இருக்கும் வரை கேடு இல்லை என்பது இதன் பொருளாகும்.. வருவாய்க்கு தக்க செலவு செய்பவனுக்கு தீங்கு கவலைகள் இல்லை. இதிலிருந்து சிக்கனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்.
தேனீ, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். இவற்றிலிருந்து நாம் சேமிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ளலாம்.
நம் அன்றாட வாழ்வில் பல இடங்களில் சேமிப்பை கண்டு அல்லது சேமிப்பில்தான் வாழ்ந்து இருக்கின்றோம். சேமிப்பு என்பது உண்டியலில் சிறுக சேமிப்பது முதல் அஞ்சல் நிலைய சிறு சேமிப்பு வங்கி நிலை என்று சேமிப்பின் அவசியத்தை உணரும் நாம் இன்றிலிருந்தே அதற்கான பணிகளை தொடங்குவோம் !!