வெள்ளி. மே 23rd, 2025

Views: 162

நட்ஸ் பால்ஸ்

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை – ஒரு கப், வறுத்த எள் – 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை – அரை கப், ரஸ்க் – 6, பொடித்த வெல்லம் – 150 கிராம், பேரீச்சை – 6, முந்திரி – 8, உலர்திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, நெய் – சிறிதளவு.

செய்முறை: பேரீச்சையை பொடியாக நறுக்கவும். முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கவும். வறுத்த வேர்க்கடலை, வறுத்த எள், பொட்டுக்கடலை, ரஸ்க் ஆகியவற்றை மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். இந்தக் கலவையுடன் பேரீச்சை, முந்திரி, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கலந்து, உருண்டை களாகப் பிடித்து பரிமாறவும்.

நியூட்ரிஷியஸ் பேல்

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை – அரை கப், முளைகட்டிய பச்சைப் பயறு – கால் கப், பொரி – ஒன்றரை கப், ஆப்பிள் – ஒன்று, மாதுளை முத்துக்கள் – கால் கப், துருவிய மாங்காய் – கால் கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, உருளைக்கிழங்கு – ஒன்று, கார்ன் ஃப்ளேக்ஸ் – அரை கப், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

இனிப்பு  சட்னிக்கு: மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, உலர்திராட்சை – 2 டேபிள்ஸ்பூன், விதை நீக்கிய பேரீச்சை – 6, பொடித்த வெல்லம் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு (புளி, திராட்சை, பேரீச்சையை ஊறவைத்து நைஸான விழுதாக அரைக்கவும். இதனுடன் வெல்லம், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு சற்றே கெட்டியாகும் வரை (சுமார் 2 நிமிடம்) கொதிக்க வைத்து இறக்கினால்… இனிப்பு சட்னி ரெடி).

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பொடியாக நறுக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். அகலமான பேஸினில் வேர்க்கடலை, முளைகட்டிய பயறு, தக்காளி, மாதுளை, பொரி, மாங்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆப்பிள் துண்டுகள், கார்ன் ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்து நன்கு குலுக்கிக் கலக்கவும். பரிமாறும் முன் இந்தக் கலவையை தட்டில் போட்டு தேவையான இனிப்பு சட்னி விட்டுக் கலந்து, கரம் மசாலாத்தூள், மல்லித்தழை தூவி பரிமாறவும்.

வெஜ் ஸ்பிரிங் ரோல்

தேவையானவை: மைதா மாவு, நவதானிய மாவு (மளிகைக் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) – தலா அரை கப், முளைகட்டிய நவதானியம் (பாக்கெட்டாக கிடைக்கும்) – ஒரு கப், பொடியாக நறுக்கிய முள்ளங்கி கீரை, கோஸ், பாலக்கீரை (சேர்த்து) – ஒரு கப், உருளைக்கிழங்கு – ஒன்று, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா இலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய நவதானியத்தை கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளவும். மைதா மாவு, நவதானிய மாவு, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு பதத்தில் பிசையவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய கீரைகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த நவதானிய விழுது, மசித்த உருளை, புதினா, உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு இறக்கி, ஆறவிட்டு சின்ன சின்ன உருண்டைகளாக்கவும்.

பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவில் சிறு உருண்டை எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். இதன்மேல் நவதானிய உருண்டையை வைத்து சற்று இறுக்கமாகச் சுருட்டவும். பின்னர் அதன் ஓரத்தை தண்ணீரால் ஒட்டி விடவும். இதுதான் ஸ்பிரிங் ரோல். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஸ்பிரிங் ரோலைப் போட்டு பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

மினி சமோசா

தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 4, பூண்டு – 10 பல், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். மைதாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து மிகச் சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, மிக மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். பிறகு 4, 5 சப்பாத்திகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, சூடான தோசைக்கல்லில் போட்டு உடனடியாக திருப்பிவிட்டு எடுக்கவும். பிறகு தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றையும் பாதியாக வெட்டவும். அதை முக்கோண வடிவில் மடித்து உள்ளே வெங்காய மசாலாவை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும். இதுதான் மினி சமோசா. கடாயில் எண்ணெயை சூடாகி, மிதமாக காய்ந்ததும், மினி சமோசாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

eighteen − sixteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.