Views: 100
பலகாரங்களும் பட்சணங்களும்தான் தீபாவளியின் ருசி கூட்டுபவை. இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் தித்திப்பு பன்மடங்காக,பண்டிகை விருந்து படைக்க இதோ.
கடலைப்பருப்பு சுய்யம்
தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) – 100 கிராம், பாகு வெல்லம் – 100 கிராம், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், முந்திரித்தூள் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – கால் கிலோ
மேல்மாவுக்கு: மைதா மாவு – 75 கிராம், அரிசி மாவு – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, மஞ்சள் ஃபுட் கலர் – சிறிதளவு, சமையல் சோடா – ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).
மைசூர்பாகு
தேவையானவை: கடலை மாவு – 100 கிராம், சர்க்கரை – 300 கிராம், நெய் – 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடும்).
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.
குறிப்பு: கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், கூடு கூடாக (தேன் கூடுபோல்) மைசூர்பாகு வரும்.
தேன்குழல்
தேவையானவை: பச்சரிசி (தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தியது) – 400 கிராம், முழு உளுந்து – 100 கிராம் (சிவக்க வறுக்கவும்), சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – அரை கிலோ.
செய்முறை: அரிசியுடன் வறுத்த உளுந்து சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து சலிக்கவும். மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு, சிறிதளவு நீரும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் பிடியில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
ரவா லாடு
தேவையானவை:
பாம்பே ரவை – 1/2 கிலோ,
சர்க்கரை – 1/2 கிலோ,
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்,
முந்திரி, திராட்சை – தலா 50 கிராம்,
நெய் – 1/4 கிலோ அல்லது தேவைக்கு.
செய்முறை: ரவையை வெறும் கடாயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வறுத்து உடைத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூளுடன் கலக்கவும். இப்போது வறுத்த ரவை, பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள், உடைத்த முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். நெய்யைக் காய்ச்சி அதில் சிறிது, சிறிதாக ஊற்றி உருண்டை உருட்டும் பதத்துக்கு வந்ததும் நெய் ஊற்றுவதை நிறுத்தி விடவும். சூடாக இருக்கும் போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.
(ரவையை பொடித்தும் ரவா லாடு செய்யலாம். இத்துடன் சிலர் 1/2 கப் வறுத்துப் பொடித்த பாசிப் பருப்பு தூள் சேர்த்தும் செய்கிறார்கள். சிலர் வறுத்த தேங்காய் சேர்த்தும் செய்வார்கள். ஆனால், உருண்டை பிடிக்க நெய் சூடாக இருக்க வேண்டும்.
தேங்காய் பர்பி
தேவையானவை:
தேங்காய்த் துருவல் – 2 கப்,
சர்க்கரை – 2 கப்,
நெய் – 1 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்,
பால் – 1 டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி, அதில் 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதில் பால் விட்டு பொங்கி வரும்போது கசடை எடுக்கவும். பின் சர்க்கரை சேர்ந்து கொதித்து கம்பிப் பதம் வந்தவுடன் தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறவும். கொஞ்சம் கெட்டியானதும் நெய், ஏலக்காய் தூள் போட்டு சுருள வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் விருப்பமான வடிவில் துண்டுகள் போடவும்.
(தேங்காயை அடி வரை துருவாமல் மேலோட்டமாகத் துருவிச் செய்ய வேண்டும். இப்படி செய்தால் பர்பி வெள்ளையாக இருக்கும். கலர் சேர்த்தும் கலர் பர்பி செய்யலாம்.
பொட்டுக்கடலை மாலாடு
தேவையானவை: பொட்டுக் கடலை – 200 கிராம் (மாவாக் கவும்), பொடித்த சர்க்கரை – 100 கிராம், வறுத்த முந்திரி, திராட்சை (சேர்த்து) – 25 கிராம், உருக்கிய நெய் அல்லது வனஸ்பதி – 150 கிராம், மில்க் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை: ஒரு பேஸினில் பொட்டுக்கடலை மாவு, மில்க் பவுடர், பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். உருக்கிய நெய் (அ) வனஸ்பதியை சூடாகச் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.
பாசிப்பருப்பு உருண்டை
தேவையானவை:- பாசிப்பருப்பு – ஒரு கப், பொடித்த சர்க்கரை – முக்கால் கப், நெய் – 150 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை – தேவைக்கேற்ப.
செய்முறை: பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, நைஸாக பொடிக்கவும். பொடித்த மாவுடன் சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். நெய்யை சூடாக்கி இதனுடன் கலந்து உருண்டைகள் பிடிக்கவும்.
உளுந்து மாவு உருண்டை
தேவையானவை: முழு உளுந்து – 200 கிராம், சுக்குப்பொடி – அரை டீஸ் பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பொடித்த சர்க் கரை – 150 கிராம், நெய் (அ) வனஸ்பதி – தேவைக்கேற்ப, வறுத்த முந்திரி, திராட்சை – சிறிதளவு.
செய்முறை: முழு உளுந்தை வறுத்து, மாவாக்கவும். அதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும். நெய் (அ) வனஸ்பதியை உருக்கி, உளுந்து மாவுக் கலவை மீது ஊற்றிக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.