Views: 258
வணக்கம். நம்முடைய திருவள்ளுவர் மழை மற்றும் நீர் பற்றிய குறள்.
“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.”
Translation:
The world its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.”
Translation:
When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’.
முந்தைய காலத்தில் கோடைக் காலம் துவங்கிவிட்டால் வீட்டுக்கு வெளியே பானையோ அல்லது ஒரு பாத்திரமோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பார்கள். வழியில் செல்வோர் அந்த நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்வார்கள் என்ற நல்ல நோக்கத்தோடு. தண்ணீர் இயற்கை நமக்கு வழங்கிய மிகப்பெரிய சொத்து. அதை உயிர்நீர் என்று கூறலாம். அதிலும் உலகம் முழுவதும் கிடைக்கும் சுத்தமான நீர் என்றால் அது மழை மட்டும் தான். நிலப்பரப்பில் உள்ள தண்ணீர் மற்றும் தண்ணீர் வளங்கள் 80 சதவீதம் மாசுபாடு அடைந்துள்ளது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கிறது.
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. அதற்கும் மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்க, அவர்களுக்குத் தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பகுதிகளில் உள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவு கடுமையான நோய்கள்.
தமிழகத்திற்கு ஒரு வருட தண்ணீரின் தேவை என்பது கணக்கிட்டால் கால்நடைகள், தொழிற்சாலைகளுக்கு மொத்தம் 77 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. அதேப்போன்று குடிநீரின் தேவை 51 டிஎம்சியாக உள்ளது. பயிர் பாதுகாப்பிற்கு 1760 டிஎம்சி தேவைப்படுகிறது.
இப்படி பல்வேறு காரணங்களுக்காக ஒரு வருடத்திற்கு மொத்தம் 1894 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் நம்மிடம் உள்ளது பூமியின் மேற்பரப்பிலும், நிலத்தடி நீராகவும் 1587 டிஎம்சி தண்ணீர் மட்டுமே. எனவே தண்ணீரின் தேவையை நாம் பூர்த்தி செய்தே ஆக வேண்டும்.
தூய்மையான தண்ணீர் என்பது ஒருபுறம் இருந்தாலும், தண்ணீரை பாதுகாக்கும் தொழில்நுட்பத்தில் புதிய முறைகள் என்று எதுவும் இல்லாமல் நாம் பின்தங்கியுள்ளோம். அப்படியே இந்த தண்ணீர் கிடைத்தாலும் அதனை நாம் மருத்துவமனை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் என தொடர்ந்து மாசுபடுத்தி வருகிறோம்.
மிகக் குறைந்த செலவிலான இயற்கை முறையில் தண்ணீரை தூய்மை செய்து தரும் கருவிகள் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அது விரைவில் கொண்டுவரப்படும். அதேப்போல் தண்ணீரை மறுசுழற்சி செய்யும் பல தொழில்நுட்பங்களை ஒவ்வொரு தெருக்களில் உள்ள 5 முதல் 10 வீடுகள் ஒரு பொதுவான இடத்தில் தண்ணீர் மறுசுழற்சி செய்யும் கருவிகளை பொருத்தி அதன் மூலம் தண்ணீர் தேவையை அவர்களே பூர்த்தி செய்து கொள்ளலாம். நீர்நிலை தண்ணீரும் மாசு அடையாமல் பாதுகாக்கலாம்.
உலகம் முழுவதும் தண்ணீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்க வேண்டும். உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றை பரிசோதித்து நீரின் தரம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் சுத்தமான தண்ணீரை பாதுகாக்கும் அமைப்பு இத்தினத்தை கடந்த 2003ல் அறிவித்தது. அன்றுமுதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 18-ஆம் தேதி உலகம் முழுவதும் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.