திங்கள். ஜூலை 28th, 2025

Views: 97

இந்தியாவில், Sir பட்டம் பெற்ற பாரத ரத்னா விருது வென்ற இந்தியாவின் தலைசிறந்த பொறியாளரான, Sir MV என்று பரவலாக அறியப்பட்ட ’மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15’ஐ ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

’மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ 1860ம் ஆண்டு மைசூரில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் தன் 12ம் வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது பள்ளி படிப்பை சிக்கபல்லாபுராவிலும், இளங்கலை பட்டத்தை செண்டரல் காலேஜ், பெங்களூரிலும் முடித்தார். பின் கட்டிட பொறியியல் (civil engineering) படிப்பை புகழ்பெற்ற பூனே பொறியியல் கல்லூரியில் பயின்றார்.

ஆரம்பத்தில் மும்பை பொதுப்பணித்துறையில் வேலை பார்த்த இவர் பின்னாளில் இந்திய நீர்ப்பாசன கமிஷனில் பணியை தொடர அழைக்கப்பட்டார். இந்திய நீர்ப்பாசன துறையில் வேலை பார்த்த காலத்தில் மிகவும் சிக்கலான நீர்ப்பாசன அமைப்பை தக்காணப் பீடபூமி பகுதியில் செயல்படுத்தினார். இவரின் புகழுக்கு உச்சமாக கருதப்படுவது தெலுங்கானா ஹைதராபாத் நகரில் வெள்ளப் பாதுகாப்பு அமைப்பு தலைமை வடிவமைப்பாளராக இருந்தது மற்றும் மைசூர் கிருஷ்ண ராஜா சாகர அணை கட்டுமான பொறுப்பு தலைமை பொறியாளராக இருந்தது. இந்த அணை கட்டப்பட்டது போது இதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கம் கொண்டதாக கருதப்பட்டது. திடீரெனப் பெருகும் வெள்ள நீரால் அணையைக் காப்பாற்றும் விதமாக அணையில் தானியங்கி மதகுகளை முதன்முதலில் வடிவமைத்த பொறியாளர் இவரே. இந்த மதகுகளை 1903-ல் புனே அருகில் உள்ள கடக்வாசல நீர்த்தேக்கத்தில் நிறுவினார். இதன் வெற்றிகரமான செயல்பாடு காரணமாக இதே வகை மதகுகள் கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் நிறுவப்பட்டன. அவருடைய பங்களிப்பு வெறும் பொறியியல் உள்கட்டமைப்பு திட்டங்களில் (அணைகள் மற்றும் பாலங்கள் போன்ற) மட்டுமில்லாமல் இரும்பு மற்றும் எஃகு, சோப்புகள், பட்டு, சர்க்கரை, வங்கி மற்றும் வானியல் உட்பட பல துறைகளும் சிறந்து விளங்க கருவியாக திகழ்ந்தார்.

1912-ம் ஆண்டில் இவர் மைசூர் மாகாணத்தின் திவானாகப் பொறுப்பேற்றுள்ளார். மைசூர் பல்கலைக் கழகம், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், பத்ராவதி இரும்பு எஃகுத் தொழிற்சாலை உள்ளிட்ட பல நிறுவனங்களின் உருவாக்கத்திலும் செயல்பாட்டிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. புகழையும் விளம்பரத்தையும் விரும்பாத விஸ்வேஸ்வரய்யாவின் சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1955-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கௌரவப்படுத்தியிருக்கிறது. நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்த விஸ்வேஸ்வரய்யா 1962-ம் ஆண்டு ஏப்ரல் 14-ல் காலமானார்.

இவரின் பிறந்த நாளான இன்று அவரது நினைவாக, இந்திய நாடு முழுவதும் பொறியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக “பொறியாளர்கள் தினம்” கொண்டாடுகிறது. நாளைய இந்தியாவை உருவாக்கும் அனைத்து பொறியாளர்களுக்கும் இனிய பொறியாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

14 − 7 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.