Views: 109
பித்ரு பட்சம் அல்லது பித்ர் பக்ஷம் அல்லது பித்ரி பக்க்ஷா, (வடமொழியில் “முன்னோர்களின் பதினாறு நாட்கள்” எனப் பொருள்படும்) இந்த 16–சந்திர நாட்கள் கொண்ட பட்சம் இந்துக்கள் தங்கள் முன்னோர்களை வழிபடும் (பித்துருக்கள்) காலமாகக் கருதப்படுகிறது. இந்நாட்களில் இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபடுகிறார்கள். இச்சடங்கு மகாளய பட்சம் என்றும் வழங்கப்படுகிறது. இந்த பட்சம் மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் இந்திய அரசு நாட்காட்டியில் பாத்திரபத மாதத்தில் (தமிழ் மாதங்கள் ஆவணியின் இறுதி அல்லது புரட்டாசி மாத முதல்) முழு நிலவு அன்று துவங்கி அடுத்த அமாவாசை நாள் (இந்த அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது) வரை கடைபிடிக்கப்படுகிறது. வட இந்தியாவிலும் நேபாளத்தில் பாத்திரபத மாதத்திற்கு மாற்றாக அசுவின் மாதத்தில் உள்ள தேய்பிறை நாட்களில் கடைபிடிக்கப்படுகிறது.
“மகாளயம்’ என்றால் “கூட்டமாக வருதல்’. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். புரட்டாசி மாதத்தில் வரும், மகாளய அமாவாசை, முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் தன் பயணத்தை தொடருவார். புரட்டாசி மாதத்தில் அவர் கன்னி ராசியில் செல்வதால், இந்த மாதத்திற்கு ‘கன்னியா மாதம்’ என்று பெயர். புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில்தான் மகாளய அமாவாசை வருகிறது.
புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய, 15 நாட்களும் மகாளய பட்ச காலம். இந்த புண்ணிய தினங்களில், பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்தது. மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில், தர்ப்பணம் செய்வதும் அவசியம்.மற்ற அமாவாசையில், நம் உறவினர்கள், 12 பேருக்கு மட்டுமே தர்ப்பணம் செய்கிறோம். இந்த மகாளய பட்சத்தில்தான் அனைத்து உறவினருக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது. மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம், மஹாபரணி என்றும், அஷ்டமி திதி, மத்பாஷ்டமி என்றும், திரயோதசி, கஜச்சாயை என்றும் அழைக்கப்படுகிறது. கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற, தெய்வீக நுால்களில், மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.
மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ‘மாத்ருதேவோபவ, பித்ருதேவோபவ’ என நம் பெற்றோருக்கு நாம் நன்றிக் கடன்பட்டு இருக்கிறோம். நமக்கு நல்வாழ்வு வழங்கிய பித்ருக் களுக்கு தர்ப்பண பூஜை செய்வது அவசியம்.