Views: 81
வணக்கம். அண்மையில் விகடனில் படித்தவை. உங்கள் அன்புப் பிள்ளைகளின் நிதி எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்காமல் இருக்க மாட்டீர்கள். எல்லா பெற்றோர்களின் கனவும்
என் மகன்/மகள், எதிர்காலத்தில் நன்றாக வாழ வேண்டும்; யாரையும் எதிர்பார்த்து இருக்கக் கூடாது' என்பதே. அதற்காகத்தான்
எப்பாடுபட்டாவது அவர்களுக்கு நல்ல வருமானம் ஈட்டித்தரும் கல்வியை அளித்துவிட வேண்டும்’ என நினைக்கின்றனர். இதன் விளைவாகவே கல்லூரிகளும் சிறப்பு வகுப்புகளும் அதிகரிக்கின்றன. ஆனால், பெற்றோர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்.
குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி அவசியம்தான். ஆனால், வாழ்க்கைப்பாடம் அதைவிட அவசியம். ஒருகாலத்தில், வாழ்க்கை என்பது தனக்கான உணவை தானே தயாரித்து உண்டு வாழ்வது என்று இருந்தது. நாளடைவில் அது அடுத்து வரும் சந்ததிக்கான தேவையையும் சேர்த்து நாம் சேமித்துவைக்கவேண்டிதாயிற்று. குடும்பம் என்ற அமைப்புக்குள் பொறுப்பு என்ற சுமை தானாகவே எல்லோர் மீதும் வலிந்து திணிக்கப்பட்டுவிடுகிறது. அதனால் எதிர்காலத்தை எதிர்கொள்ள நம் பிள்ளைகளைத் தயார்செய்யவேண்டியிருக்கிறது. பிள்ளைகளுக்கு பணம், சேமிப்பு, முதலீடு என்பதைப் பற்றியெல்லாம் கற்றுக்கொடுக்கவேண்டியிருக்கிறது.
அதாவது பிள்ளைகளுக்கு நிதிக்கல்வி அவசியம். பணத்தை எப்படிக் கையாள வேண்டும், பணத்தைச் செலவழிப்பதன் வரையறை என்ன, தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும் என்பது என்ன, பணத்தைப் பெருக்கும் வழிகள் என்ன? எல்லாவற்றுக்கும் மேல் பணம் என்பது என்ன, அதற்கும் நமக்குமான உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்… இப்படி, பல கேள்விகளை உள்ளடக்கியதுதான் நிதிக்கல்வி. சேமிப்பது எப்படி, செலவு செய்யும் பணத்தைக் கணக்குவைக்கொள்வது எப்படி, பட்ஜெட் போட்டு செலவுசெய்வது எப்படி, எதிர்காலத் தேவைக்கு முதலீடு செய்வது எப்படி, தொழில்முனைவோராக ஆவது எப்படி, பொருளாதாரம் எப்படிச் செயல்படுகிறது… என்பதையெல்லாம் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். ஜோலைன் காட்ப்ரே என்பவர், குழந்தைகளுக்கு நிதிக்கல்வியை எப்படி போதிக்க வேண்டும் என்பதை, `ரைசிங் ஃபைனான்ஷியலி ஃபிட் கிட்ஸ்’ புத்தகத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
5 முதல் 8 வயது சிறுவர்கள்: இந்த வயதில் குழந்தைகளுக்கு சிறிது பணம் கொடுத்து, செலவு, சேமிப்பு மற்றும் பிறருக்குக் கொடுப்பது ஆகியவற்றைப் பழக்கப்படுத்த வேண்டும். பணம் என்பது என்ன என்பதன் அடிப்படைகளைச் சொல்லித்தர வேண்டும்.
9 முதல் 12 வயது சிறுவர்கள்: இந்தப் பருவத்தில் பிள்ளைகளின் உணர்வு வித்தியாசமாகவே இருக்கும். அவர்களுக்கு ஊக்கம் தரும்படியான விஷயங்களில்தான் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுடைய ஆர்வம் எதில் உள்ளதோ அதை வைத்தே அவர்களுக்கான நிதிக்கல்வியைத் தர முயற்சிக்க வேண்டும். இந்த வயதில் தொழில்முனைவு செய்வது எப்படி, சேமித்த பணத்தை எப்படி உபயோகமானதாக மாற்றுவது போன்றவற்றைச் சொல்லி தர வேண்டும்.
13 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள்: செலவுகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும். சொந்த காலில் நிற்பது என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படி அவர்களை உருவாக்க வேண்டும்.
16 முதல் 18 வயது வரையிலான இளைஞர்கள்: வீட்டில் முக்கியமாக எடுக்கப்படும் நிதி சார்ந்த நடவடிக்கைகளில் அவர்களையும் ஈடுபடுத்த வேண்டும். அவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். இந்த வயதில் தேவையற்றச் செலவுகளைத் தவிர்க்க, அதுவே அவர்களைத் தயார்செய்யும். குடும்பம் என்ற அமைப்புகள் பணம் எப்படியெல்லாம் பங்காற்றுகிறது, குடும்பத்தினரோடு லாபத்தையும் நஷ்டத்தையும் பகிர்ந்துகொள்வது எப்படி என்பதையெல்லாம் கற்றுத்தர வேண்டும். பணம் பற்றி அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுமாறு அவர்களை வழிநடத்த வேண்டும்.
இது போட்டி உலகம். இங்கு நடக்கும் போட்டியில் பணம்தான் பிரதானம். அதற்காக, பணத்தின் பின்னால் ஓட வேண்டும் என்பதோ, பணத்துக்காக எதையும் செய்யலாம் என்பதோ அர்த்தமல்ல. நம்மிடம் இருக்கும் பணத்தைத் திறமையாகக் கையாள்வதும், அந்தப் பணத்தைச் சிறந்த முறையில் பெருக்குவதுமே நிதிக்கல்வியின் நோக்கம்.
‘செபி’யின் இணையதளத்தில் (http://investor.sebi.gov.in/fevernacular.html) ‘பணம்’ என்ற தலைப்பில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் குழந்தை களுக்கான நிதிக்கல்வி விவரங்கள் இருக்கிறது.http://www.nism.ac.in/ என்ற வலைதளத்தில், ‘ஃபைனான் ஷியல் எஜுகேஷன்’ என்கிற தலைப்பில், குழந்தைகளுக்கான நடைமுறை நிதிக்கல்வி, ‘பாக்கெட் மணி’ என்கிற பெயரில் தரப்பட்டிருக்கிறது. இதை டவுன்லோடு செய்து, குழந்தைகளுக்கு கற்றுத் தரலாம்! http://investor.sebi.gov.in/Reference%20Material/pocketmoney.pdf
நன்றி விகடன்.