ஞாயிறு. ஜூலை 27th, 2025

Views: 83

குழந்தைகள் வளர்ப்பதில், வளர்வதில் அல்லது பராமரிப்பதில் பெற்றோர் பங்கு மிகவும் வலிமைமிக்கதாக இருக்கிறது. குழந்தை வீட்டில் வளரும் விதம் அல்லது வளர்க்கப்படும் விதம் அதன் எதிர்காலத்தை அழகும் அர்த்தமும் உள்ளதாக ஆக்கிக்கொள்ள அல்லது அசிங்கம் நிறைந்தாக மாற்றிக்கொள்வதற்கான மிக முக்கிய திறவுகோலாக அமையலாம். குழந்கைள் பராமரிப்பதற்கு முறையான வழிமுறைகள் இருக்கின்றன. குழந்தை வளர்ப்பது ஒரு ‘கலை’ என்றும் குறிப்பிடப்படுகிறது. சரியான முறையில் குழந்தைகளைப்பராமரிக்க வேண்டும் அல்லது வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசையும் அவாவும் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள்.

குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது, அந்தக் குழந்தையுடன் நன்கு உரையாடல் நிகழ்த்துவது. பேசப் பேசத்தான் அந்தக் குழந்தையுடன் நெருக்கமான ஸ்நேகம் பெற்றோர்க்குக் கிடைக்கும். அந்த உரையாடல்களே பிள்ளையின் மனதை நன்கு புரிந்துகொள்ள உதவும். மேலும், அதன் தேவை என்னவென்பதையும் உணர்த்தும். சில விஷயங்களைப் பெற்றோரிடம் கூற, குழந்தை தயங்கிக்கொண்டிருக்கலாம். அந்தத் தயக்கத்தை உடைக்க வேண்டியது குழந்தை வளர்ப்பில் அவசியம்.

பெற்றோர், தங்கள் பிள்ளை பள்ளிக்குச் செல்லும்போது பல ஆலோசனைகளைச் சொல்லி அனுப்புவார்கள். ஆனால், பள்ளி விட்டு வந்த குழந்தையிடம், ‘ஏதாவது பொருளைத் தொலைத்துவிட்டாயா… மதியம் சாப்பிட்டியா…’ போன்ற வழக்கமான சில கேள்விகளைத் தவிர வேறெதும் கேட்பதில்லை. அது சரியானதல்ல. குழந்தை சொல்லத் தயங்கும் அல்லது சொல்ல நினைக்கும் விஷயங்களைப் பெற்றோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த உரையாடலைத் தொடங்க இந்த 5 கேள்விகள் உதவும்.

குழந்தை சிறுநீரை அடக்கிக்கொண்டிருந்தாயா?: இது முக்கியமான கேள்வி. சிறுநீர் கழிக்க எனப் பள்ளியில் இடைவேளை விடுவார்கள். ஆனால், அந்த நேரத்தில் உங்கள் குழந்தைக்குச் சிறுநீரை வெளியேற்றும் உணர்வு வந்திருக்காது. மேலும், அந்த நேரத்தில் ஏதேனும் விளையாடிக்கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. ‘பெல்’ அடித்ததும் வகுப்பில் உட்கார்ந்த, சில நிமிடங்களில் சிறுநீர் வெளியேற்ற வேண்டிய சூழல் வந்திருக்கலாம். ஆனால் ஆசிரியரிடம் கேட்க பயந்துகொண்டு இரண்டு பாடப் பிரிவுகள் முடியும்வரை காத்திருந்திருக்கலாம். இப்படிச் செய்வது உடல் நலத்துக்குக் கேடு என்பதோடு, அந்த நேரத்தில் நடத்தப்படும் பாடத்தையும் புரிந்துகொள்ள முடியாது. எனவே, இந்தக் கேள்வியைக் கேட்க மறக்காதீர்கள்.

உன் உணர்வுகளை யாராவது அவமதித்தார்களா?: குழந்தைகள் மெல்லிய மனம் கொண்டவர்கள். அவர்களின் உணர்வுகளுக்கு அவசியம் மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் செய்யாத தவறுக்கு ஆசிரியர் திட்டியிருக்கலாம். அவர்களின் நிறம், எடை, உயரம் ஆகியவற்றை வைத்து சக மாணவர்கள் கேலி செய்திருக்கலாம். எனவே இந்தக் கேள்வியை எழுப்பி, அப்படியேதும் நடந்திருப்பின் அதைச் சரி செய்ய முயலுங்கள்.

யார் உணர்வையாவது நீ காயப்படுத்தினாயா?: முந்தையக் கேள்வியைப் போலவே இதுவும் அவசியம். அப்படி யாரையேனும் கேலி செய்திருந்தால், தன் உணர்வுகளைப் போலவே அடுத்தவர் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். அட்வைஸாக அல்லாமல் அன்பாகக் கற்றுக்கொடுங்கள்.

யாருக்காவது நன்றியோ, ஸாரியோ சொன்னியா? பள்ளியில் ஆசிரியர் அல்லது சக மாணவர்களிடமிருந்து ஏதேனும் உதவி பெற்றிருந்தால் அதற்கு நன்றி கூறியிருக்க வேண்டும். அதேபோல தன்னால் யாருக்கேனும் சிறு கஷ்டமாயிருந்தாலும் அதற்கு ஸாரி சொல்லிருக்கவும் வேண்டும். இந்தப் பண்பு நல்ல நட்பை உங்கள் குழந்தைக்குப் பெற்றுத்தரும். ஆசிரியர்களிடம் நல்ல மதிப்பையும் பெற்றுத்தரும்.

பள்ளி விதிகளை மீறினாயா? பள்ளியின் விதிகளைப் பின்பற்றுவது ஒவ்வொரு மாணவரின் கடமை. அதை உங்கள் குழந்தை இன்றைக்குச் செய்தார்களா… தவிர்க்க முடியாத சூழலில் விதிகளை மீறினார்களா… எனக் கேளுங்கள். சில விதிகள் குழந்தைக்குக் கடுமையாக இருக்கலாம். அதை அவர்கள் உங்களிடம் சொன்னால், பள்ளியின் நிர்வாகிகளுடன் அதுகுறித்துப் பேசுங்கள்.

இந்த 5 கேள்விகளைத் தொடக்கமாகக் கொண்டு உங்கள் குழந்தைகளுடன் உரையாடலைத் தொடங்குங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். குழந்தை வளர்ப்பில் முழுமையை நோக்கிப் பயணியுங்கள்.

குழந்தை வளர்ப்பு ஒரு கலை. குழந்தை வளர்ப்பில் அழகிய சிக்கலே எந்த நேரத்தில் அவர்களைத் தோளில் சுமக்க வேண்டும், எப்போது அவர்கள் விரல் பிடித்துக் கூட நடக்க வேண்டும், எப்போது வழிகாட்டியாக முன்னே நடந்து செல்லவேண்டும், எப்போது அவர்களை முன்னே நடக்கவிட்டுப் பின்னே நாம் செல்லவேண்டும் என்று அறிந்து, புரிந்து நடப்பதே. குழந்தை வளர்ப்பினை புரிந்து, குழந்தைமையைக் கொண்டாடி, ஆனந்தமான, வலுவான , செறிவான இளைய சமூகத்தைக் கட்டமைக்க முற்படுவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

5 × three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.