திங்கள். ஜூலை 28th, 2025

Views: 463

வணக்கம் அன்பர்களே!! எனது முந்திய பதிவு கோலங்கள்  தொடர்ச்சி தான் இந்த பதிவு.

தமிழ் வீடுகளின் வாசல்களில் செடிகளே இல்லாமல் பூக்கும் பூவாக கோலங்கள் தினந்தோறும் பூக்கின்றன. பழங்காலம் முதல் இது நாள் வரை தமிழர்களின் பண்பாடோடு தொடர்ந்து வருகின்றது கோலக்கலை. கோலம் என்பது அழகினை குறிக்கின்றது. கோலக்கலையை சித்ரக்கலா எனவும் குறிப்பிடுவர். நம்முடைய இந்துக்களின் கலாச்சாரத்தில் அடங்கியுள்ள அனைத்து பழக்க வழக்கங்களுக்கும் ஓர் அர்த்தம் உண்டு. சில பழக்க வழக்கங்களின் பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மறந்துப் போக இவை மூட நம்பிக்கைகள் என முத்திரைக் குத்தப்பட்டுள்ளன.

பொதுவாக, தமிழர்களுடைய வாழ்க்கை முறை என்பது இயற்கையோடு இயைந்து வாழ்கிற வாழ்க்கை முறை. மற்றவர்களை விட நாம் இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள். இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் தெளித்து வாசல் பெருக்கும்போது பிராண வாயு, அதாவது முழுமையான ஆக்ஸிஜன், சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது.

மேலும் குணிந்து பெருக்குதல், குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது. பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி எல்லாம் வருகிறார்கள் என்று ஐதீகம் இருக்கிறது. அவர்களை வரவேற்கும் விதமாகவும் ஒரு மங்களச் சின்னமாக தமிழர்கள் வாழ்க்கை முறையில் இருந்து கொண்டு இருக்கிறது.

கோலம் எப்போது, எப்படிப் போட வேண்டும்:

அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்னரே கோலமிடவேண்டும். வீட்டு வாசலை அழகாகச் சுத்தப்படுத்தி, வாசலில் பசுஞ்சாணம் தெளித்து கோலம் போடவேண்டும். முடியாதவர்கள் நீர் தெளித்தும் கோலம் இடலாம்.
ஆனால், ஏற்கெனவே பயன்படுத்தாத தூய்மையான தண்ணீரில்தான் வாசலைச் சுத்தப் படுத்தவேண்டும். அரிசி மாவில் கோலமிடுவது சிறப்பான ஒன்று. கோலத்தின் தொடக்கம் மற்றும் முடிவானது, அதன் மேற்புறமாகத்தான் இருக்கவேண்டும். கோலம் வரைந்ததும் அதன்மீது காவி வண்ணத்தை தீட்டலாம். கோலத்தில், சானத்தின் பசுமையானது விஷ்ணுபெருமானையும், மாவின் வெண்மையானது பிரம்மாவையும், காவியின் செம்மையானது பரமேஸ்வரரையும் குறிக்கின்றன. கோலமிட்ட பின்னர் பூசணி, செம்பருத்தி போன்ற மலர்களை அதன் நடுவே வைக்கவேண்டும். இது நமக்கு செல்வச்செழிப்பைத் கோலம்தரக்கூடியது.

கோலமிடும்போது கவனிக்க வேண்டியவை:

வலது கையால்தான் கோலமிடவேண்டும். இடதுகையால் கோலமிடக்கூடாது. ஆள்காட்டி விரலைத் தவிர்த்து பிற விரல்களை வைத்துதான் கோலமிடவேண்டும்.
குனிந்தபடி நின்றுதான் கோலம் போடவேண்டுமே தவிர, அமர்ந்துகொண்டு கோலம் போடக்கூடாது. தெற்கு திசையை நோக்கியோ, அல்லது தெற்கு திசையில் முடியும்படி கோலமிடக்கூடாது.
வாசல்படிகளில் குறுக்குக்கோடுகள் போடக்கூடாது. சுபதினங்களில் ஒற்றைக்கோடுகளில் கோலம் இருக்கக்கூடாது. இரட்டைக் கோடுகளாகத்தான் இருக்க வேண்டும்.
தெய்விக வடிவங்களைக் குறிக்கும் கோலங்களை வீட்டுவாசலில் போடக் கூடாது. தெய்விக யந்திரங்களைக் குறிக்கும் ஹ்ருதய கமலம், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் , நவகிரக கோலங்கள், போன்றவற்றை பூஜை அறைகளில் மட்டும்தான் போடவேண்டும். மேலும், இதை அரிசி மாவிலோ அல்லது மஞ்சளிலோ மட்டும்தான் போடவேண்டும். அமாவாசை மற்றும் முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்யும் நாள்களில் கோலம் போடக்கூடாது.

எந்தெந்த நாள்களில் எந்தக் கோலமிடவேண்டும்:

ஞாயிறு – சூரியக்கோலம், செந்தாமரைக் கோலம்
திங்கள் – அல்லிமலர்க் கோலம்
செவ்வாய் – வில்வ இலைக்கோலம்
புதன் – மாவிலைக் கோலம்
வியாழன் – துளசிமாடக் கோலம்
வெள்ளி மற்றும் பௌர்ணமி – தாமரைக் கோலம் (எட்டு இதழ்)
சனி – பவளமல்லிக் கோலம்.

கோலமிடுவதால் உண்டாகும் நன்மைகள்

இல்லங்களில் லட்சுமி கடாக்ஷம் உண்டாகும்.
துர்சக்திகள் நம் வீட்டிற்குள் நுழையாது.
அரிசிமாவினால் கோலமிடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.
சுவரையொட்டி போடப்படும் பார்டர் கோலங்கள் தீய சக்திகளைத் தடுக்கும் வல்லமைகொண்டது.
கோலத்தின் 8 பக்கங்களிலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
சாணமிடுவது கிருமிநாசினியாகச் செயல்படும்.
மார்கழி மாதங்களில் அதிகாலையில் எழுந்து கோலமிட்டு இறைவனைத் தொழுவது, உடலுக்கு ஆரோக்கியத்தையும், உள்ளத்திற்கு எண்ணற்ற மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

கோலத்தின் வகைகள்

தமிழர்களது பண்பாட்டில் ஒன்றான கோலம் பல்வேறு வகையாக வரையப்படுகின்றன. மாக்கோலம் (அரிசி மாவு), புள்ளிக் கோலம், இழைக் கோலம், சிக்கு கோலம், அங்கக் கோலம், ரங்கோலி, மணற் கோலம், வெள்ளைக்கல் மாவுக் கோலம், பூக் கோலம், பயறு கோலம் முதலியவை குறிப்பிடத்தக்கவை. கோலத்தை எடுப்பாக காட்டுவதற்கு காவி நிறத்தையும் பயன்படுத்துவர். மேலும் வண்ண நிறங்களை பயன்படுத்தியும் கோலங்கள் வரையப் படுகின்றன. மார்கழி மாதங்களில் வண்ணக் கோலங்களின் மத்தியில் சாண உருண்டை பிடிக்கப்பட்டு, அதன் மேல் பரங்கி பூவை வைத்து அலங்கரிப்பதும் தமிழர்களின் வழக்கம்.

கோலம் பலவகைப்படும். பிறந்த குழந்தையை வரவேரற்க தொட்டில் கோலம்; சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என அடுக்கிக் கொண்டே போகலாம். கோலம் ஒருவகை யந்திரமாகக் கருதப்படுகிறது. அதனாலே இவை வீட்டு வாசலில் வரையப்பட்டன. மேலும் மார்கழியின் போது கோலம் போடுவது அவசியம் என்பதற்கு முக்கியக் காரணமும் உண்டு.

கோலங்களை அவை வரையப்படும் முறையை ஒட்டி இரண்டு பிரிவுகளாக வகுக்க முடியும். கம்பிக் கோலம்,புள்ளிக் கோலம்

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?

மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.

மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழ்வதாக கூறுகின்றனர். இந்த மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது பூமினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின் போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதோடு கோலம் கலையாமல் இருக்க உதவுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்னவென்றால் சானம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும். மேலும் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை கொடுக்கிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கமேலும் இந்த புள்ளிக் கோலத்தை போடும் போது உங்கள் கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும். அதனால்தான் நம்முடைய பாட்டிகளின் கண்பார்வை நம்மை விட கூர்மையாக இருக்கும். ொள்ள உதவும்.

கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும். யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்றபோது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது. அதனால், வருபவர் கோபம் தணிந்துதான் வீட்டுக்குள்ளே வருவார். இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள். பசு சாணம் ஒரு கிருமிநாசினி என்பதும் நாம் மறந்து போன விஷயம். அடுக்குமாடிகளில் முடங்கிவிட்ட நம் பெண்களுக்கு, கோலம் என்னும் இயற்கை யோகாவை சொல்லிக் கொடுப்போம். வாரம் ஒருமுறையாவது பிரம்ம முகூர்த்தத்தில் அந்த வாழ்வியல் யோகாவை பழக்கமாக்கிக் கொள்ள பயிற்சி தருவோம். இனியும் உங்கள் வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போட பழகிக்கொள்ளுங்கள். உங்கள் வீடு அடுக்குமாடி குடியிறுப்பில் இருந்தாலும் பிரச்சனை இல்லை. உங்கள் வீட்டின் முன் இருக்கும் சிறிய வாசலில் சிறிய கோலமிட்டு அனுதினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

5 + 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.