Views: 339
காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது. உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும். ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூய காற்று இன்றியமையாதது நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக எண்ணி வணங்கினர். பஞ்ச பூதங்களான காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு இவற்றின் தொகுப்புதான் உலகமாகும். மனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது.இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான். மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனைநிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்து இயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட பிரதேசமாக மாற்றினான். மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள்.
தமிழில் பண்டைக்காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்கு தனித்தனி பெயர் இடப்பட்டு உள்ளது.
வாடை – வடக்கில் இருந்து வீசும் காற்று
சோழகம் – தெற்கில் இருந்து வீசும் காற்று
கொண்டல் – கிழக்கில் இருந்து வீசும் காற்று
கச்சான் (காற்று) – மேற்கில் இருந்து வீசும் காற்று
காற்றின் தரம்: காற்றில் உள்ள தூசி, புகை போன்ற நுண்துகள்களைக் (Fine Particles) கொண்டு அதன் தரம் அளவிடப்படுகிறது. ‘PM 2.5’, ‘PM 10’ என்று 2 வகையாக காற்றின் தரத்தை நிர்ணயிக்கின்றனர்.
வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம் !!! காற்று மாசடைவதை தடுப்போம் !!