சனி. மே 24th, 2025

Views: 157

உலகின் கடல்களை பாதுகாப்பதற்காகவும், மற்றும் கெளரவிக்கிற வகையிலும், ‘உலக பெருங்கடல்கள் நாள்’ ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கடல் ஆக்சிசன், காலநிலை கட்டுப்பாடு, உணவு மூலாதாரங்கள், மருத்துவம், மற்றும் இன்னும் பல வளங்கள் மற்றும் சேவைகள் நமக்கு வழங்குகிறது. உலக பெருங்கடல்கள் நாள், பெருங்கடல் மற்றும் அதன் ஆதாரங்களைப் பாதுகாக்க தனிப்பட்ட, மற்றும் சமூக ஒருங்கிணைப்புடன் நடவடிக்கை எடுக்க ஒரு தனிப்பட்ட வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
உலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களின் சமுத்திரங்களும், எங்களின் பொறுப்புகளும் “Our oceans, our responsibility ” எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2009 ஜூன் 8ம் தேதி செயற்பாட்டு நிகழ்ச்சி நிரலை ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ளது.. இதே நாளில் 1992 ஜுன் மாதத்தில் பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ Rio de Janerio நகரில் நடைபெற்ற “புவி மாநாட்டின் போது” EARTH – SUMMIT சமுத்திரங்கள் மனித சமூகத்திற்கு வழங்கும் செல்வங்களை இனங்கண்டு மக்கள் மத்தியில் சமுத்திரதினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதன்படி 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் தேதியிலிருந்து உலக சமுத்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை 63/iiiம் தீர்மானத்தின்படி முடிவெடுத்துள்ளது.

இவ்வுலகு நான்கில் மூன்று பாகம் கடலால் நிரம்பியுள்ளது. மனித இனம் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் கடலை நம்பித்தான் உயிர்வாழ்கின்றன. கடலை நாம், சாதாரணமாக பார்க்கும் போது நீல வண்ணம் பவளம் போர்த்தியது போல் காட்சி தரலாம், கடலின் உள்ளே மனிதன் இதுவரை கண்டறியாத பல அறிவியல் அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன. நமது அறிவியலாளர்கள் ஹப்பில் தொலைநோக்கி மூலம் நமது பால்வெளியையும் தாண்டி வேற்று பால்வெளியை (ஆண்டிரோமீடா) கண்டுவிட்டனர். ஆனால் தினசரி காணம் கடலில் வெறும் 30 விழுக்காடு  மட்டுமே அறிந்துள்ளோம். அதே வேளையில் 70 விழுக்காடு கடலை நாம் வெறும் ஊகத்தின் அடிப்படையில்தான் இப்படி இருக்கலாம் என்று அறிந்து வருகிறோம்.

ஒரு திறந்த பெருங்கடலின் ஒரு லிட்டர் நீரில் 35 கிராம் திடப்பொருளைக் கொண்டுள்ளது. அது 35 ‰ என்று குறிப்பிடப்படுகிறது. (பெருங்கடலின் 90% நீரானது 34‰ முதல் 35‰ வரையிலான உவர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ளன). நடுநிலக் கடல் சிறிது அதிகமாக 37 ‰ என்ற அளவைக் கொண்டுள்ளது. அந்த நீரில் சாதாரண உப்பு, சோடியம், குளோரைடு ஆகியவை 85 விழுக்காட்டு அளவில் உள்ளன. மேலும் அதில் மக்னீசியம், கால்சியம் ஆகியவற்றின் உலோக அயனிகளும், சல்ஃபேட், கார்பனேட், புரோமைடு போன்றவற்றின் எதிர்மின் அயனிகளும் கரைந்துள்ளன.

கடல் மக்களுக்குக் கணிசமான அளவு உணவுப் பொருட்களைத் தருகிறது. இதில் முதன்மையானதாக மீன், ஆளிகள், கடல்வாழ் பாலூட்டிகள், கடல்பாசி போன்றவை அடங்கும். கடல்பாசிகள் காட்டில் அறுவடை செய்யப்பட்டோ நீருக்கடியில் வளர்க்கப்பட்டோ கிடைக்கின்றன.

கடல்களின் தொடர்ச்சி, முடிவு கண்டறியப்பட முடியாததைப்போல. கடலின் ஆழத்தில் என்னயிருக்கிறது என்பதை இதுவரை முழுமையாக கண்டறிய முடியாமல் இன்னமும் உலக கடலியல் ஆய்வாளர்கள் திணறிக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வளவு ரகசியத்தை தன்னில் வைத்துக்கொண்டுள்ளது பெருங்கடல். ஆனால், தங்க முட்டையிடும் வாத்துவின் வயிற்றை பேராசைப்பட்டு கிழித்த கதைப்போல நம் மனித இனம் பேராசையில் கடல் வளத்தை அழிக்கிறது.

கடற்கரையில் விடுதிகள் அதிகமானதால், அதன் மின்வெளிச்சங்கள் கடற் உயிரினங்கள் தரைக்கு வந்து முட்டையிடுவது, சந்ததியை உருவாக்குவது தடைபடுகிறது. அதோடு, அட்லாண்டிக் பனிப்பிரதேசம் உருகுவதால் கடல் நீர் மட்டத்தின் உயரம் அதிகரிக்கிறது என்கிறார்கள் நீரியல் வல்லுநர்கள். இது தொடர்ந்தால் சிலப்பல நாடுகள் அழியும் என ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடல் ஆகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். உலகின் குப்பை கூடமாக மாறும் இந்தியப்பெருங்கடல் முக்கியமாக இந்தியப்பெருங்கடல் உலகின் வியாபாரப் பாதையாக மாறிவிட்ட சூழலில் மற்ற எந்த கடலையும் விட அதிக அளவு மாசுபடுகிறது. இந்திய பெருங்கடல் நாடுகளில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூரைத் தவிர மற்ற நாடுகள் இந்தியா உட்பட அனைத்தும் வறுமை தாண்டவமாடும் நாடுகள்தான், இந்தியப்பெருங்கடலில் ஏற்படும் மாசுக்கள் இந்த ஏழை நாடுகளை மேலும் பாதிக்கும் அபாயம் ஏற்படும் சூழல் நெருங்கி வருகிறது. நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) எனும், நெடுங்காலம் அழியாத்தன்மை உடைய நெகிழியின் குப்பை கடல்களைச் சீரழிக்கிறது. மாசுபாட்டினால் கடல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. உலக பெருங்கடல்கள் நாள், பெருங்கடல் மற்றும் அதன் ஆதாரங்களைப் பாதுகாக்க தனிப்பட்ட, மற்றும் சமூக ஒருங்கிணைப்புடன் நடவடிக்கை எடுக்க ஒரு தனிப்பட்ட வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

உலகப் பெருங்கடல்கள் நாள், ஜூன் 8, வருகிற வியாழனன்று கடைப்பிடிக்கப்படும்வேளை, ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலகப் பெருங்கடல்கள் பற்றிய முதல் மாநாட்டை வரும் வாரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஜூன் 5ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடைபெறும் இதில் கடல் அழிப்பு, அதனால் ஏற்படும் காலநிலை மாற்றம், கடலை பாதுகாப்பது சம்மந்தமாக ஆலோசனை நடத்துகிறது. இம்மாநாட்டில், பெருங்கடல்கள் வெப்பமடைந்து வருதல், கடல்வாழ் உயிரினங்களின் அழிவு, பிளாஸ்டிக் பொருள்கள் குவிப்பு போன்ற விவகாரங்கள் பற்றிப் பேசப்படும் என, ஐ.நா.  அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலை பாதுகாப்பது மனித இனத்தை பாதுகாப்பதாகும். அதனால் மனித இனமான நாம் கடலை பாதுகாக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதை அழிக்காமல் இருந்தால் போதும்.

வாழ்க வளமுடன்!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

five + 19 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.