Views: 110
எனது முதல் பதிவின் வைகாசி விசாகம் தொடர்ச்சி.
முருகப்பெருமான் அருள்பாலிக்கும் தலங்கள்
- முருகப்பெருமான் வடக்கு திசை நோக்கி தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் தலம் கல்லணையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் திருவிழாவில் 5-ம் நாள் நடைபெறும் தீமிதித் திருவிழா, மிகவும் பிரபலம். பிரமாண்டமான பூக்குழியை பலநூறு பக்தர்கள் ஆவேசம் பொங்க கடந்து செல்லும் காட்சி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.
-
திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள மேலகல்கந்தார் கோட்டையில் உள்ளது பாலமுருகன் ஆலயம். கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் இருக்க, அவருக்கு முன் அன்னை மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் பாலமுருகனுக்கு பாதுகாவலாய் உள்ளாள். அன்னையுடன் அருள்பாலிக்கும் பாலமுருகனை வணங்குவதால், குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
-
லால்குடியிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மணக்கால் சுப்ரமணியசுவாமி கோயில். வைகாசி விசாகம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் நடைபெறும் இந்த ஆலயத் திருவிழாவின் போது அருகிலுள்ள வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சகிதராக இங்கு வந்து சேவை சாதிப்பது ஓர் அபூர்வ நிகழ்ச்சி!
-
சீர்காழிக்கு மேற்கே 4 கி.மீ. யில் கொண்டல் என்ற கிராமத்தில் அருள்பாலிக்கிறார் குமார சுப்ரமணிய சுவாமி. தங்கள் மகளுக்கு மணமாக வேண்டும் என்று எண்ணும் பெற்றோரும் மனம் விரும்பியவரைக் கரம் பிடிக்க விரும்பும் கன்னியரும் இந்த ஆலயம் வந்து முருகனிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
-
திருச்சி-சென்னை நெடுஞ் சாலையில் திருச்சியிலிருந்து 44 கி.மீ.யில் செட்டிகுளம் என்ற தலத்தில் உள்ளது, தண்டாயுதபாணி ஆலயம். குழந்தைப்பேறு வேண்டி இந்த முருகனைப் பிரார்த்திக்கும் தம்பதியர் வேண்டுதல் நிறைவேறியதும் அக்குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்து, பிரார்த்தனையை நிறைவேற்றும் காட்சி உள்ளத்தை சிலிர்க்க வைக்கும்!
-
கோவை காந்திபுரத்திலிருந்து 8 கி.மீ.யில் உள்ளது பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம். கிரகப் பெயர்ச்சி நாட்களில் இந்த ஆலயத்தில் பலவகை மூலிகைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற விசேஷ யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொள்வதால், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்பு கணிசமாக குறைவது கண்கூடு.
-
திருப்பூர்-நம்பியூர் பாதையில் 15கி.மீ. தூரத்தில் உள்ள உதயகிரியில் முத்து வேலாயுத சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள பாறை ஒன்றில் ஐந்து தலை நாகமொன்று புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து நாகதோஷ நிவர்த்தி செய்துகொள்கின்றனர். இவ்வாலயத்திலுள்ள கால பைரவருக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. அதுபோலவே சகஸ்ரலிங்கம், பஞ்சலிங்கங்களுக்கும் தனித் தனி விமானங்களுடன் கூடிய சன்னதிகள் அமைந்துள்ளன. ஆலயத்தின் மதிற் சுவர்களில் மீன் இலட்சணைகள் சிற்பங்களாக உள்ளதால் இக்கோயில் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் அமையப் பெற்றதோ எனத் தோன்றுகிறது. ஆலயத்தின் வடபுறம் அழகிய சரவணப் பொய்கையுள்ளது.
-
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோயிலில் ஒரு தனிச் சிறப்பு உள்ளது. கொடிமரத்திலிருந்து வலமாக எல்லாச் சன்னதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்துத் தருவார்கள். இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் பன்னிரண்டு நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் பன்னிரண்டு திருக்கரங்களாகும்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை. பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப்படுகின்றது.
- பூனாவில் உள்ள பார்வதிமலை கோயிலில் முருகப்பெருமான் பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டு ஆறுமுகங்களுடன் காட்சி தருகிறார்.
-
திருக்கழுக்குன்றம் மலை மீதுள்ள வேதகிரீசுவரர் ஆலயத்தில் முருகப்பெருமான் ஆறு திருக்கரங்கள் கொண்டு மயில் மீது அமர்ந்த நிலையில் தேவியர் இருவருடன் காட்சி தருகிறார். மயிலின் திருமுகம் வடக்கு நோக்கியுள்ளது. மற்றொரு சன்னதியில் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு, நின்ற கோலத்தில் இருபுறமும் தேவியர் இருக்கக் காட்சி தருகிறார் கந்தன்.
-
சென்னிமலையில் இரண்டு முகங்கள், எட்டு கரங்கள் கொண்டு யாக அக்னியை வளர்க்கும் அக்னி ஜாதகர் என்னும் அரிய திருவுருவத்தில் இருக்கின்றார்.
-
கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலை. இங்குள்ள முருகன் கோயிலிலுள்ள முருகன் ஆறு கரங்களுடன் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இங்கு முருகனின் இடப்பக்கத்தில் மயில் உள்ளது. ஆலயத்திலுள்ள நூறு தூண்களிலும் ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் உருவங்கள் காட்சி அளிக்கின்றன.
-
விராலிமலை மூலவர் சண்முகர், மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். இத்தலப் பெருமானுக்கு சுருட்டு நிவேதனம் செய்கிறார்கள்.
-
குழந்தை வடிவில் மயிலுடன் காட்சிதரும் முருகனை, நாகர்கோயிலிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள வெள்ளிமலை மேல் உள்ள கோயிலில் தரிசிக்கலாம்.
-
திருச்செந்தூரில் தியானக் கோலத்தில் காட்சிதரும் முருகன், செம்பனார்கோயிலில் ஜடா மகுடத்துடன் தவக்கோலத்தில் அருள்புரிகிறார்.
-
மானாமதுரையிலுள்ள சிவன் கோயிலில், ஐந்து தலை நாகத்துடன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
-
கனககிரி திருத்தலத்தில் கிளி ஏந்திய நிலையில் காட்சி தரும் முருகப்பெருமான், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.
-
வில். அம்பு ஏந்தி வேட்டைக்குச் செல்வதுபோல் திருவையாறு திருத்தலத்தில் காட்சிதரும் முருகப்பெருமான், கையில் வஜ்ராயுதம் ஏந்திய நிலையில் சுவாமிமலை மற்றும் திருவிடைக்கழி ஆகிய திருத்தலங்களில் அருள்பாலிக்கிறார்.
-
திருமயிலாடி, அனந்தமங்கலம், வில்லுடையான் பட்டு, சாயக்காடு, திருக்கடவூர் மயானம் ஆகிய திருத்தலங்களில் வில்லுடனும் முருகன் காட்சியளிக்கிறார்.
-
கும்பகோணம் அருகிலுள்ள அழகாபுத்தூர் திருத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சி தரும் முருகன், புதுக்கோட்டை அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் திருத்தலத்தில் ஒரு கரத்தில் ஜபமாலையுடனும், சின்முத்திரையுடனும் காட்சி தருகிறார்.
-
கரூர் மாவட்டம் வெங்கமேடு ஆலயத்தில், வேலாயுதமும் தேவியர் இருவரும் இன்றி தனித்து அருள்புரியும் முருகப்பெருமான், திருச்சி உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலில் தனிச் சன்னதியில் ஆவுடையில் நின்ற கோலத்தில் அருளாட்சி புரிகிறார்.
-
கழுகுமலை, கோடியக்கரை, அழகர்கோயில் ஆகிய திருத்தலங்களில் ஒரு முகம் மற்றும் ஆறு கரங்களுடன் திகழும் முருகப்பெருமான், குடந்தையிலுள்ள வியாழ சோமநாதர் ஆலயத்தில், காலில் பாதரட்சையுடன் அருள் தருகிறார்.
-
மருதமலையில் குதிரைமீது அமர்ந்தும், மருங்கூரில் ஆடு வாகனத்தின் மீதும், சென்னை மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமத்தில் நாகத்தின்மீதும், காங்கேயம் அய்யப்பன் ஆலயத்தில் மீன்மீது நின்றும், திருத்தணி, திருப்பரங்குன்றம், வேலூர், ரத்தினகிரி, பிரான்மலை ஆகிய திருத்தலங்களில் யானையை வாகனமாகக் கொண்டும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
-
தென்காசிக்கு அருகில் உள்ள இலஞ்சி முருகன் கோயிலில் மிக வித்தியாசமாகக் காணிக்கை செலுத்துகிறார்கள் பக்தர்கள். இங்குள்ள முருகப் பெருமானை பிரார்த்திக்கும் அடியவர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதும், மாதுளை முத்துக்களால் ஆன வேல் மற்றும் சேவல் கொடியைக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
-
பழனிமலை முருகப் பெருமானுக்கு தினமும் இரவு திருக்காப்பிடுதல் வைபவம் நிகழும். முன்னதாக ஆண்டவனின் திருமேனியில் சந்தனம் சாற்றப்படும். இந்த சந்தனத்தை மறுநாள் காலையில் பிரசாதமாக தருவார்கள். இந்தப் பிரசாதத்தை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
-
தமிழ்நாட்டில் அறுபடை வீடு முருகனுக்கு இருப்பது போல் இலங்கையிலும் முருகனின் ஆறு கோயில்கள் விசேஷமாகக் கருதப்படுகிறது. இதை முருகனுக்குரிய அறுபடை வீடுகளாக சொல்கின்றனர். கதிர்காமம், நல்லூர் கோயில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லூன்றி, மேலைப் புலிவேலி என்பவையே அறுபடை வீடுகளாகப் போற்றப்பெறுகின்றன.
-
ஸ்ரீலங்காவில் உள்ள கதிர்காமம் வரலாற்றுப் புகழ்பெற்ற தலம். கதிர்காம மலையே புனிதமானது. ஸ்வாமி ஜோதி வடிவில் வணங்கப்படுகிறார். இங்கே அருவ வழிபாடு நடைபெறுகிறது. அதாவது, உருவத் திருமேனிகள் இல்லை. சன்னதி திரையால் மூடப்பட்டிருக்கும். உள்ளே சடாட்சர மந்திர வடிவாக அமைக்கப்பட்ட இயந்திரம் உள்ளதாகக் கூறுவர். முருகனுக்கு பூஜை புரிபவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மவுனமாய் பூஜிப்பதே வழக்கம்.
-
தமிழ்நாட்டில் கடலூர் அருகில் உள்ள திருமாணிக்குழி சிவன் கோயிலிலும் இப்படி திரைக்குப் பின் பூஜை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பொன்னேரிக்கு அருகில் பெரும்பேடு என்ற தலத்தில் முருகப் பெருமான் ஆறரை அடி உயரத்தில் காட்சி தருகிறார். இடதுபுறம் உள்ள தெய்வானை கிரீடத்துடனும், வலதுபுறம் உள்ள வள்ளி, குறத்திக் கொண்டையுடன் நிற்கிறார்கள். அற்புதமான அமைப்பு இது.
-
திருத்தணி முருகனின் மார்புப் பகுதியில் ஒரு குழி இருப்பதை அபிஷேக நேரங்களில் காணலாம். தாரகாசுரனால் ஏவப்பட்ட சக்கரத்தை தன் மார்பில் ஏந்தி அங்கேயே பதித்துக் கொண்டதாகவும், பிறகு தம்மைத் திருமால் வேண்டி பூஜித்தபோது மார்பிலிருந்த சக்கரத்தை திருமாலுக்கு முருகன் வழங்கியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அதனால்தான் மார்பில் பள்ளமாகக் காட்சி தருகிறது.
-
கரூர் அருகேயுள்ள திருத்தலம் வெண்ணெய் மலை. இங்கு வேல், மயில் இல்லாமலும், வள்ளி – தெய்வானை தேவியர் இல்லாமலும் தனித்துக் காட்சி தருகிறார் முருகப்பெருமான்.
-
அசுர சேனைகளை அழித்தொழித்த முருகப் பெருமான், அவர்களை மூன்று இடங்களில் எதிர்கொண்டாராம். அவை, நீரில் போர்புரிந்த இடம் – திருச்செந்தூர்; நிலத்தில் போர் புரிந்த இடம் – திருப்பரங்குன்றம்; இறுதியாக விண்ணிலே போர் புரிந்த இடம் – திருப்போரூர்.
-
சென்னை – குன்றத்தூர் முருகன் கோயிலில், தம்பதி சமேதராக திகழும் சுப்ரமணிய சுவாமியை தரிசிக்கலாம். இந்தக் கோயிலின் கருவறை வித்தியாசமாக அமைந்துள்ளது. ஆம்… கருவறையில் அருள்பாலிக்கும் முருகன். வள்ளி – தெய்வானை ஆகியோரை ஒன்றாகத் தரிசனம் செய்ய முடியாது. சன்னதிக்கு நேராக நின்று பார்க்கும்போது முருகப்பெருமானும், ஒருபுறம் நகர்ந்து பார்க்கும்போது வள்ளியும், மறுபுறம் நகர்ந்தால் தெய்வானையும் தெரிவார்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை முருகப் பெருமான் திருமணம் செய்துகொண்டு திரும்பும் வழியில் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள செஞ்சேரி மலையில் தங்கியதாகக் கூறப்படுகிறது. இத்தலத்து மூலவர் ஆறு திருக்கரங்களுடன் காட்சியளிப்பது சிறப்பான ஒன்றாகும்.
பன்னிரு கரங்களின் பணி: முருகனின் பன்னிரு கரங்கள் செய்யும் பணிகள் என்னவென்று தெரியுமா? இரு கைகள் தேவரையும் முனிவரையும் காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் இருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அருள்பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கின்றது. பத்தாவது கை மணியை ஒலிக்கின்றது (அருளோசை). பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.
வைகாசி வழிபாடு
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.
வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ள லாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.
முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.
குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால் அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி. திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
இந்த விரதத்தை ஆண்களும் இருக்கலாம். அன்றைய தினம் பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து ஆறுமுகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்வர். அன்றைய தினம் விரதமிருந்து ஒரு வேளை உணவு உண்டு முருகனை தியானிடத்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
வைகாசி விசாக நன்னாளில், முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
காளிதாசர் எழுதிய, “குமார சம்பவம்’ எனும் நூலில், முருகப்பெருமானின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. சம்பவம் என்றால், தோன்றுதல் குமரனின் தோற்றத்தைப் பற்றிய நூல் என்பதால், இந்தப் பெயர் வைக்கப்பட்டது. காளிதாசர் இந்தத் தலைப்பை வால்மீகி ராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுத்தார்.
வைகாசி விசாகத்திருநாளில் குடும்பத்தினர் அனைவரும் கூட்டாக அமர்ந்து இந்த பிரார்த்தனையைச் செய்து, குமரன் அருள் பெறுங்கள்.