Views: 70
இந்த உலகில் பெற்ற தாய்க்கு இணையாக வேறு யாரும் இல்லை. இதனால்தான் பலர் ஈன்ற தாயை தெய்வமாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். தான் பெற்ற குழந்தைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் அந்த தாய்க்கு இணையாக வேறு யாரை குறிப்பிட முடியும்? இந்த தியாகத்தை கவுரவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
உலகில் அன்னையர் தின வரலாற்று சுவடுகளை தேடிக் கொண்டு போனால் பண்டைய எகிப்திய காலம் வரை அவை உங்களைக் கூட்டிச் செல்லும். பண்டைய காலங்களில் அன்னைக்கான மேன்மையையும் பெருமையையும் மானுட அன்னையரை விட அமானுஷ்யமாயிருந்த இயற்கை அன்னைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் என்று சொல்லலாம்.
இந்த வகையில் பண்டைய எகிப்தியர் தான் அநேகமாக உலகில் முதல் அன்னையர் தினத்தைக் கொண்டாடியவர்கள் என சொல்லலாம். இவர்கள் ஐஸிஸ் என்ற பெண் கடவுளை மேன்மைப்படுத்தும் வகையில் இந்நாளைக் கொண்டாடினர். இந்த பெண் தெய்வமான ஐஸிஸ் (mother of hours) இயற்கை அன்னையாக போற்றப்பட்ட தெய்வமாகும். இந்தப்பெண் தெய்வமானது அடிமைகளுக்கும் , தாழ்த்தப்பட்டோருக்கும் , நோய்வாய்ப்பட்டோருக்கும், சிநேகமானவளாயும், ஏழை எளியோரின் பிராத்தனைகளை செவிமடுப்பவளாயும் நம்பப்பட்ட தெய்வமாகும்.
அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த ஐரோப்பியர்கள் வாழ்வில் பிரிட்டிஷ் நாட்டில் வழக்கபடுத்திக் கொண்ட மதரிங் சண்டே பாரம்பரியம் நாளடைவில் மறைந்து போய் சில நூற்றாண்டு காலத்தில் அது மறைந்தே போய்விட்டது எனலாம். அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த ஐரோப்பியரின் வாழ்வு மிகவும் நெருக்கடியும், நீண்ட நேர உழைப்புக்கு பலவந்தமாக உந்தப்பட்டவர்களாயுமிருந்ததாலும் அவர்களால் ஐரோப்பாவில் பின்பற்றிய பாரம்பரியங்களை தொடரமுடியாமல் போனதன் காரணம்.
முதன் முதலாக வட அமெரிக்காவில் 1870ஆம் ஆண்டில் ஜூலியா வார்ட் ஹோவ் (Julia Ward Howe) என்ற தாயார் “அன்னையர் தினத்தை” பற்றி பிரகடனம் செய்தார். அமெரிக்காவில் நடந்த சிவில் யுத்தத்தில் இறந்தவர்களின் மறைவும் , யுத்தம் கொடுத்த பேரழிவும் ஜூலியா வார்ட் அவர்களை மிகவும் பாதித்தது. ஒரு தாயின் மகன் இன்னொரு தாயின் மகனை கொல்லும் அடிப்படையிலான யுத்தங்களை எதிர்க்கும் நாளாக அன்னையர் தினத்தை முன்னிறுத்தி யுத்த களத்திலிருக்கும் வீரர்களுக்காக குரல் கொடுக்க அனைத்துலக தாய்மாரையும் ஒன்றிணையச் சொல்லி அழைப்பு விடுத்தார். உலகின் அமைதியையும் தாய்மையும் பேணும் நாளாக அன்னையர் தினம் உலகளவில் கொண்டாடப்பட வேண்டும் என்று அந்த அம்மையார் விரும்பினார்.
அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4ம் திகதியைத் தான் அன்னையர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று விரும்பினார். ஆனால் ஜூன் 2ம் திகதி யை வட அமெரிக்க மகளிர் சங்கங்கள் புதிய அன்னையர் தினமாக 1873ம் ஆண்டு பிரகடனம் செய்தன. அன்னையர் தின கொண்டாட்டங்களுக்காக ஜூலியா தான் நிதியுதவி செய்தார். அவர் இறந்த பின்னும் போஸ்டன் நகரில் 10 வருடங்கள் கொண்டாடினார்கள். அதன் பின் அந்த அன்னையர் தினக் கொண்டாட்டமும் இடை நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த அன்னை எடுத்த முயற்சி குறைந்த ஆயுளுடன் முடிந்துவிட்டாலும் அவர் அன்றைக்கு வித்திட்டது தான் இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினத்துக்கு வழிகாட்டலாக அமைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அன்னையர் தினத்துக்கான அவருடைய நோக்கம் போற்றப்பட வேண்டியது. சமூக அக்கறையின் அடையாளமாக அன்னையர் தினம் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பியது போற்றப்பட வேண்டியது.
பின்னாளில் அனா ரிவீஸ் ஜார்விஸ் ( Anna Reeves Jarvis) என்ற பெண்மணி தான் நடத்திக் கொண்டிருந்த அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜினியா மகளிர் அமைப்பின் மூலம் ஜூலியா வார்ட் ஹோவின் அன்னையர் தின த்தை தத்தெடுத்து நடாத்த விரும்பினார். சிவில் யுத்தத்தால் பிரிந்த சொந்தங்களை ஒன்று சேர்க்கும் நாளாக அன்னையர் தினத்தை உபயோகிக்க அவர் விளைந்தார்.
அனா தன் மகளுடன் இரவு நேரப் பிராத்தனைகளின் போதெல்லாம் அன்னையருக்கென்று ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஒரு வேண்டுதலாகவே வைப்பாராம். அதுவே அவர் மகள் அன்னா மேரி ஜார்விஸ் (Anna Mary. Jarvis ) மனதில் ஆழப்பதிந்து விட்டது.
அன்னா மேரி தன் தாயாரின் மறைவுக்கு பின் உத்தியோகபூர்வமாக அன்னையர் தினத்தை உலகின் அமைதிக்காகவும் அன்னையரை பெருமைப்படுத்தும் முகமாகவும் நாட்டின் தேசிய நாட்களில் ஒன்றாக தேர்வு செய்ய வேண்டுமென்ற பிரேரணையை நிறைவேற்ற விண்ணப்பிக்கும் வேலைகளில் இறங்கினார்.. அன்னா மேரி அவர்கள் தனது தாயார் 20 வருடங்களுக்கும் மேலாக ஞாயிற்றுக் கிழமைகளின் வேத பாடசாலை ஆசிரியையாக கடமையாற்றிய வெஸ்ட் வேர்ஜினியாவிலிருக்கும் ஆண்ட்ரூஸ் மெதடிஸ் சர்ச் நடத்துனரிடம் தனது விண்ணப்பத்தை முதலில் கையளித்தார். அவரது கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ள உத்தியோகபூர்வமாக மே மாதம் 10ம் திகதி வெஸ்ட் வேர்ஜினியா ஆண்ட்ரூஸ் மெதடிஸ் தேவாலயத்திலும் பிலடெல்பியா பென்ஸில்வேனியாவில் ஒரு தேவாலயத்திலும் அன்னையர் தினத்தைக் கொண்டாடினார்கள். அன்று அந்த விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு தாய்மாருக்கும் தனது தாயாருக்கு பிடித்த வெள்ளை நிற கார்னெஷன் மலரில் இவ்விரண்டு மலர்களை கொடுத்தார். அன்றிலிருந்து தொடங்கியது தான் ஒவ்வொரு அன்னையர் தினத்துக்கும் கார்னேஷன் மலர்களை அம்மாக்களுக்கு கொடுக்கும் சம்பிரதாயம். அதன் பின் உயிருடன் இருக்கும் அன்னையருக்கு பிங் அல்லது சிவப்பு நிற கார்னேஷனையும், மறைந்து போன தாய்மாரின் சமாதிகளில் வெள்ளை நிறக் கார்னேஷன் மலரையும் சமர்ப்பிக்கும் சம்பிரதாமாகியது.
அன்னா மேரி ஜார்விஸ் தனது வேலையை இராஜினாம செய்து விட்டு முழுமூச்சுடன் அன்னையர் தினத்தை உத்தியோக பூர்வமாக தேசிய நாளாக அறிவிக்கும் படி அரசை வற்புறுத்துவதை தனது கடமையாக்கிக் கொண்டு பல தொண்டு நிறுவனங்களையும் , வியாபார தலைகளையும், மகளிர் அமைப்புகளையும், தேவாலயங்களையும் தனது முயற்சிக்கு ஆதரவு கேட்டு அலைந்தார்.
ஈற்றில் உலக தேவபாடசாலை அமைப்பினை தனது கோரிக்கைக்கு இணங்க வைத்தார்…அதன் மூலம் 1912ம் ஆண்டில் அமெரிக்கா காங்கிரஸ் வெஸ்ட் வெர்ஜினியா மாநிலம் உத்தியோக பூர்வமான அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. 1912ம் ஆண்டு அமெரிககவின் 28வது ஜனாதிபதியான வூட்ரோ வில்ஸான் (Woodrow Wilson) தேசிய அளவில் அன்னையர் தினத்தை ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார்
விடுமுறை தினமானது இறுதியில் மிகவும் வணிக மயமாக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் அன்னா ஜார்விஸ் உள்ளிட்ட பலரும் அதை “ஹால்மார்க் விடுமுறை தினம்” என்று கருதினர். அது மிகப்பேரளவிலான வணிகப் பயன்பாட்டினைக் கொண்ட ஒன்று. அதன் பின் அன்னையர் தினம் நாட்டின் மிகப் பிரபலமான தினமாகியது. படிப்படியாக வியாபாரரீதியில் அன்னையர் தினம் பெருமளவில் வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டிக் கொடுக்கும் ஒரு கமர்ஷியல் நாளாக மாறியது.
எனவே, அன்னையர் தினம் என்பது ஒரு உயரிய தினம். அன்னையரை மகிழ்விக்க எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம். ஏனெனில். அன்னையின் பெருமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது. அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடிய அனா ஜார்விஸின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து இத்தினத்தை கொண்டாடுவோம்.