Views: 36
பொதுமக்களுக்கு செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் “செவிலியர்கள்” என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். 1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN – International Council of Nurses )இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.
1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூற முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தை நாளை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.
நவீன செவிலியர் முறையை உருவாக்கியவர் இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நர்ஸ் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார்.நர்ஸ் பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார்.’கை விளக்கேந்திய காரிகை’ (The Lady with the Lamp)என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஓர் எழுத்தாளர் ஆவார்.
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து”
மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவர், மருந்து, அம்மருந்தை அருகில் இருந்து வழங்கும் தாதி என்ற நான்கு கூறுகளைக் கொண்டது என்று உலகப் பொதுமறையை தந்த திருவள்ளுவர் போதிக்கின்றார்.
சுகாதாரக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் செவிலியரே. அவர்களுடைய பணியை மதித்து அங்கீகரிக்கவும். ஒரு மருத்துவர் உங்கள் நோய்க்கு சிகிச்சை அளிக்கிறார். ஆனால் ஒரு செவிலியரே பராமரிப்பையும் ஆதரவையும் வழங்குகிறார்.