வெள்ளி. மே 23rd, 2025

Views: 19

ஓயாமல் வாயடிக்கும் டிவி, தொட்டால் சிலிர்க்கும் ஸ்மார்ட் போன், நகக் கண்களில் விரையும் தொடு திரை. இப்படி குழந்தைகளைச் சுற்றிலும் ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கிறது. குழந்தைகள் பேசுவது மெல்லக் குறைந்து வருகிறது. அப்படியே பேசினாலும் குறுந்தகவல் பாஷை போல ஓரிரு வார்த்தைகளில் முடிந்து விடுகிறது. இதனால் குழந்தைகள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தவே தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த தயக்கம் அவர்களது வாழ்க்கை முழுவதும் தாழ்வு மனப்பான்மையாகப் படர்ந்து அவர்களது வளர்ச்சியை துவக்கத்திலேயே தடுக்கிறது. தனக்கு என்ன வேண்டும் என்று சொல்லும் குழந்தைகளால் தான் மிகப்பெரிய லட்சியங்களை எட்டித் தொட முடியும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மாபெரும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நின்று கொண்டிருக்கும்., அவர்கள் முன்பு ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கான பதில் நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கு தெரிந்திருக்கும். ஆனால் எனக்கு தெரியும் என்று சொல்ல ஏதாவது ஒரு சில குழந்தைகளே முன்வருகின்றன. அவர்களில் சிலரையும் யாராவது சொல் சொல் என்று வற்புறுத்தி முன்னால் தள்ளி விட்டிருப்பார்கள். தயக்கம் காட்டும் குழந்தைகள் தனக்கு என்ன பிடிக்கும் என்பதை சொல்ல மறுக்கின்றன. தனக்கு கிடைத்தது பிடிக்காவிட்டாலும் சகித்துக் கொள்கின்றனர். இந்த சகிப்புத் தன்மை அவர்களை போன்சாய் மரங்களாக மாற்றுகிறது.

தயக்கத்தில் இருந்து குழந்தைகளை விடுவிப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் உளவியல் ஆலோசகர் பிரவீன்குமார்.

”குழந்தைகள் தவறு செய்தால், அந்த தவறை ஏன் தவறு என்று விளக்க பெரும்பாலான பெற்றோர்கள் முயல்வதில்லை. அது தப்பு அவளோதான்.. இனி செய்யாத என்று குழந்தைகளின் பேச்சு அங்கே முட்டுகட்டைப் போடப்படுகிறது.
ஏன் அந்த விஷயத்தை செய்யக்கூடாது என்று குழந்தைகள் உங்களிடம் எதிர் கேள்வி கேட்க ஆரம்பித்தால்தான் மற்றவர்கள் முன் தயக்கங்கள் உடைத்து பேச ஆரம்பிப்பார்கள். பொதுவாகவே குழந்தைகள் ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவே பெற்றோர்களிடம் கேள்விகள் கேட்கிறார்கள்.வகுப்பறையிலும் இதையேத்தான் குழந்தைகள் தொடர்கிறார்கள். வகுப்பறையில் எதாவது ஒரு குழந்தை கேள்வி கேட்டு அதனை மற்றவர்கள் கேலி செய்த தருணங்களோ அல்லது அடித்த தருணஙளையோ பார்க்கும் குழந்தைகள் தாங்களும் இப்படிப்பட்ட பனிஷ்மென்டுக்கு உள்ளாவோம் என்று தெரிந்து வாயை மூடிக் கொள்கிறார்கள்.
இந்த விஷயத்தில் பெற்றோர், பள்ளி இரண்டு இடத்திலும் மாற்றம் அவசியம். தவறை குழந்தைகள் புரிந்து கொள்ளும்படி நமக்குச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு மாற்றாக நல்ல விஷயங்களையும் அறிமுகப்படுத்தலாம்.

குழந்தைகள் தன்னை யாருடனும் கம்பேர் செய்வதை விரும்புவதில்லை. அவர்களிடம் உள்ள பிளஸ் பாயிண்டை அடிக்கடி சொல்லி உற்சாகப்படுத்தலாம். குழந்தைகள் பேசுவதற்கான வாய்ப்பளிக்க வேண்டும். முடிந்தவரை அவர்களது கேள்விகளுக்கு முழுமையாக பதில் தர முயற்சிக்கலாம். கேள்விகள் வழியாக குழந்தைகள் தங்களது அறிவுத் தேடலை வெளிப்படுத்துகின்றனர். எங்கும், யாரிடமும் குழந்தைகள் தங்களுக்கு தேவையான பதில்களை கேள்விகள் வழியாக பெற முயற்சிக்கிறார்கள். தயக்கத்தை விட்டு வெளியில் வந்த குழந்தைகளால் அதிக விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதுடன் உற்சாகமாக கற்கவும், கேட்கவும் வழியமைக்கிறது.

தயக்கத்தை விட்டு வெளியில் வரும் குழந்தைகளின் கம்யூனிகேஷன் ஸ்கில் அதிகரிக்கிறது. எவ்வளவு படித்திருந்தாலும்..தான் படித்ததை மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்லத் தெரிந்தவர்களே கடந்த காலங்களில் வெற்றியாளர்களாக உருவாகியுள்ளனர். இதன் மூலம் குழந்தைகள் கற்றலிலும் மாற்றம் வரும். தேடித் தேடி படிக்கத் துவங்குவார்கள். கேள்வி கேட்கும் குழந்தைகளுக்கு புத்தகங்களை படித்துக் காட்டுவது மற்றும் அவர்கள் புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் நல்ல பலன் தரும். இது அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகளுக்கு மாற்றான நல்ல பழக்கமாகவும் மாறும். தயக்கம் விட்டு வெளியில் வருவது அறிவுத் தேடலுக்கான முதல் படி.’’ என்கிறார் பிரவீன்குமார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

four + 19 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.