Views: 19
ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவேதான், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.
ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை) ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும். ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை, தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை, தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணாயண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசைகள், முன்னோரை நினைவு கூர முக்கியமான நாட்கள். முன்னோர் வழிபாட்டை, ஆடி அமாவாசையன்று, காலையே துவங்கி விட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தங்கரைக்குச் சென்று, தர்ப்பணம் செய்து வர வேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு, திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்க வேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்த பிறகு, காகத்திற்கு உணவிட வேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிட வேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசிர்வாதம் செய்வதாக ஐதிகம்.
படித்ததில் பிடித்தது!!