Views: 53
வணக்கம். இன்று மாசி மாதம் சிவராத்திரி. சிவனைப் போற்றும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு வழக்கம் இந்த சிவராத்திரி.
ஏன் சிவராத்திரி –
பொதுவாக ஒவ்வொரு அமாவாசை,பௌர்ணமி அதற்கு முன் பின் தினங்களில் பூமியில் சந்திரனுடைய காந்த சக்தியில் மாற்றம் ஏற்பட்டு சகல விதமான ஜீவராசிகளும் மனநிலைத் தடுமாற்றத்திற்கு ஆளாகி, அந்த நேரத்தில் உதிக்கும் எண்ணங்களினால் செயல்படும் செயல்களின் விளைவாகத்துன்பங்களை அனுபவிக்கின்றனர். இது அவர்களை அறியாமலேயே ஒவ்வொரு மாதமும் நடந்து கொண்டிருக்கிறது.காரணம் என்னவென்றால் சந்திரன் மனோகாரகன். மனதையும் அதன் எண்ணங்களையும் ஆள்பவன். மனநோயாளிகள் அமாவாசையை ஒட்டிய நாட்களில் அதிகத் துன்பத்திற்கு ஆளாவதும் இதனால்தான். மேற்படி நாட்களில் வியாதியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதுஅனுபவத்தில் நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சாதாரணமானவர்களுக்கு மேற்படி நாட்களில் ஞாபகமறதி, அலர்ஜி, டென்சன்(மன அழுத்தம்), ஜீரண சக்திக் குறைபாடு போன்றவைகளால், சோர்வு, தூக்கமின்மை, அதிக உஷணம் போன்ற துன்பங்கள் ஏற்படும். இன்றைய நடைமுறை வாழ்க்கைச் சூழலில் இதை உணராமல் நாம் வாழந்து பழகிக்கொண்டோம். நம் முன்னோர்கள் இதைப்புரிந்து கொண்டதால், அமாவாசை மற்றும் பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் மனவலிமையையும், அறிவின் விழிப்பாற்றலைத்தூண்டவும் மன ஒருமை மற்றும் உடல் இயக்கங்களில் நிதானத்தைக் கொண்டுவரவும் விரதம் மற்றும், பூஜைகள், தியானம் போன்றவற்றைக் கடை பிடித்தார்கள்.
நம் மனம் சந்திரனின் இயக்கத்தை பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்துவிடும். நம் மனமும் இப்படித்தான்… ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, ‘அது எதற்கு, அதனால் என்ன பயன்…’ என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே, ’விட்டேனா பார்…’ என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம். மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும்,அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.
மாத சிவராத்திரியில் நடுச்சாமம் (இரவு 12.00 மணி) வரை விழித்திருந்து ஈசனை நினைத்து பூஜைகளோ, தியானமோ மேற்கொள்வார்கள். அதற்குப்பிறகு ஓய்வு எடுப்பார்கள். இவ்வாறாக சிவராத்திரி பூஜையினை மாமாங்க வழிமுறையாக செய்து வந்து 12 வது மாதம் வருகிற மஹாசிவராத்திரி (சூரியன் சந்திரனின் வீட்டுக்கு எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் காலம்) அன்று இரவு முழுவதும் கண்விழித்து ஈசனை மனதில் நிறுத்தி சிவ பூஜையினைச் செய்து மாமாங்க பூஜையினை நிறைவு செய்வார்கள். அதாவது சரியை வழியில் உள்ளவர்கள் பூஜைகள் விரதங்கள். கிரியை வழியில் உள்ளவர்கள் இரவில் தூங்கி விடும் அறிவை தூங்காமல் விழிப்பு நிலையில் இருக்கச்செய்வது(தியானம்). இதைக்கடைபிடிப்பதால்உடல்நலமும், மனவளமும் காக்கப்படும்.
பவுர்ணமி திதியைத் தொடர்ந்து வரும் 14வது நாள் தேய்பிறை சதுர்த்தசி திதியை நாம் சிவராத்திரியாக வழிபடுகிறோம்.இது எல்லா மாதங்களில் வந்தாலும் மாசி மாதத்தில் வருவது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நமது புராண நூல்களாகிய கருட புராணம்,கந்த புராணம்,பதம புராணம், மற்றும் அக்னி புராணங்களில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவனுக்கு உரிய ‘நமசிவாய’,’சிவாய நம’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை நான்கு ஜாமங்களிலும் உச்சரித்தபடி இருக்கவேண்டும்.
முதல் ஜாமம் -சோமாஸ்கந்தரையும்
இரண்டாம் ஜாமம் -தட்சணாமூர்த்தியையும்
மூன்றாம் ஜாமம் -லிங்கோத்பவரையும்
நான்காம் ஜாமம் -சந்திரசேகரர்(ரிஷபாரூட மூர்த்தி)
வணங்கவேண்டும். நான்கு ஜாமமுன்பு நடராஜர் மற்றும் நந்தி பெருமானையும் வழிபடவேண்டும்.