Views: 37
தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 – ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன்(சந்திரசேகர வெங்கடராமன்) தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.
சி.வி.ராமன், ‘ராமன் விளைவை‘ கண்டறிந்த தினம். இதுவே இந்தியாவின் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. திருவானைக்காவலில் பிறந்த இவர், படிப்பில் பயங்கர சுட்டி. அப்போதே ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். முதலில் அக்கவுண்டண்டாக அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்த இவர், இரவெல்லாம் ஆய்வுகள் செய்வார். பிறகு, இணைப் பேராசிரியராக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருக்கிறபொழுது ஹவுராவில் எளிய பொருட்களை வாங்கிவந்து சிக்கனமாக பல கருவிகளை உருவாக்கி பயன்படுத்துவார்.
மெடிடேரியன் கடலின் ஊடாக பயணம் போகிறபொழுது ‘ஏன் கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருக்கிறது?’ என யோசித்ததன் விளைவுதான் ‘ராமன் விளைவு’ நோக்கிய அவரின் பயணம். காம்ப்டன் எக்ஸ் கதிர்கள் சிதறலை பற்றி ஆய்வுசெய்து நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னதும் அது என் கண்ணிற்கு புலப்படும் ஒளியிலும் சாத்தியமாக இருக்க கூடாது என யோசித்தார். அதற்கு விலை மிகுந்த ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியை பிர்லாவிடம் வாங்கித்தர சொல்லி கேட்டார்.
“கண்டிப்பா நோபல் பரிசு நமக்குதான்!” என அறிவித்து களத்தில் இறங்கி சாதித்து காட்டினார். நோபல் பரிசை அறிவியல் துறையில் பெற்ற முதல் ஆசியர் என்கிற பெருமை அவரை வந்து சேர்ந்தது; ஜூலை மாதமே நோபல் பரிசு தனக்குத்தான் என உறுதியாக நம்பி டிக்கெட் எல்லாம் புக் செய்தார் ராமன்.
ராமன் விளைவு பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில், மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான
மருந்துகளை இனம் காணல், அணுக்கருக் கழிவுகளை தொலைவில் இருந்து ஆய்வு செய்தல் ஆகியவற்றில் பயன்படுகிறது. இவரின் கவனிப்பில் இந்திய அறிவியல் கழகம் சிறப்பான அமைப்பாக உருவெடுத்தது.
குழந்தைப்பருவத்தில் இருந்தே அறிவியல் தாகத்தையும், ஆர்வத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அறிவியல் ஒரு பாடம் அல்ல, அது வாழ்கையின் ஒர் அணித்தரமான அங்கம் என்பதை மாணவர்கள அறியவேண்டும். வெறும் ஏட்டில் படித்தால் மட்டும் போதாது, அவற்றை நிஜவாழ்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் திறனை வளர்க்க வேண்டும். நம் நாடு அறிவியலில் முன்னணியில் நிற்க குழந்தைகளை ஐந்து வயதில் இருந்தே விஞ்ஞானிகள் என மதித்து நடத்த வேண்டும் என்ற இவரின் கனவு.
நாமும் நம்முடைய குழந்தைகளை அவ்வாறு முனைப்படுத்துவோம்