X
    Categories: Information

உலக தாய்மொழி தினம்

Views: 35

ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் இன்று பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள், ஒருவருக்கு தெரிந்திருந்தால், எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும், என அறிஞர்கள் கூறுவர்.ஆனால், தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால், இனவாதம் துவங்கியது, துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது. “ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்’ இத்தினம் வலியுறுத்துகிறது.

தாய்மொழி நம் உயிர்மொழி. அது நம் தாயைப் போல புனிதமானது. சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்கத் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே முடியும்.

தாய் மொழியால் பிரபலம் ஆனவை

காந்தியின் சத்தியசோதனையை தன் தாய்மொழியான குஜராத்தியில்தான் முதலில் எழுதினார்.

மகாகவி பாரதி புகழ் மிக்க கவிதைகளையும் கட்டுரைகளையும் தந்தது நமது தாய்மொழியான தமிழில்தான்.

தாகூர், கீதாஞ்சலி எனும் நோபல்பரிசு பெற காரணமானது அவரது தாய்மொழியான வங்கமொழியில்தான்.

தாய் மொழி தின வரலாறு

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில், “உருது மொழி’ அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள், கோரிக்கை தெரிவித்தனர். 1952, பிப்ரவரி 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ அமைப்பு, 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.

உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன.

தாய்மொழி-தமிழ்

இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மனிதனின் அடையாளம், அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த, தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே, தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு. உச்சரிக்க இனிதான, நமது மொழியின் அருமை தெரியாமல், பிறமொழி மோகத்தில் தமிழை, தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கிறோம்.

தாய் மண்ணே வணக்கம் என்போம் தாய் மொழி இணக்கம் கொள்வோம், தாய் மொழி பற்றுக் கொள்வோம், தமிழ்மொழி கற்று வெல்வோம்!

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.