Views: 68
அன்பு நெஞ்சங்களுக்கு எனது வணக்கம். இன்று ரதசப்தமி எனும் விசேஷமான நாள்.
உலகின் இருள் நீக்கி ஒளி தரும் சூரிய பகவானின் அருளை அனைவரும் பெறுவதற்கு சூரிய ஜெயந்தியான ரதசப்தமி. ரதசப்தமி அன்று தான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலா வரும் சூரியபகவான் உதித்தார் என்கின்றன புராணங்கள். நமது கலாச்சாரத்தில் சூரிய வழிபாடு என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வருகின்றது. சூரிய ஒளி இல்லா விடில் பூவுலகில் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப் படுகின்றனர். சூரிய பகவானின் ரதத்திற்கு அருணன் சாரதியாக உள்ளார்
ரதசப்தமி நாளன்று எருக்க இலை வைத்து ஸ்நானம் செய்து பின் சூரியனை வழிபடுவதன் மூலம் நீடித்த ஆயுளும் உடல் நலமும் பெறலாம். இந்த சூரிய வழிபாட்டின் மூலம் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன் பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து அருள்கிறார். நீடித்த ஆயுள், இளமை, உயர்ந்த அறிவு, நிறைந்த செல்வம், சிறந்த ஆரோக்கியம் மற்றும் சிறப்பான வாழ்வை அருள்கிறார்.
தை மாத அமாவாசை நாளுக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமியாக கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம். நீராடும்போது, ஏழு எருக்கிலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந் தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும். வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டபின், தண்ணீர் ஊற்றிக்கொண்டு குளிக்கலாம். இப்படிச் செய்வதால் நம் பாவங்கள் விலகி பகலவனைக் கண்டு பனி மறைவது போல மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதிகம்.
சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். பொங்கல் வைத்து அது சூடு ஆறும் முன்பாக நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க் கோலம் போடுவது பலரது வழக்கம். இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு.
ரத சப்தமி அன்று ஆதித்ய ஹ்ருதயம் படிக்கலாம். சூரிய நமஸ்காரம், மந்திரம்
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸீ ர்ய ப்ரசோதயாத்
சூரிய காயத்ரி மந்திரம்.
ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:
நமோ நம ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:
நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:
அறிவு, ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்
நன்றி !!