Views: 86
திருவாதிரை நோன்பு (ஆருத்ரா தரிசனம்!)
மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.
மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.
திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.
மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.
விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாரணஞ் செய்வர். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது தேவாரத்தில் ஆதிரை நாளைப் பின்வருமாறு சிறப்பித்துள்ளார்.:
“ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்”
திருநாவுக்கரசரும் திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரை விழாவின் சிறப்பினையும் அழகையும் பின்வருமாறு பாடியுள்ளார்.
“முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பக்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தனாரூ ராதிரை நாளா லதுவண்ணம்”
சங்சரசங்கிதை என்னும் வடமொழி நூலின் உபதேச காண்டத்தில் இந்நோன்பின் மகிமை கூறப்பட்டுள்ளது.
நடராஜருக்கு பஞ்ச சபைகள் என ஐந்து கோயில்கள் உள்ளன. அவை சிதம்பரம் – கனக சபை, மதுரை – வெள்ளியம்பலம், திருநெல்வேலி – தாமிரசபை, திருவாலங்காடு – ரத்தின சபை, குற்றாலம் – சித்திர சபை. ஆருத்ரா தரிசன நன்னாளில் இத்தலங்களை தரிசிப்பதை பக்தர்கள் பாக்கியமாக கருதுகின்றனர்.
ஆருத்ரா அபிஷேக தினத்திற்கு அடுத்த நாள் வரும் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று திருஆதிரைக் களி என்பதாக, ஏழு அல்லது ஏழுக்குமேலான காய்கறிகள் கலந்த கூட்டுடன் இறைவனுக்குப் படைத்தளிக்க வேண்டிய முக்கியமான திருநாள். மோதகத்தின் ஒரு வகையான திருவாதிரைக் களி மிகவும் சுவையுடையது. மோதகக் குடும்பத்தைச் சார்ந்த இனிப்பு வகை ஆதலால், பிள்ளையாரின் ஆசீர்வாதமும் சேர்ந்து வருவதாகும்.
திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ‘திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ‘ என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர். திருவாதிரைக் களி செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இங்கு சொடுக்கவும் நெய்வேத்தியம்.