X

கந்த சஷ்டி விரதம்

Views: 88

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் விரத நாட்களாக கருதுகின்றனர். இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி இன்னும் இன்னும் சிறப்பு பெறுகிறது. சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து, இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை அனைவரும் அறிந்ததுதான்.

கண்ணாடிக்கு அபிஷேகம்
ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். “சாயா’ என்றால் “நிழல்’ எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார்.

தெய்வயானை திருமணம்
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

கந்த சஷ்டி விரதம்

விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.

ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது. கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.

இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும்.

இந்த ஆறு நாட்களும் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம்.

வாழ்க தமிழ்! வளர்க முருக பக்தி!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.