X
    Categories: Information

ஆற்றல் சக்கரங்களும் தமிழ் மொழியும்

Views: 349

நம் உடலில் ஏழு ஆதாரச் சக்கரங்கள் அமைந்துள்ளன. மூலாதாரம் தொடங்கி சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ராரம் என்பவையே அந்த ஏழு ஆதாரச் சக்கரங்கள். இந்த ஏழு சக்கரங்களின் வழியே, நம் ஆன்மா பயணிக்கும் போது சில ஓசைகளைக் கேட்க முடியும். அந்த ஓசைகளை அறிந்து, உணர்ந்து அந்த ஒலிகளையே தனது மொழியாக்கியவர்கள் தமிழர்கள். பல்வேறுவிதமான நோய்களுக்குத் தமிழ் மொழியே மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தின் ஒலியும் நம் பிணிகளைப் போக்கும் மாத்திரைகள் போன்று செயல்படுகின்றன என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.

1. மூலாதாரம்:- முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது. உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

2. சுவாதிஷ்டானம்:- இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

3. மணிபூரகம்:- நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை ,கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

4. அனாகதம்:- இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது. அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

5. விசுத்தி:- இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

6. ஆக்கினை:- இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

7. தூரியம்:- இதற்கு சகஸ்ரஹாரம், தாமரைச் சக்கரம் என்ற பெயருகள் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது. இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

நம் உயிர் எழுத்துக்களில் ‘ஆ’ முதல் ‘ஒள’ வரையிலான ஒவ்வொரு எழுத்தும், நம் உடலில் ஒவ்வோர் வேலையைச் செய்கிறது,

‘ஆ’

தியான நிலையில் அமர்ந்து ‘ஆ’ என்கிற உயிரெழுத்தை மனதுக்குள் தொடர்ந்து ஒலிக்கச் செய்தால், சஹஸ்ராரச் சக்கரம் நல்ல இயக்கம் பெறும். பிரபஞ்ச சக்திகள் நம்முள் பாயும். சுவாசம் உச்சந்தலையில் நிலைபெறும். இதன் மூலம் ஆன்ம விடுதலை, முக்தி மற்றும் பரவசநிலை பெற்று வாழலாம்.

‘ஈ’

தியான நிலையில் அமர்ந்து ‘ஈ’ என்கிற உயிரெழுத்தை மனத்தினுள் ஒலிக்கச் செய்தால், ஆக்ஞைச் சக்கரம் நன்கு இயக்கம் பெறும். மூச்சானது புருவ மத்தியில் நிலைபெறும். அறிவில் சிறந்தவராகவும் , ஞானமுள்ளவராகவும் வாழும் வாழ்க்கையைப் பெறலாம்.

‘ஊ’

தியான நிலையில் அமர்ந்து ‘ஊ’ என்கிற உயிரெழுத்தை மனதினுள் ஒலிக்கச் செய்தால், விசுத்திச் சக்கரம் இயங்க ஆரம்பிக்கும். சுவாசமானது கழுத்து சங்குத் துடிப்பில் நிலைபெறும். இந்த இயக்கத்தினால் பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வாழலாம்.

‘ஏ’

தியான நிலையில் அமர்ந்து ‘ஏ’ என்கிற உயிரெழுத்தை மனத்தினுள் ஒலிக்கச் செய்தால், அனாகதச் சக்கரம் இயக்கம் பெறும். சுவாசமானது இதயத்தில் நிலைபெறும். இதன் மூலம் அன்பு மிகுந்தவராகவும் , படைப்பாற்றலுடனும் ஒருவர் திகழ முடியும்.

உயிர் எழுத்துக்கள்

‘ஐ’

தியான நிலையில் அமர்ந்து ‘ஐ’ என்கிற உயிரெழுத்தை மனத்தினுள் ஒலிக்கச் செய்தால் மணிபூரகச் சக்கரம் இயக்கம் பெறும். சுவாசமானது தொப்புள் பகுதிக்குச் சற்று கீழே நிலைபெறும். இதன் வாயிலாக கடின உழைப்புடனும் , விடாமுயற்சியுடனும் வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

‘ஓ’

தியான நிலையில் அமர்ந்து ‘ஓ’ என்கிற உயிரெழுத்தைத் தொடர்ந்து மனத்தினுள் ஒலிக்கச் செய்தால், சுவாதிஷ்டானச் சக்கரம் இயக்கம் பெறும். மூச்சானது முதுகுத் தண்டின் கீழ்மையப் பகுதியில் நிலைபெறும். இதனை நன்கு இயக்கச் செய்தால், உலக இன்பங்களுக்கு சொந்தக்காரர் ஆகலாம்.

‘ஔ’

தியான நிலையில், அமர்ந்து ‘ஔ’ என்கிற உயிரெழுத்தைத் தொடர்ந்து மனதுக்குள் ஒலிக்கச் செய்தால் மூலாதாரச் சக்கரம் இயங்கத் தொடங்கும். சுவாசம் மலவாயிலுக்கு சற்று மேலே நிலைபெறும். இதன் வாயிலாக நல்ல உணவு, உறக்கம், மன நிம்மதி போன்றவற்றைப் பெறுவோம்.

நம் மொழியும், நம் வழிபாடும் நம்மை நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்கிறது.

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.