Views: 154
சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8ம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் 1966 முதல் செப்., 8ல், சர்வதேச எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதற்கேற்ப ‘டிஜிட்டல் உலகில் எழுத்தறிவு‘ என்பதே இந்தாண்டு மையக்கருத்து. பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். எழுத்தறிவு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும்.
உலக மயமாக்கத்தில் விழிப்புடன் செயற்பட்டு வரும் காலத்தில் எழுத்தறிவின்மை என்பது வெட்கப்படக்கூடிய விளைவு தான் என்றால் பிழையாகாது. அதி நவீன தொழில்நுட்ப திறனும் கணிணிப்பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்தறிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்பட்டே ஆக வேண்டும். மேலும் ஒரு கல்வி கற்ற சமுதாயமானது அபிவிருத்தி இலக்குகளை இனங்கண்டு சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது.
எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஒரு அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனிதவள அபிவிருத்தி மற்றும் கல்வி செயற்பாடுள் மற்றும் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எழுத்தறிவென்பது உண்ணும் உணவை விடவும், பார்க்கும் கண்ணை விடவும் முக்கியம் பெறுகிறது. கல்வி என்பது பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்த முடித்தவுடன் முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் திகழ வேண்டும். கல்விக்கு முடிவே கிடையாது