Views: 118
வணக்கம் நண்பர்களே!!
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். தாய்ப்பாலிற்கு அடுத்த நிலையில் மாட்டுப் பால் என்ற நிலையில் அதில் மனித உடலுக்குத் தேவைக்கு மிகுதியாக கொழுப்பு இருக்கிறது. அதை மறுசுழற்சி செய்ய வேண்டும். அதைப் பதப்படுத்த வேண்டும் என்றெல்லாம் பல்வேறு நிலைகளில் நம்மைக் குழப்பத்தில் உள்ளாக்கி இருக்கிறது இந்தச் சமூகமும் அறிவியலும். அன்றைய காலச் சூழ்நிலையில் பச்சைப் புல், எண்ணெய் எடுத்த நிலக்கடலை, புண்ணாக்கு போன்றவற்றை மாட்டுக்கு கொடுத்து வந்தனர். அதன்மூலம் நல்ல, அடர்த்தியான பாலையும் கறந்தனர். மாட்டிற்காக தம் நிலத்தில் விளையும் பருத்தியை அறுவடை செய்து பஞ்சு, கொட்டை என தனியாக பிரித்து அந்தக் கொட்டையை ஊற வைத்து ஆட்டிப் பாலெடுத்து மாட்டடுக்குக் கொடுத்தனர். அவ்வாறாக செய்யும்போது மாடு நன்றாக பால் கறக்கும். இதை ”பருத்திப் பால் உண்ட பசு பாலை அருவியாய் சுரக்கும்” என பழமொழியாய் சொன்னார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அருந்தும் ஆரோக்கிய பானமாக இருந்து வந்தது. இன்றைய காலகட்டத்தில் தீர்க்க முடியாத நோய்களுக்கும் அன்றைய காலகட்டத்தில் மருந்தாக பருத்திப் பால் பயன்பட்டு வந்தது. மிக முக்கியமாக காச நோய்க்கு பெரும் மருந்தாய் பருத்திப் பால் இருந்திருக்கிறது. ஆடைக்கு பயன்படுவது பருத்தி. இதன் விதைகள் சத்தூட்டமான உணவாக விளங்குகிறது. பருத்தி பாலில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பருத்தி பாலை குடித்து வருவதன் மூலம் போதிய சத்துக்களை பெறமுடியும். பருத்தி பாலை அடிக்கடி குடிப்பதால் முறையற்ற மாதவிலக்கு சரியாகும். இருமல், சளி பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 100 கிராம்
பருத்தி விதை – 50 கிராம்
தேங்காய் பெரிய மூடி – 1
முந்திரி – சிறிதளவு
சுக்கு – சிறிதளவு
ஏலக்காய் – 3
கருப்பட்டி – 1 வட்டு (பெரியது)
செய்முறை:
பருத்திவிதையை தண்ணீரில் 6 மணிநேரம் ஊற வைக்கவேண்டும். பச்சரிசியை மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும். ஊறிய பருத்தி விதையை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும். கருப்பட்டியை நன்றாக பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் முழுவதையும் துருவி, அதில் முக்கால் பங்கு எடுத்து தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் 6 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிதுநேரம் வேகவிட வேண்டும். கொதி வந்தவுடன் தீயை குறைத்துக்கொண்டு, பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். பருத்திப்பால் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்க்கவும். பின்னர் சுக்கு, ஏலக்காய், மீதமுள்ள தேங்காய் துருவல், வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து கிளறவும். தேங்காய் பாலை கடைசியாக ஊற்றவேண்டும். அதன் பிறகு கொதிக்கவிட வேண்டாம்.
குறிப்பு:
பருத்தி விதையில் பால் எடுத்து 2 மடங்கு தண்ணீர் சேர்த்து ஒரு மடங்காக ஆகும் வரை கொதிக்கவிடவும்.
தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க வைக்கக்கூடாது.