Views: 96
உலக அரங்கில், இந்தியா, ஹாக்கி போட்டியில் தனிச் சிறப்புடன் விளங்கியதற்கு தயான் சந்த் காரணம் ஆவார். இவர், கடந்த, 1905ம் ஆண்டு, ஆக., 29ல், உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தயான் சந்த், தனது தந்தையின் ஹாக்கி ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு, அவரும் பயிற்சியில் ஈடுபட்டார்.தனது, 16-வயதில், தந்தை விளையாடிய ஹாக்கி அணி தோல்வியை தழுவ இருந்த நிலையில், களமிறங்கிய சந்த், நான்கு கோல்கள் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்தியா சுதந்திரம் அடையாததற்கு முன்பே இந்தியா சார்பாக வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். அதில் ஹாக்கி விளையாட்டில் பங்கேற்று தன் தலைமையில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று தந்தவர் தான் இந்த தயான் சந்த். இவரை பலரும் அறிந்திருப்பீர்கள். இவருடைய தலைமையில் இந்தியா ஹாக்கி விளையாடிய காலத்தை இந்திய ஹாக்கியின் பொற்காலம் என்றே கூறுகின்றனர். இவரது காலத்தில் இந்தியா அசைக்க முடியாத அணியாக திகழ்ந்தது.
தன் அசாத்தியமான ஹாக்கி பந்தை கையாலும் திறனைக் கண்டு இவரை தீ விஸார்ட்(The Wizard)-மந்திரவாதி என்று அழைத்தனர். இவர் தன்னுடைய சர்வதேச போட்டிகளில் 400 மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். தன் நெஞ்சிலும், உதிரத்திலும் இந்தியாவையும், ஹாக்கி விளையாட்டையும் மட்டுமே சுமந்த ஒப்பற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த். ஹிட்லர் மன்றாடி கேட்டுக் கொண்ட போதிலும் இந்தியாவிற்கு மட்டும் தான் விளையாடுவேன் என்று நெஞ்சை நிமிர்த்திய தாய்நாட்டு பற்றாளர்
கோல்கள் பல குவித்த தயான் சந்த்-இன் சுயசரிதையான “கோல்!” என்ற புத்தகத்தை 1952ஆம் ஆண்டு மெட்ராஸில்( தற்போதைய சென்னை) ஸ்போர்ட்ஸ் & பாஸ்டைம் வெளியிட்டது. தயான் சந்த் 3ஆம் அக்டோபர் 1979ஆம் ஆண்டு இறந்து போனார். ஆனால் அவர் இறந்த பிறகு கூட இன்றைய வரைக்கும் ஹாக்கியில் ஒரு ஜாம்பவானாகவே திகழ்கிறார். நண்பர்கள் தினம், காதலர் தினம், மாமன்கள் தினம் என்று எண்ணற்ற தினங்களை கொண்டாடி வரும் நம்மில் பலருக்கு இன்று (ஆகஸ்ட் 29), இந்தியாவின் விளையாட்டு தினம் என்பது வியப்பு தருவதாக இருக்கலாம். ஹாக்கி விளையாட்டு சாதனையாளர் தயான் சந்த் நினைவாக அவரின் பிறந்த தினத்தில் தேசிய விளையாட்டு தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.