Views: 120
ஆடியும் இயற்கை அறிவியலும் சூரியனின் கதிர்வீச்சின் அடிப்படையில் ஆண்டினை உத்திராயனம், தட்சிணாயனம் என இரண்டு பாதியாக நம் முன்னோர்கள் வகுத்தனர். சூரியனின் கதிர்வீச்சின் அடிப்படையில் ஆண்டினை உத்திராயனம், தட்சிணாயனம் என இரண்டு பாதியாக நம் முன்னோர்கள் வகுத்தனர். அதன்படி தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்களை உத்திராயனம் என்றும் ஆடி முதல் கார்த்திகை வரையிலான அடுத்த ஆறு மாதங்களை தட்சிணாயனம் என்றும் அழைத்தனர். உத்திராயனம் என்பது சூரியக் கதிர்கள் வடதிசை நோக்கி நகர்தல், தட்சிணாயனம் என்பது அவை தென்திசை நோக்கி நகர்தல். இயற்கையின் விதிப்படி தை முதல் ஆனி மாதம் வரை வடதிசை நோக்கி கதிர்வீசும் சூரியன், தென் திசை மீது தன் பார்வையை திருப்பும் காலத்தின் தொடக்கமே ஆடி மாதம். இதனால் வெப்பம் நிறைந்த கோடைக்காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர்காலமாக மாறுகிறது. இது மழைக்காலத்தின் தொடக்கம். புது உயிர்கள் பிறக்கும் காலம். விதைத்த பயிர்கள் செழித்து வளரும். அதனால்தான் ’ஆடிப்பட்டம் தேடிவிதை” என்றனர்.
ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக இந்து சமய விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். ஆடி மாதத்தின் 18ம் தேதியில் விதை விதைத்தால் அமோகமான விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கை மூடத் தனமானது அல்ல. அனுபவத்தின் வாயிலாகப் பெற்ற அறிவின் விளைவாக பின்பற்றப்படும் வழக்கம் அது. அதாவது தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் தமிழக ஆறுகளில் புது நீர் பெருக்கெடுத்து ஓடும். இதனை பல நூறு ஆண்டுகளாக கண்டு வந்த நம் முன்னோர்கள் ஆடி 18ல் விதை விதைத்தால் தை மாதத்தில் நல்ல விளைச்சலை பெற முடியும் என்பதை கண்டறிந்து அதனை ஒரு விழாவாக கொண்டாடி வந்தனர். வளங்களை பெருகச் செய்வதாலும், நீர் பெருக்கெடுத்து அந்நாளில் ஓடுவதாலும் ஆடிப் பெருக்கு என அந்த நன்னாளுக்கு பெயர் வந்தது. இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.
இதுமட்டுமல்லாமல், ஆடி பதினெட்டாம் பெருக்கைப் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள். இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேடமானது. பெருக்கெடுத்து ஓடிவரும் அந்த புதுவெள்ளம், புது நீர் வரும்போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக்கொள்வது. சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
அதனால் ஆடி 18ஆம் தேதி மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டுவிட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும்போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும். ஏனென்றால் புதனும், சூரியனும் நட்பு கிரகங்கள். சூரியன் பூசம் நட்சத்திரத்தினுடைய டிகிரியில் இருந்து மாறி புதன் ஆயில்ய பாதத்தில் வரும்போது ஒருவித கிளர்ச்சி, புத்துணர்ச்சி, செடி கொடிகளில் பச்சையத் தன்மை சதவிகிதம் அதிகரிக்கும். இதனால்தான் இந்த நாட்களில் இதுபோன்றெல்லாம் செய்வது.
ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலம்தான். காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள் பெண்கள். ஆற்றங்கரைக்குப் போவதற்கு முன் கலப்பு சாதம் செய்ய அதிகாலை நான்கு மணியில் இருந்தே வேலை தொடங்கிவிடும். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று எல்லாம் செய்து முடித்து அவற்றை ஆற்றுக்கு எடுத்துப் போக பாத்திரத்தில் அடைத்துவைப்பார்கள். எல்லோருமாக ஆற்றை அடைந்ததும் ஒவ்வொரு பெண்ணும் தனக்கான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தை சாணம் போட்டு மெழுகி சுத்தப்படுத்து அதில் வாழை இலை விரித்துவைத்து வெற்றிலை வைத்து அதில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அதற்கு பூப்போட்டு இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய், ஜாக்கெட் துணி ஆகியவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி வணங்குவார்கள். பிறகு அவை எல்லாவற்றையும் ஒரு வாழைப் பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த விளக்கு எரிந்துகொண்டே மற்ற பொருட்களோடு மிதந்து செல்வது காவிரியின் உயிர்ப்பை உலகத்துக்கு உணர்த்துவதாக இருக்கும். வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிடுவார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவதும் நடக்கும். பிறகு கொண்டு வந்திருக்கும் பதினெட்டு வகையான பதார்த்தங்களையும், கலப்பு சாதத்தையும் எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு ஆற அமர வீடு திரும்புவார்கள். காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கச் செய்யப்படும் இந்த விழா ஒரு வகையில் குடும்ப, சமூக விழாவாக நடக்கும்.
மேலும், இயற்கை உணவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல், காப்பி அரிசி வெல்லமிட்ட காப்பி அரிசி – கைக்குத்தல் அரிசி என்று சொல்வார்களே – பொங்கல் வைத்து அம்மனுக்கு விசேஷப் பூஜைகள் செய்வது, புத்தாடை அணிதல், எல்லைத் தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடத்துதல் இதெல்லாம் பலன் தரும்.