X

ஆடிப்பூரம்

Views: 175

மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் ஆடிப்பூரத்தன்று வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூசை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது.

ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். நம்முடைய ஒரு வருடம் தேவர் களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக் காலமே தட்சிணாயன காலம் ஆகும். அதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். உத்தராயணக் காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால், தட்சிணாயனம் அவரது இடது பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் இந்த காலங்களில்தான் வரும். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

ஆடி மாதம் கடக ராசியான சந்திரன் வீட்டில் சூரியனும், சூரியனின் ராசியான சிம்மத்தில் சந்திரனும் பரிவர்த்தனை யோகத்தில் சஞ்சரிக்கும் நள வருடம், சனிக்கிழமை, பூரம் நட்சத்திரம், சுக்லபட்சம், சதுர்த்தசி திதி கூடிய நன்னாள் அது, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நந்தவனத்தில் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார்
பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, புதர் மண்டியிருந்த இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. அங்கு சென்றவர் துளசி செடியின் அடியில் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழகிய பெண் குழந்தை இருப்பதை பார்த்து ஆச்சரியம் மேலிட்டார்.

குழந்தையை கையில் எடுத்து உச்சி முகர்ந்தார். ஆண்டவன் தனக்கு அருளிய குழந்தை என்று ஆனந்தம் அடைந்தார். ‘கோதை’ என்று பெயர் சூட்டி அன்போடும், பாசத்தோடும் வளர்த்து வந்தார். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக வளர்ந்த கோதைக்கு பரந்தாமன் மீது பக்தி அதிகரித்தது. சகல சாஸ்திர ஞானங்கள் இயற்கையாகவே மளமளவென்று வர ஆரம்பித்தது. பல பாசுரங்களையும், திருமொழி நூல்களையும் பாற்கடல் வாசன் மீது பாடினார்.
இதற்கிடையில் தீவிர பக்தியானது காதலாக மாறியது. கனவில் மட்டுமின்றி, நிஜத்திலும் கண்ணனை தன் மணாளனாக நினைக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் திருவரங்கனையே மணப்பது என்ற உறுதியும் பூண்டாள்.

தினமும் பூ பறித்து அதை மாலையாக தொடுத்து பெருமாளுக்கு சாற்றுவது பெரியாழ்வாரின் வழக்கம். அந்த திருப்பணியை அவர் செவ்வனே செய்து வந்தார். ஒருநாள் அங்கு வந்த கோதை, ‘என் மனதுக்கு பிடித்தவன் அணியப்போகும் மாலைதானே.. நான் அணிந்துவிட்டு கொடுத்தால்தான் என்ன’ என்று நினைத்து அந்த மாலையை அணிந்து அழகு பார்ப்பாள். மீண்டும் அதை பழையபடி வைத்துவிடுவாள். இது பல நாட்களாக தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.
ஒருநாள் வெளியே சென்றுவிட்டு அவசரமாக வீட்டுக்கு வந்த பெரியாழ்வார், பெருமாளுக்கான மாலையை கோதை சூடி அழகு பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து பதறி விட்டார். ‘அபசாரம், அபசாரம்.

ஆண்டவனுக்காக தொடுத்து வைத்திருக்கும் மாலையை சூடலாமா’ என்று கோபத்துடன் கடிந்துகொண்டார். பின்பு அவசர அவசரமாக பூக்களை தொடுத்து புதுமாலையை எடுத்துக்கொண்டு போய் பெருமாளுக்கு சாற்றினார்.அன்று இரவு பெரியாழ்வார் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது கனவில் அரங்கன் தோன்றி, ‘கோதை என்மீது மிகுந்த பிரியமும் பக்தியும் வைத்திருக்கிறாள். அவள் சூடிக் கொடுத்த மாலையை தினமும் மிகுந்த அன்புடன் ஏற்று வந்தேன். இன்று என்னவாயிற்று?’ என்று கேட்கிறார். பரந்தாமனே இப்படிக் கேட்டதில் பெரியாழ்வாருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். கோதையின் பக்தியை உணர்கிறார். பக்தியாலும், அன்பாலும் பரமனையே அவள் வசப்படுத்தியிருப்பதை உணர்ந்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

பகவானின் உள்ளத்தையே ஆண்ட கோதையை அன்று முதல் ‘ஆண்டாள்’ என்ற திருநாமம் சூட்டி அழைத்தார். பெருமாளின் விருப்பத்துக்கு ஏற்ப அவள் சூடிக் கொடுக்கும் மாலையையே பெருமாளுக்கு சாற்றி வந்தார். ஆண்டாளுக்கு உரிய வயது வந்தவுடன் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாளோ, ‘ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாளே என் காதலன். அவரன்றி வேறொருவரை மனதால்கூட நினைக்க முடியாது’ என தீர்க்கமாக சொல்லிவிட்டாள். குழப்பத்தில் இருக்கும் பெரியாழ்வாருக்கு மீண்டும் கனவில் தோன்றிய அரங்கன், ‘ஆண்டாள் விருப்பப்படியே திருவரங்கத்திற்கு அழைத்து வா’ என்று சொல்லி மறைகிறான்.

‘கனவில் வந்து இறைவன் சொன்னது உண்மைதானா? கனவில் சுவாமி சொன்னார் என்றால் யாரும் சிரிக்க மாட்டார்களா? எதை நம்பி ஆண்டாளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துப் போவது?’ என்றெல்லாம் ஆயிரமாயிரம் சந்தேகத்துடனும், தயக்கத்துடனும் ஆண்டாளுடன் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார் பெரியாழ்வார். ஊர் எல்லையில் ஏராளமான வேத விற்பன்னர்கள், பொதுமக்கள் திரளாக கூடியிருந்ததை பார்த்ததும் ஏதோ திருவிழா என்று நினைக்கிறார். வந்திருப்பது பெரியாழ்வாரும், ஆண்டாளும் என்று தெரிந்து கொண்டதும், வேத விற்பன்னர்களும், ஆலய முக்கியஸ்தர்களும் ஓடோடி வந்து வரவேற்று வணங்குகிறார்கள். ‘தன்னை மணந்துகொள்ள சாட்சாத் மகாலட்சுமியே வருவதாக எங்கள் கனவில் அரங்கநாத பெருமான் நேற்று சொன்னார்.

மகாலட்சுமியை வரவேற்கத்தான் திரண்டிருக்கிறோம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை பெருமாள் திருமணம் செய்துகொள்வதாக கூறியிருப்பதால் கல்யாண வைபவத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம்’ என்கிறார்கள். அரங்கனின் திருவுளத்தை எண்ணி மெய்சிலிர்க்கிறார் பெரியாழ்வார். அதே நேரத்தில் சடங்கு, சம்பிரதாயங்களுக்கு காத்திருக்கும் அளவுக்கு ஆண்டாளுக்கு பொறுமை இல்லை. ‘ஸ்ரீரங்கா’ என்று உரக்க கூறியபடியே கோயில் கருவறைக்கு ஓடுகிறாள். அக்கணமே ஆண்டவனுடன் ஐக்கியமாகிறாள். பகவானின் கைத்தலம் பற்றி, வடிவால் அவன் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையாக அருள்பாலிக்கிறாள். இதுவே ஆண்டாளின் திவ்ய சரித்திரமாகும்.

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு: திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறும். இந்த வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை.

சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.

பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.

ஆடியில் பூத்த அரும்பு: வைணவத்திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆடி மாதத்தில் துளசி தோட்டத்தில் ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். இந்த நாளில் இக்கோயிலுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.