Views: 193
1924 ஆம் ஆண்டு ஜுலை 20 இல் உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. ஜுலை 20 ஆம் நாளை அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு அறிவித்தது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் சூலை 20, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது.
புராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8X8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும்.
சதுரங்க விளையாட்டு
ஒருவருடைய பகுதியில் (வெள்ளை/ கறுப்பு) ஓர் அரசன், ஓர் அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள் மற்றும் எட்டு சிப்பாய்கள் காணப்படும். ஒவ்வொரு வகையான காயும் விதம் விதமாக நகரக்கூடியவை. இந்த விளையாட்டில் இரு அணிகள் அல்லது படைகள் உண்டு. அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உண்டு.
விளையாடும் வழிமுறை
சதுரங்கம் இருவரால் விளையாடப்படும் ஆட்டமாகும். தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் சூட்சமம். எதிரி அரசனை, எதிரி தனது அரசனை பிடித்துவிடுவதற்கு முன்பு பிடித்துவிட்டால் வெற்றி கிடைத்துவிடும். விளையாட்டும் முடிவடைந்து விடும்.
அரசன் அல்லது ராஜா தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ஒரு சதுரத்துக்கு மட்டுமே நகரமுடியும்.
அரசியால் தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் நெடு வரிசையிலோ, கிடைவரிசையிலோ மூலைவிட்டமாகவோ எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படத்தில் படத்தில் காட்டப்படும் ராணியை நாம் தேவைக்கேற்ப காட்டப்பட்ட ஏதாவது ஒரு கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ள இயலும்.
மந்திரி அல்லது தேர் மூலைவிட்டமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது.
குதிரை தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ’ட’ வடிவில் நகர முடியும் (ஒரு கட்டம் மேல்-கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்). குதிரை மட்டும் காயைத்தாண்டிச் செல்லும் திறம் கொண்டது.
கோட்டை அல்லது யானை: தான் இருக்கும் இடத்தில் இருந்து நேராக எத்திசையிலும் முன்னே பின்னே அல்லது இட வலமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் கோட்டையால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது.
படைவீரர் தான் இருக்கும் இடத்தில் இருந்து நேரே முன்நோக்கி மட்டும் ஒரு சதுரம் நகர முடியும். ஆனால் ஆரம்பநிலையில் மட்டும் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி இருசதுரங்கள் விளையாடும் வீரர் விரும்பினால் நகர்த்த்திக் கொள்ளலாம். படைவீரர் தன் தாக்குதலை முன்நோக்கிய மூலைவிட்டமாக மட்டுமே மேற்கொள்ளலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு சதுரங்கள் நகரமுடியாது. வெள்ளைப் படைவீரர் 5ம் வரியில் இருக்கும் போது கறுப்பு படைவீரர் வெள்ளைப் படைவீரருக்கு பக்கத்தில் நகர்த்தினால் கறுப்பு படைவீரரை வெள்ளைப் படைவீரர் தாக்கலாம். இதனை எம்பஸ் (Enpassant) என்று கூறுவார்கள். படைவீரரை படிப்படியாக நகர்த்திக் கொண்டு கடைசிப் பெட்டியை அடைந்தால் அப்படைவீரனை பதவி உயர்வு கொடுத்து ராணி, மந்திரி, குதிரை மற்றும் கோட்டை ஆகியவற்றில் ஒன்றாக மாறிக்கொள்ளலாம்.
இங்கே வியூகம் என்பது ஒரு விளையாட்டிற்கான ஒரு நீண்ட நேர இலக்குக்கான வழிமுறையையும், உத்தி என்பது உடனடியான நகர்த்தலுக்கான தந்திரங்களையும் குறிக்கிறது. சதுரங்க விளையாட்டில் நீண்ட நேர வழிமுறைகளையும், உடனடி உத்திகளையும் வேறுபடுத்தமுடியாது. ஏனெனில் வியூகம் சார்ந்த இலக்குகளை உத்திகள் மூலமே அடையமுடியும். அதே வேளை முன்னைய வியூகங்களே பின்னைய நகர்த்தல்களின் போது உத்திகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குகின்றன. வேறுபட்ட வியூகம் மற்றும் உத்தி வழிமுறைகள் காரணமாக ஒரு சதுரங்க விளையாட்டை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது “தொடக்க ஆட்டம்”, வழக்கமாக இப்பிரிவு ஆட்டம் 10 முதல் 25 நகர்த்தல்களைக் கொண்டிருக்கும். இக் கட்டத்தில் விளையாடுபவர்கள் தங்கள் படைகளை வரப்போகும் போருக்குத் தயார் படுத்துவர். அடுத்தது “நடு ஆட்டம்” இது விளையாட்டின் முதிர்நிலை. இறுதியாக “முடிவு ஆட்டம்”, இக் கட்டத்தில் பொதுவாகப் பெரும்பாலான காய்கள் வெளியேறியிருக்கும். அதனால், அரசனுக்கு விளையாட்டில் முக்கிய பங்கு இருக்கும். கேஸ்ட்லிங் என்பது ராஜாவை யானையை நோக்கி இரண்டு சதுரங்கள் நகர்த்தி, பின்னர் அந்த யானையை ராஜாவின் மற்றொரு பக்கத்தில் அதற்கு அருகில் வைப்பது ஆகும். ஒரு ஆட்டக்காரரின் ராஜாவுக்கு செக் வைக்கப்பட்டு அவரால் அதில் இருந்து தப்பிக்க எந்த நகர்வும் செய்ய இயலவில்லை என்றால், பின்னர் அந்த ராஜா செக்மேட்டில்|செக்மேட்டில் இருக்கிறார் என்று கூறப்படும்.
டோர்னமெண்ட் விளையாட்டுக்கள் விளையாட்டுக் கடிகாரத்தைப் பயன்படுத்தி நேரத்தின் அடிப்படையின் கீழ் விளையாடப்படுகின்றன, இது நேரக் கட்டுப்பாடுகள் எனப்படுகிறது. ஒவ்வொரு ஆட்டக்காரரும் நேரக்கட்டுப்பாட்டுக்குள் அவரது நகர்வை நிறைவு செய்ய வேண்டும் அல்லது விளையாட்டில் தோல்வியுற நேரிடும். பலவகையான நேரக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன. சில நிகழ்வுகளில் ஆட்டக்காரர் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட நகர்வுகளை நகர்த்தியிருக்க வேண்டும். மற்றொரு நிகழ்வுகளில் ஒவ்வொரு ஆட்டக்காரரும் அவர்களது ஒவ்வொரு நகர்வுகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்று இருக்கும். மேலும் ஆட்டக்காரர் ஒவ்வொரு நகர்வை மேற்கொண்ட பிறகும் கூடுதலாக சிறிது நேரம் அவருக்கு அதிகரிக்கப்படலாம். அது ஒவ்வொரு நகர்வு நகர்த்தப்பட்ட பிறகும் சிறிது நேர அதிகரிப்பு சேர்க்கப்படுவதாக இருக்கலாம் அல்லது ஒவ்வொரு முறை போட்டியாளரின் நகர்வுக்குப் பிறகும் கடிகாரம் சிறிது நேரம் தாமதப்படுத்தப்படுவதாக இருக்கலாம்.
சதுரங்க விதிகளை வெளியிட்ட முதல் புத்தகமாக 1497 ஆம் ஆண்டுவாக்கில் வெளியிடப்பட்ட லூயிஸ் ராமிரெஸ் டெ லூசென்னாவின் (Luis Ramírez de Lucena) புத்தகம் அறியப்படுகிறது. இந்த புத்தகம் ராணி, மந்திரி மற்றும் சிப்பாய் ஆகிய காய்களின் நகர்வுகள் அதன் நவீன வடிவத்தை அடைந்த சிறிது காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டதாகும் . 16வது மற்றும் 17வது நூற்றாண்டுகளில், கேஸ்ட்லிங், சிப்பாய் பதவி உயர்வு, இக்கட்டு நிலை மற்றும் என் பஸ்ஸண்ட் போன்ற விதிமுறைகள் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்தன. இந்த மாற்றங்களில் சில 19 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தன . ருய் லோபச் டெ செகுரா (Ruy López de Segura) 1561 ஆம் ஆண்டு எழுதிய அவரது புத்தகமான லிப்ரோ டெலா இன்வென்சியன் லிபரல் ஒய் ஆர்டெ டெல் ஜூகோ டெல் ஆக்செட்ரெஸ் (Libro de la invencion liberal y arte del juego del axedrez) சதுரங்கத்தின் விதிகளைக் கொடுத்திருந்தார்
1500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இந்த சதுரங்க விளையாட்டு தோன்றியுள்ளது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இது போன்ற விளையாட்டு நடந்திருந்திருப்பதை அறிகிறோம். இந்த ஆச்சர்யமான விளையாட்டின் தாயகம் இந்தியாதான் என்பதில் நான் பெருமையாகக் கூறமுடியும். மகா கவிஞர் காலதாசர் இயற்றிய ரகுவம்சம் என்ற புராதான நூலில் இத்தகைய சித்திரம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மேற்கத்திய உலகில் சதுரங்க போட்டியின் புகழ் 12 மற்றும் 15 நூற்றாண்டிற்கிடையே இருப்பதை அறிகிறோம். கி.பி. 1200 மற்றும் 1400 ஆண்டுகளில் ஐரோப்பிய சமுதாயத்தில் இந்த விளையாட்டு மிகவும் புகழ்பெற்றுள்ளது. 17 ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டு இத்தாலியில் மிகவும் பிரபலமாகி வலுமையான வீரர்கள் உருவாகியுள்ளனர். 18 நூற்றாண்டில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனியில் இந்த விளையாட்டு புகழ்பெற்றுள்ளது. அப்போது இந்த விளையாட்டில் மிகவும் திறமையும், புகழும் வாய்ந்தவராக பிரெஞ்ச் வீரர் ஆன்ட்ரி பில்டோர் திகழ்ந்து 40 ஆண்டு காலத்திற்கு முன்னோடியாக தன்னுடைய திறமையை நிலைநாட்டி இருந்தார்.
சதுரங்கம் மனித இனத்தின் பிரபல விளையாட்டுகளில் ஒன்றாகும். இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. இது சில சமயம் ஒரு போர் விளையாட்டாகவும், “மூளை சார்ந்த போர்க்கலை”யாகவும் பார்க்கப்படுவதுண்டு. பல விதமான சதுரங்க விளையாட்டுகளும், அதனுடன் தொடர்புடைய சில விளையாட்டுகளும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன. சீனாவின் ஷியாங்கி, சப்பானின் ஷோகி, நேபாளத்தின் புத்தி சல் என்பன இவற்றுள் புகழ் வாய்ந்தவை.