Views: 111
வணக்கம்!! நாம் அனைவரும் ஆலயங்களுக்கு சென்று வருவோம், இன்று நம் முன்னோர்கள் ஆலய தரிசன முறைகள் மற்றும் விதிகள் என்ன என்பதை நான் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்”. ”ஆலயம் தொழுவது சாலவும் நன்றே” என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதியே கூறியவை. கடவுளை வழிபடும்போது, நமது மனம் தூய்மை அடைகின்றது. நம் மனதில் உறைந்திருக்கும் தீய எண்ணங்கள் மறைந்து, நல்லெண்ணம் வளர்கிறது. ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஆலய கோபுரத்தை கண்டதும் கை கூப்பி வணங்க வேண்டும். அப்படி செய்வதால் தெய்வத்தின் காலடியை தொட்டு கும்பிடுவதாக நம்பிக்கை.
கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் சூட்சுமத்தினையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.
நாம் பல நல்ல, தீய கதிர் வீச்சுகள் நிறைந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மூலகங்களில் சக்திமாற்றம் ஏற்படும் போது கதிர்வீச்சு தோன்றுகின்றது. இதனை நாம் கண்ணால் காண முடியாது. ஆனால் அதன் தாக்கங்களை எம்மால் உணரமுடியும். நல்ல கதிர்வீச்சு சக்திகளை வெளிப்படுத்தும் வகையிலேயே ஆலயங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
ஆகம விதிப்படி கோயில் அமைக்கப்பெற்று, அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது (12 வருடங்களுக்கு ஒருமுறை) கும்பாபிஷேகம் செய்யப்பெற்று வழிபாடு நடந்து கொண்டிருக்கும் கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும் அல்லது செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவீசுகின்றன. அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.
காலையில் கோபுர தரிசனம் – நோய் நீக்கும்
மதியம் கோபுரதரிசனம் – செல்வ வளம் பெருகும்
மாலையில் கோபுர தரிசனம் – பாவம் போக்கும்
இரவு கோபுர தரிசனம் – வீடு பேரு கிடைக்கும்
“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கும் காண முடியும்.
ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் இடப்பெற்றுள்ள தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன.
(நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்) ஆகியவற்றை கலசங்களினுள் வைத்துள்ளார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக வைத்தார்கள். காரணம் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
ஒரு இடத்தில் எது மிக உயரமாக உள்ளதோ அதுவே அந்த இடத்தின் இடி தாங்கி. அது தான் முதலில் மின்னலின் தாக்கத்தை “எர்த்” ஆக்கும். எனவே ஊரின் உயர்ந்த கட்டிடமாக திகழும் இக் கோபுரம் மின்னல் தாக்கத்தில் இருந்தும் ஊரை பாதுகாத்துக் கொள்கின்றது.
கர்ப்பக்கிரக கோபுரத்தின் (ஸ்தூபி) மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது. சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன.
இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.
அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகின்றது. அங்கு இறைவனை வணங்கி நிற்கும் நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போதும், மந்திரங்கள் செபிக்கப்பெறும்போதும் அந்த சக்தி மேலும் தூண்டப்பெறுகின்றது. கைகளை இணைத்து, மேலே உயர்த்தி வணங்கும்போது – கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது.
இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள், உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.
கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு கோமுகியுடன் கூடிய ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.
அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது.
பிறகு தல விநாயகரை வணங்கி உள்ளே செல்ல வேண்டும். கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வழிபட வேண்டும். இதைத் தொடர்ந்து துவார பாலகர்களை வழிபட்டு கருவறை முன்புள்ள விநாயகரை வணங்க வேண்டும்.
பிறகு கருவறையில் இறைவனை கண்ணார கண்டு, மனதில் இருத்தி வழிபட வேண்டும். அர்ச்சகர் தரும் திருநீறை கீழே சிந்தாமல் நெற்றியில் பூசுதல் வேண்டும். கருவறையை 3 தடவை வலம் வந்து வழிபடுதல் வேண்டும்.
சிவன் கோயிலாக இருந்தால், முதல் முறை வலம் வரும் போது அம்பாள் சன்னதி, உற்சவர், நடராஜரை வழிபட வேண்டும். இரண்டாம் தடவை வலம் வரும்போது, முருகன், நவக்கிரகம், பைரவர், அறுபத்து மூவரை வழிபட வேண்டும். மூன்றாம் முறை வலம் வரும்போது தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டீகேசுவரரை வழிபட வேண்டும். சண்டீகேசுவரரை வழிபாடு செய்ததும் ஆலய வழிபாடு முழுமை பெறுவதாக அர்த்தம். இதையடுத்து மீண்டும் கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி, சிறிது நேரம் வடக்கு முகமாக அமர்ந்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.
ஆலய தரிசன விதி
எந்த ஒரு ஆலயத்துக்கு செல்லும் முன்பும் குல தெய்வ வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும். முக்கிய பூஜைகளை நல்ல நேரம், திதி, ஹோரை பார்த்து செய்வது நல்லது. பொழுது போக்கை மனதில் வைத்துக் கொண்டு ஒரு போதும் ஆலயத்துக்கு செல்லாதீர்கள். ஆலயங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும் பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டுக்கு செல்லாதீர்கள். அசைவ உணவு சாப்பிட்டு விட்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது. கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக வலம் வரக்கூடாது. நிறை மாத கர்ப்பிணிப் பெண் தலையில் எண்ணெய் குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படி நடக்க வேண்டும். சட்டை அணிந்து கொண்டோ அல்லது போர்த்திக் கொண்டோ செல்லக்கூடாது. சட்டை அணியாமல் சென்றால், இறைவனின் ஈர்ப்பு அலைகளை நம் உடம்பு முழுமையாக பெற முடியும் மூலவருக்கு தீபாராதனை நடக்கும் போது கண்ணை மூடி வணங்காதீர்கள். இறைவனை கண் குளிர தரிசித்து வழிபடுங்கள். காலையில் விஷ்ணுவையும் மாலையில் சிவனையும் வழிபடுவது நல்லது. காலை நேரத்தில் கோவிலை சுற்றும் போது உடல் நலம் விருத்தியாகும். மாலை நேரத்தில் கோவிலை வலம் வருவதால் செய்த பாவங்கள் எல்லாம் தொலையும். இரவு நேரத்தில் சுற்றுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆலயத்தில் இருந்து வீட்டுக்கு புறப்படும் போது சற்று அமர்ந்து செல்ல வேண்டும். ஏனெனில் சிவாலயங்களில் 7 சிரஞ்சீவிகள் தங்கி இருந்து சிவதரிசனம் செய்பவர்களை அவர்கள் வீடு வரை பின்தொடர்ந்து வந்து மரியாதை செய்வதாக சொல்வார்கள்.
எனவே அவர்களை வணங்கி, நீங்கள் இருங்கள். நாங்கள் சென்று வருகிறோம் என்று விடைபெற வேண்டும். இவ்வாறு முறைப்படி ஆலய தரிசனம் செய்தால் முழுப்பயனையும் பெறமுடியும்.