X

வைகாசி விசாகம்

Views: 73

வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.
வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் “வைசாக’ மாதம் என்றிருந்து பின்னாளில் “வைகாசி’ என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை “வைகாசி விசாகம்’ என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. “வி’ என்றால் “பட்சி’ (மயில்), “சாகன்’ என்றால் “சஞ்சரிப்பவன்’ மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் “விசாகன்’ என்றும் வழங்குவர். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். விசாகனாம் முருகனைப் பணிந்து வினைகளைப் போக்குவோம்.
விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும். இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணையங்கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.

ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப் படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் (சித்தார்த்தன்) அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும், (திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.

முருகனின் பிறந்த நாள்: வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர். சிம்மாசலம் என்னும் ஊரில் குன்றின் மேல் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்றுதான் அப்பெருமானைக் காண இயலும். பிறகு சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே நாளன்றுதான். எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான் என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை. வைகாசி விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடைபெறும். இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம் புரிகிறார். நம்மாழ்வார் அவதரித்த நாள், வைகாசி விசாகம் என்று ஆழ்வார்திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

வசந்த காலம்: உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதாரம் செய்தது வைகாசி மாத அனுஷ நட்சத்திர நாளில்தான். நாயன்மார்களுள் கழற்சிங்கர், சோமாசி மாறர், திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர், முருகநாயனார், நமிநந்தியடிகள் ஆகியோர் அவதரித்ததும் வைகாசி மாதத்தில்தான். பெரிய புராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகளும் வைணவப் பெரியாரான நம்மாழ்வாரும் அவதரித்தது இந்த மாதத்தில் தான்.

திருத்தணியில் பல தீர்த்தங்கள் உள்ளன. இதில் குமார தீர்த்தமும் ஒன்று. இதில் வைகாசி விசாகத்தன்று நீராடி முருகப் பெருமானை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும்.

மேலும் பல தகவல்களுடன் உங்களை அடுத்தப்பதிவில் சந்த்திக்கிறன்

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.