X
    Categories: News

உலக குடும்ப நாள்

Views: 316

இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் “விரிசல்’ உருவாகிறது. ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சர்வதேச குடும்ப தினம் மே 15 அன்று அனுசரிக்க வேண்டும் என முடிவு செய்தது. குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை குடும்பங்களில் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டுள்ளது.சிட்டுக்குருவிக்கும் சிறு கூடு உண்டு. குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும். சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம். இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம். காலத்தின் கட்டாயமாய்… பொருளாதாரத் தேடலுக்காக உறவுகளை பிரிந்திருந்தாலும், அவ்வப்போது கூடி மகிழ்ந்து உறவைப் போற்றுவோம். அப்படி உறவுகளைப் போற்றும் சந்தோஷ குடும்பங்களின் அனுபவங்களை, பகிர்ந்து கொள்வோம்.

இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு தினம் கடைப் பிடிக்கப்படுகிறது என்பதைக் கூட வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பது வேதனையிலும் வேதனை. ஆம்.. இளைய தலைமுறையினரின் மெத்தனப்போக்கு, தான்தோன்றித் தனம், கட்டுப்பாடில்லா வாழ்க்கை முறை போன்றவை தற்போது அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. காதல், திருட்டு, வன்முறை போன்றவற்றால் பிஞ்சு மனம் நஞ்சாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கு பெற்றோரின் அலட்சியமே காரணம். மேலும் சீரழிந்து வரும் கலாசார மாறுபாடும் இது போன்ற சம்பவங்களுக்கு அடிக்கல்லாக அமைந்துவிடுகிறது. கணவன், மனைவி உறவில் விரிசல், மாமியார், மருமகளிடையே நல்லிணக்கம் இல்லாமை போன்றவற்றால் காலம் காலமாக கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமத்திலும், நகரத்திலும்கூட கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என நன்றாகவே இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இவை அனைத்துமே புறந்தள்ளப்பட்டு நேர்மாறாகி விட்டன.மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் மெல்ல மெல்ல நம்மையும் மாற்றிவிட்டது. இதனால்தான் கொலை, கொள்ளை, தீவிரவாதம் போன்ற கொடும் செயல்கள் நடந்துவருகின்றன. இதை உடனே தடுப்பதுடன், மனநல ஆலோசனை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கூட்டுக்குடும்ப வாழ்க்கையைப் பொருத்தவரை வீட்டில் மூத்தவர்கள் இருப்பதால் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன், கட்டுப்பாடும் நிறைந்திருக்கும். இதனால் உள்ளூர பயம் மேலோங்கும். ஆனால், இன்றோ பலரும் தன்னிச்சையாக வாழவும், முடிவுகளை மேற்கொள்ளவும் கற்றுக்கொண்டுவிட்டனர்.தாய், தந்தை கண்டிப்புடன் இருப்பதால் குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க முடிகிறது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் வேலைக்குச் செல்ல நேரிடும்போது குழந்தைகளைப் பொறுப்பாக யாரும் கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

அத்துடன் அவர்கள் என்ன படிக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள் போன்றவற்றைக் கவனிக்கக்கூட நேரமிருப்பதில்லை. எனவே பலர் கணினி, அலைபேசி, இணையதளம், திரைப்படம், நண்பர்களுடன் கேளிக்கை, விருந்து என்று திரியநேரிடுகிறது. இதே கூட்டுக் குடும்ப வாழ்க்கையாக இருந்தால் அரவணைப்பும், கண்டிப்பும் கிட்டும்.இன்றுள்ள இளம் தலைமுறையினரில் 90 சதவிகிதம் பேருக்கு தங்களது பெற்றோரைத் தவிர, வேறு உறவு முறைகளைத் தெரியவாய்ப்பே இல்லை.

உறவினர்கள் வீட்டு விசேஷங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதற்கு இவர்களுக்கு நேரமோ, வாய்ப்போ கிடைப்பதில்லை.
பெரும்பாலான நேரங்களை தனிமையிலும், பொழுதுபோக்கு அம்சங்களிலுமே கழிக்க நேரிடுகிறது. இதனால் மன அழுத்தம், வெறுப்பு, நிம்மதியின்மை போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. தங்களுடைய குறைகளையோ, நிறைகளையோ மனம் விட்டு யாரிடமும் பேச முடிவதில்லை. குறைந்தபட்சம் தான் செய்வது சரியா, தவறா என்று முடிவெடுக்கக்கூடத் தெரிவதில்லை.

இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. தவறான வழிகளை நாட நேரிடுகிறது.தனிக்குடித்தனம் என்றால் யாரும் நம்மைத் தட்டிக் கேட்க மாட்டார்கள், சுதந்திரமாக இருக்கலாம் என்ற பரவலான கருத்து நிலவுகிறது. இது முழுக்க முழுக்க தவறு. எல்லாமே நமது செயல்களில்தான் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் கூட்டு வாழ்க்கை ஏன் தேவை என சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதில் உள்ள நிறைகளை உணர முடியும்.
இதைவிட மற்றொரு அழுத்தமான காரணத்தை மனதில் கொண்டால் கூட்டுக் குடும்பவாழ்க்கை முறை அவசியம் என்ற எண்ணம் ஏற்படும். நாளுக்குநாள் அதிகரித்துவரும் விலைவாசியைக் கணக்கில்கொண்டு பார்க்கும்போது, தனிக்குடித்தனம் இருப்பவர்கள் கூட்டுக் குடும்பத்தில் சேரும்போது அவர்களுக்கு பலவகைகளிலும் சிக்கனம் உண்டாகும்.

அதிலும் முன்னரே குறிப்பிட்ட இன்டர்நெட் வாழ்வியல் முறையில், சமூக வலைதளங்களில் மட்டும் தான் உறவுகள் கூட்டாக இருக்கின்றன. அதாவது ஃபேஸ் புக், வாட்ஸ்-அப்களில் குரூப் உருவாக்கி அதில் ஓர் குடும்பமாக வாழ்கின்றனரே தவிர, கூட்டு குடும்பமாக வாழ்வது என்பது அதிசயமாக இருக்கின்றது. அதிலும் ஃபிளாட்டுகள் வந்தவுடன் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்துவிட்டது கூட்டு குடும்ப வாழ்வியல் முறை. தாத்தா, பாட்டி, பெரியப்பா, மாமா, அத்தை, பேரக்குழந்தைகள், என்ற வாழ்வியல் முறை மிகவும் இன்பமானது என்பதை மறந்தே போ விட்டோம்.முன்னெக்காம் கோடை விடுமுறைகளில் மட்டுமே ஒன்றாக இருந்தவர்கள் சிலர் இருந்தன்றனர். அதையும் கூட தற்போதைய ஸ்மார்ட் ஃபோன்கள் கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து வருகிறது. ஷாப்பிங் மால், பார்ட்டி கிளப், தியேட்டர், பார்க், பீச் இதையெல்லாம் தாண்டி நிறைய சந்தோசங்களும், நன்மைகளும் கொண்டக் குடும்ப வாழ்க்கையை நினைவூட்டும் தினமின்று மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.